திரைப்படங்களுக்கு தமிழக அரசு வழங்கும் வரிவிலக்கின் பலன் மக்களுக்கே போய்ச் சேர வேண்டும் என்று கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு வரிவிலக்கு அளிக்கப்பட்ட முதல் படம் வேதாளம்.
தீபாவளி அன்று வேதாளம் படம் வெளிவரும்போது நீதிமன்ற உத்தரவுப்படி வரி விலக்கு போக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பொதுமக்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு வழக்கம்போலவே வரிவிலக்கு தொகையையும் சேர்த்தே சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள தியேட்டர்களில் 120 ரூபாய் வசூலிக்கப்பட்டது. வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதிகாரபூர்வமாக 120 ரூபாய் கட்டணம் வசூலித்தது மட்டுமல்ல, சில தியேட்டர்களில் சிறப்புக்காட்சிகள் என்ற பெயரில் 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை தியேட்டர் கவுண்ட்டர்களிலேயே விற்கப்பட்டன. இவை இல்லாமல் பிளாக் டிக்கெட்டுக்கள் வேறு.
எனவே இதுவரை எந்த தமிழ்ப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு ‘வேதாளம்’ படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் முதல் நாள் அதிக தொகையை, அதாவது 13 கோடியை வசூலித்து இதுவரை நம்பர் 1-ஆக இருந்த ரஜினி நடித்த ‘லிங்கா’படத்தின் வசூலை முறியடித்து, முதல் நாளிலேயே வேதாளம் படம் 15 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்நாளில் தமிழ்நாட்டில் மட்டும் – 15 கோடி வசூல் செய்த வேதாளம் படம், இரண்டாவது நாளில் 9 கோடி வசூல் செய்துள்ளதாம். வரும் ஞாயிற்றுக்கிழமை வரையிலான ஆறு நாட்களில் சுமார் 50 கோடியை வசூல் செய்யும் என கணிக்கின்றனர் தியேட்டர்காரர்களும் திரையுலகப் பண்டிதர்களும்.
திரைப்படத்துக்கான கேளிக்கை வரி சென்னை போன்ற பெருநகரங்களில் 30 சதவிகிதமாகவும், இரண்டாம்நிலை நகரங்களில் 20 சதவிகிதமாகவும், அதற்கடுத்தநிலையில் உள்ள ஊர்களில் 10 சதவிகிதமாகவும் உள்ளது.
சராசரியாக 25 சதவிகிதம் என்று கணக்குப்போட்டால், வேதாளம் படம் ஆறு நாட்களில் வசூல் செய்யும் 50 கோடி ரூபாய்க்கு கேளிக்கை வரி மட்டுமே 12.5 கோடி.
இந்த 12.5 கோடி ரூபாய் தமிழ்க அரசின் சட்டப்படியும், நீதிமன்ற உத்தரவுப்படியும் மக்களுக்கே போய்ச் சேர வேண்டும். ஆனால் இந்த 12.5 கோடி ரூபாயை தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் பங்கு போட்டுக் கொண்டுள்ளனர்.
கேளிக்கை வரி என்ற பெயரில் மக்களிடம் வசூலிக்கப்படும் பணத்தை இப்படி கொள்ளையடிக்க சம்மந்தப்பட்ட துறையினரிடம் முன்கூட்டியே கமிஷன் கொடுத்து விடுகின்றனர் தயாரிப்பாளர்கள். எனவே அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்த பிறகும் வேதாளம் படத்திற்கு கேளிக்கை வரியை மக்களிடமிருந்து வசூல் செய்து வருகின்றனர்.
ஏன்?
வேதாளம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியது ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனம். இந்த நிறுவனம் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கு சொந்தமானது. சரி..சரி.. சங்கத்தை கலைங்கப்பா … யாராவது வந்து நம்மளை சாத்து சாத்துன்னு சாத்திடப் போறான்.