என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..?’ இந்த ஒற்றை வாக்கியத்தை வைத்து நடிகையும் இயக்குநருமான லெட்சுமி ராமகிருஷ்ணனையும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியையும் மரண கலாய் கலாய்த்தனர் விஜய் டிவி ‘அது இது எது’ குழுவினர்.
அதன்பிறகு அந்த நிகழ்ச்சி பலரால் இணையத்தில் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு எங்கும் எதிலும் சர்வ சாதாரணமாக இந்த வாக்கியம் பரவத்தொடங்கியது. அப்போது இதுகுறித்து லெட்சுமி ராமகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டபோது, அவர் அதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு லூஸில் விட்டார்.
இந்நிலையில் அடுத்த வாரம் வரும் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் மீண்டும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை கலாய்த்திருக்கிறது. அதற்கான புரமோஷன்கள் கடந்த இரு தினங்களாக விஜய் டிவியில் அடிக்கடி ஒளிப்பரப்பாகிவருகிறது. இதை விஜய் டிவி தன் ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக வேறு சொல்லியிருந்தது.
இதைக் கண்டு டென்ஷனான லெட்சுமி ராமகிருஷ்ணன் தன் ட்விட்டர் பக்கத்தில், “விஜய் டிவி.. இந்த முட்டாள் தனமான வேலையை நிறுத்தப்போகிறீர்களா இல்லையா..? உங்கள் ‘அது இது எது’ நகைச்சுவை குழுவினருக்கு சரக்கு தீர்ந்துவிட்டதையே இது காட்டுகிறது.. வேறு ஏதாவது புதிதாக செய்யப்பாருங்கள்’ எனக் கடுப்பாகக் கேட்டிருந்தார்.
மேலும் அவர், “ஏற்கெனவே ஒருமுறை என்னை கிண்டலடித்தார்கள். நான் அதை வெறும் நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டு அவர்களை பாராட்டியிருந்தேன். ஆனால், அவர்கள் இதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். இந்தமுறை நான் அதை விடப்போவதில்லை” எனவும் சொல்லியிருந்தார்.
அதற்கு ரசிகர் ஒருவர், ‘அப்படியென்றால் விஜய் டிவி மீது வழக்கு போடுவீர்களா..?’ எனக் கேட்டதற்கு “அந்த புரோமோக்களை பார்த்ததற்கான என்னுடைய உடனடி ரியாக்ஷன்தான் இந்த ட்விட்டர் பதிவு. நாளை (இன்று) நிச்சயம் வேறு செய்வேன்” என்றும் அவர் நேற்று குறிப்பிட்டிருந்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது லெட்சுமி ராமகிருஷ்ணன் அனேகமாக விஜய் டிவி மீது மானநஷ்ட வழக்குத் தொடருவார் எனத் தெரிகிறது.
ஆக.. என்ன செய்வாரோ என பதட்டத்துடன் காத்திருக்கிறது விஜய் டிவி.