இலங்கையின் கிழக்கே தமிழர்கள் அதிகம் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளன.
வெள்ளியன்று நள்ளிரவில் குருக்கள்மடம் கிருஷணன் கோவில் மீதும், வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் கோயில் ஆகிய இரு இந்துக் கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்த நவக்கிரகங்கள் உட்பட 13 விக்கிரகங்களை உடைத்து வீதியில் வீசிச் சென்றுள்ளனர். ஆலய நிர்வாகத்தினர் இது சம்பந்தமாக காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர். போலீசார் மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் தேடிய போதிலும் யாரும் பிடிபடவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் பாதிக்கப்பட்ட கோயில்களை நேரில் சென்று பார்த்தனர்.
இரு கோயில்கள் மீதான தாக்குதலும் சிங்கள இனவாதிகளின் செயலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பௌத்த மதத்தை இலங்கையின் மதமாகக் கருதும் சிங்களர்கள், இந்து மதம் தமிழர்களின் மதம் என்று கருதி தமிழர்களைப் போலவே இந்து மதத்தையும் வெறுப்புடன் பார்க்கின்றனர். போலீசார் கிருஷ்ணன் கோவில் விவகாரம் இரு தரப்பினரிடையே நடந்த மோதலால் நிகழ்ந்தது என்று கூறினாலும் அது உண்மையில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழ் மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம், சிறிசேனா அரசிடம் கோயில்களைச் சிதைத்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்..
மாட்டுக் கறி சாப்பிடுவது பற்றி இங்கே இந்தியாவில் பொங்கிப் பொங்கி சவுண்ட் விடும் ஆர்.எஸ்.எஸ். அம்பிகள் இது பற்றி ஏதாவது வாய்திறப்பார்களா ?