சிம்பு, வரலட்சுமி ஜோடி சேர்ந்த `போடா போடி` என்கிற மரண மொக்கைப் படம் கொடுத்த விக்னேஷ் சிவனின் இரண்டாவது படம். நயனுடன் இந்த சிவன் எடுத்த ஒரு செல்ஃபிக்குப் பின்னர் தாராவின் மற்ற எல்லாப்படங்களையும் விட அதிக ஹிட்டடித்தது அந்த செல்ஃபிதான். காரணம் அந்த செல்ஃபியில் ஒரு மிஸ்டிரி கலந்த கெமிஸ்டிரி இருந்தது.
`நானும் ரவுடிதான்` பார்த்தபோதுதான் அந்த மிஸ்டரியின் ஹிஸ்டரி புரிந்தது. தொடர்ந்து கன்ஃபியூஸ் ஆகவேண்டாம். எனவே கதைக்குப் போவோம்.
அம்மி ராதிகா மகன் விஜய் சேதுபதியை போலீஸ் ஆக்க ஆசைப்பட, அவரோ ரவுடிதான் போலீஸை விட பெஸ்ட் என்ற தியரியோடு, நண்பர்களோடு சேர்ந்து குட்டி குட்டியாய் ரவுடித்தனம் செய்கிறார்.
இந்த சமயத்தில் நயன் தாராவை சந்திக்க, மற்ற முன்னோடிகளைப் போல் பொத்தென்று காதலில் விழுகிறார். காதல் கைகூடி, இதழோடு இதழ் பதிக்கத்துடிக்கும் ஒரு க்ளோசப் தருணத்தில் நயன் தாரா ஒரு கண்டிசன் போடுகிறார். அதாகப்பட்டது தனது தந்தையைக்கொன்ற ஒரிஜினல் ரவுடி பார்த்திபனைக் கொல்ல உதவ வேண்டும் என்கிறார். காமெடி ரவுடி நிஜ ரவுடியைக் கொன்றாரா, நயனின் இதழில் இடம் பிடித்தாராவை நோக்கி செம சூடாகப் பயணமாகிறது கதை.
அட்டகாசமான நடிப்புதான் என்றாலும் விஜய் சேதுபதியை ஒரு ஓரமாய் வைத்துவிட்டு, அவசரமாய் அவசியமாய் நயன்தாராவுக்கு வருவோம்.
நயன் தாராவை எப்படி இத்தனை பேர் காதலிக்கிறார்கள் என்று சமயங்களில் குழம்பித் தவித்ததுண்டு. இனி குழப்பத்தை மூட்டி கட்டிவிட்டு அவரது பட்டியலில் இடம் பிடிப்பது எப்படி என்று திட்டமிடுவதே முழுநேரப் பணி. அவரது நடிப்பில் அப்படி ஒரு வசியம் இருக்கிறது. அவரது மற்ற படங்களை விட அந்த வசியம் இன்னும் விஷேசமாக இருப்பதற்கு விக்னேஷ் சிவனுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரிதான் காரணமெனில் வாழ்க அந்த கெமிஸ்ட்ரி.
மன்சூர் அலிகானைப் பார்த்து `யோவ் நீயெல்லாம் பழைய வில்லன் நான் தான் புதுசு` என்று ரவுசு காட்டும் பார்த்திபன் செம சாய்ஸ்.
அனிருத் மெலடிகளெல்லாம் போட்டு லைட்டாய் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ். அடுத்த நயன் படத்துக்கெல்லாம் அட்வான்ஸ் தேடி வந்துக்கிட்டிருக்கு. வாங்கிப்போடுங்க பாஸ்.
க்ளைமாக்ஸுக்கு அரைமணி நேரம் முன்பு வரை `ஏ` கிளாஸில் பயணிக்கும் கதை, காமெடியை அதிகப்படுத்த விரும்பியதாலோ என்னவோ [சுந்தர்] `சி` தரத்துக்கு இறங்கிவிடுகிறது.
மற்றபடி `நானும் ரவுடிதான்` தம்பியை நம்பி வண்டியில ஏத்தலாம்.