நமது தமிழ்த் திரையுலகத் தாரகை நயன்தாரா சாகித்ய அகாதமி விருது வாங்கினாரா ? அதை திரும்பிக் கொடுக்கிறாரா ? என்று மேலும் படிக்காதீர்கள். இவர் பிரபல எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் உறவினருமான நயன்தாரா சேகல். நயன்தாராவுக்கு 1986-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
“இந்தியப் பண்பாட்டு பன்முகத் தன்மையை தற்போதைய அரசு பாதுகாக்கவில்லை” என்று கூறி, மோடிஅரசின் இந்துத்துவா போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியன் கல்ச்சரல் ஃபோரம் என்ற இணையதளத்தில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
“இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி தன்னுடைய சமீபத்திய சொற்பொழிவில் அனைத்து குடிமகன்களுக்கும் பேச்சு, சிந்தனைை, கருத்துரிமைகள், நம்பிக்கை, வழிபாடு குறித்த உரிமைகள் இருப்பதை வலியுறுத்தினார்.
பணிய மறுப்பது அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது, முரண்படுவதற்கான உரிமை என்பது நமது அரசியல் சாசன உத்தரவாதத்தின் உள்ளார்ந்த, தவிர்க்க முடியாத அம்சமாகும். அவர் ஏன் இதனை வலியுறுத்தினார் என்றால், இந்தியாவின் பண்பாட்டு பன்முகத் தன்மை பல்வேறு தரப்புகளிலிருந்து சமீப காலங்களில் தாக்குதலுக்கு உட்பட்டு வருகிறது.
மூட நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்தும் பகுத்தறிவுவாதிகள், இந்து மதத்தின் அசிங்கமான மற்றும் அபாயகரமான திரிபுகளாக அறியப்படும் இந்துத்துவாவை அறிவார்த்த புலத்திலும் கலை / இலக்கிய புலத்திலும் கேள்விக்குட்படுத்துபவர்கள், உணவுப்பழக்க வழக்க முறைகள் மற்றும் வாழ்க்கை முறை என்று எதிலும் கேள்வி கேட்பவர்கள் மற்றும் மாற்று பண்பாடுகள் கொண்டிருப்பவர்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர், அச்சு்றுத்தப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர்.
சாகித்ய அகாடமி விருது வென்ற கன்னட எழுத்தாளர் கல்புர்கி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேந்திர தாபோல்கர், கோவிந்த் பன்சாரே, ஆகிய மூடநம்பிக்கை எதிர்ப்பு பகுத்தறிவுவாதிகள் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், சில எதிர்ப்பாளர்களுக்கு அடுத்து இவர்கள்தான் என்ற ரீதியில் கொலை மிரட்டல் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சமீபத்தில் பிசாரா கிராமத்தில் மாட்டிறைச்சி சமைத்ததான சந்தேகத்தின் பேரில் மொகமது இக்லாக் வீட்டிலிருந்து வெளியே இழுத்துவரப்பட்டு மிகக் கொடூரமாக கல்லால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.
இந்த அனைத்து சம்பவங்களிலும் நீதி வழங்கப்படவில்லை. இந்த பயங்கரத்தின் ஆட்சி பற்றி பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார். அதாவது, அவரது கருத்தியலை ஆதரிக்கும் தீமை செய்வோரை அவர் அன்னியப்படுத்த விரும்பவில்லை என்று நாம் அனுமானிக்கவே அவரது மவுனம் வழிவகுக்கிறது.
சாகித்ய அகாடமியும் மவுனம் காக்கிறது என்பதும் வருத்தமளிக்கிறது. அகாடமிகள் எதற்காக இருக்கின்றன? படைப்புபூர்வமான கற்பனை வளத்தையும், கலை, இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றின் நுட்பமான விஷயங்களை ஊக்குவிப்பதில் பாதுகாவலர்களாக செயல்படுவதுதான் அகாடமிகளின் பணி.
கல்புர்கி கொலையை எதிர்த்து இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ் தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்து விட்டார். அதே போல் கன்னடா சாகித்ய பரிஷத் விருதுகளை 6 எழுத்தாளர்கள் திரும்ப கொடுத்து விட்டனர்.
எனவே கொலை செய்யப்பட்ட அனைத்து இந்தியர்கள் நினைவாகவும், எதிர்ப்பதற்கான உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் ஆதரவாளர்களுக்காகவும், அச்சத்துடனும், நிச்சயமின்மையுடனும் வாழும் அனைத்து எதிர்ப்பாளர்களுக்காகவும் நான் எனது சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுக்கிறேன்.” இவ்வாறு நயன்தாரா சேகல் கூறியுள்ளார்.