நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலையிலிருந்தே மாநிலத் தேர்தல் ரேஞ்சுக்கு டி.விக்களில் லைவ்வாக காட்டப்பட்டு வருகிறது. அரசு செய்த தேர்தல் ஏற்பாடுகளை இரு அணியினருமே பாராட்டினார்கள. காவல் துறை பாதுகாப்பு, நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக் குழு என்று தேர்தல் பக்காவாக நடந்துகொண்டிருந்தது.
இன்று காலை நடிகர் மைக் மோகன் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஓட்டுப் போட வாக்குச் சாவடிக்கு வந்தார். ஆனால் அவர் ஓட்டை வேறு யாரோ ஏற்கனவே போட்டுவிட்டதாகத் தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர் வாக்குச் சாவடிக்கு வந்து ஓட்டுப் போடாமலே திரும்பினார்.
அடையாள அட்டை கூட இல்லாமல் எப்படி அவர் ஓட்டைப் போட்டார்கள். மைக் மோகனைக் கூட இவர்தான் என்று அடையாளம் தெரியாதா என்ன ? என்னமோ போங்க.
இன்னொரு காமெடி என்னவென்றால் எம்.ஜி.ஆருடனேயே நடித்த பழம்பெரும் நடிகை சச்சு சந்தா கட்டவில்லை என்று அவரது உறுப்பினர் தகுதியை செல்லாததாக்கி விட்டார்கள். இத்தனைக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் 5000 ரூபாய் கட்டி 2017 வரை அவர் உறுப்பினர் சந்தா கட்டியிருப்பதாக சச்சு கூறினார். ஆனால் அவர் ஓட்டுப் போட அனுமதிக்கப்படவில்லை.