விருதை எந்த அரசும் எனக்கு கொடுக்கவில்லை. அதை ஒருபோதும் திருப்பி கொடுக்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டமாகக் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை தனது 61-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். கமல் நற்பணி இயக்கத்தின் சார்பில் பிறந்தநாள் விழா சென்னை அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. பிறந்த நாளையொட்டி ஏழை எளியவர்களுக்கு நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கமலஹாசன் பேசியது:
“மடிந்துபோவதற்குள் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு போக வேண்டும் என்று நினைப்பவன் நான். இதுவரை நான் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கேதான் எனது மரணமும் சொர்க்கமும் இருக்கிறது, அந்த இரண்டையும் அனுபவிக்க வேண்டும். அதை அனுபவித்து விட்டுதான் போவேன். நான் ஒரு பகுத்தறிவாளன். நாளைக்கே ஒரு சாமியார் அதீத சக்தியோடு வந்து நின்றால் அவரை வரவேற்பேன், ஆனால், கையெடுத்து கும்பிட மாட்டேன். அதேசமயம் கேள்வி கேட்பேன். சுனாமி வந்தபோது எங்கே சென்றீர்கள், ஏழ்மை வந்தபோது எங்கே சென்றீர்கள் என்று கேட்பேன்.
உங்களுக்கு மாட்டிறைச்சியைச் சாப்பிட பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள். ஒரு காலத்தில் நானும் மாட்டுகறி சாப்பிட்டிருக்கிறேன். ஆனால், இப்போது சாப்பிடுவது இல்லை. இன்னும் 30 ஆண்டுகளுக்கு கழித்து பூச்சிகளை உண்ணும் நிலை வரலாம். சகிப்புத்தன்மை தொடர்பாக கலைஞர்கள் விருதை திருப்பி கொடுப்பது தவறு என்று நான் சொன்னதை பலரும் விமர்சனம் செய்கிறார்கள். விருதை திருப்பி கொடுப்பதால் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? இந்த விருதை எனக்கு எந்த அரசும் கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் பார்த்து கொடுத்தது. அப்படி கொடுக்கப்பட்ட விருது எனக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம். அதை ஒருபோதும் திருப்பி கொடுக்க மாட்டேன்.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உ.பி.யில் முதியவர் கொல்லப்பட்டது, கன்னட எழுத்தாளர் கர்புர்கி கொலை ஆகியவற்றைக் காரணம் காட்டி நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக எழுத்தாளர்கள், படைப்பாளிகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் மத்திய அரசு கொடுத்த விருதுகளை திருப்பி அளித்து வருகிறார்கள்.
இப்போதும் கூட சம்பந்தமே இல்லாமல் நான் பகுத்தறிவாளன் என்று தான் பேசுகிறாரேயொழிய நாட்டில் நடந்து வரும் சகிப்புத்தன்மையற்ற செயல்கள் பற்றி கமல் வாய் திறக்கவில்லை. என்னை மோடி கூப்பிடுறார், தாக்கரே கூப்பிடுறார் அதெல்லாம் அவங்க சகிப்புத் தன்மை என்கிறார். மாட்டுக்கறியை நீங்க பிடிச்சா சாப்பிடுங்க. பிடிக்காட்டி சாப்பிடாதீங்க என்கிறார். மாட்டுக்கறி சம்பந்தமாக பி.ஜே.பி பரிவாரங்கள் செய்யும் அரசியலைப் பற்றிப் பேச தயங்குகிறார். என்னத்தைச் சொல்ல ? மீண்டும் தெளிவா குழப்புகிறார் மனுஷன்.