என் தந்தையார் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அப்போது அவர் ஒரு பேருந்து நிறுவனத்தில் மேலாளராக இருந்தமையால் அந்தப் பேருந்தின் ஓட்டுநரும் நடந்துநரும் அவர்க்கு நல்ல நண்பர்கள். பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்தை நிறுத்தியபின்பும் அவர் உறங்கியவர்போல் இருக்கவே, எழுப்பிப் பார்த்திருக்கிறார்கள். உடல் சரிந்துவிட்டது.

விரைந்து அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று கூறிவிட்டார்கள். அப்போது எனக்கு இருபத்திரண்டு வயது. மூத்தமகனான நான் குடும்பச் சுமையை ஏற்றுக் கொஞ்சம் தலையெடுத்திருந்தேன். இப்போது குடியிருக்கும் இந்த வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தேன்.

புதுவீட்டுக்குத் தளக்கற்கள் பதித்துக்கொண்டிருந்தபோது என் தந்தையார் இறந்த செய்தி வந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. செய்தி சொன்ன நண்பனைப் பிடித்து உலுக்கினேன். ஆனால் அழுகை வரவில்லை. வாழ்வி்ல் கொஞ்சம் பச்சையாய்த் தளிர்விட்டு முன்னேற்றப் படிகளில் முதலடி எடுத்து வைக்கையில் ஒரு கால் வெட்டப்பட்டதைப்போல் உணர்ந்தேன்.

அரசு மருத்துவமனைக்கு ஓடினோம். நாங்கள் சென்றபோது உடலைப் பிணவறையில் வைத்துப் பூட்டிவிட்டார்கள். பிணக்காப்பாளரை எங்கெங்கோ சென்று தேடி நள்ளிரவில் பிடித்தோம். அந்நேரத்தில் அவரை அழைத்து வந்து உடலைக் காட்டச்சொல்லிப் பார்த்தோம். உடலைப் பார்த்ததும் என் தாயார் உள்பட உடன்வந்தோர் அனைவரும் அழுது கதறினர். எனக்கு ஏனோ தெரியவில்லை, ஒரு பொட்டுக் கண்ணீர்கூட வரவில்லை.

மருத்துவமனையில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. மறுநாள் காலை, சவக்கூறாய்வு முடித்து உடலை எடுத்துவந்தோம். அவரின் மூதாதைகள் அனைவரும் புதைக்கப்பட்ட இடுகாட்டில் புதைத்தோம். அந்த இரண்டுநாளும் என்னைப் பிடித்தபடி தோளில்சாய்ந்தபடி கட்டியணைத்தபடி யார்யாரோ அழுகின்றார்கள். எனக்கு அழுகையே வரவில்லை. மனத்தில் இறுக்கம் கூடிக்கொண்டே போனதேயன்றி கண்ணீர் துளிர்க்கவில்லை. இடைப்பட்ட சில நாள்கள் இழவுகேட்க வந்தோரின் அழுகைச் சத்தமும் கண்ணீருமாகக் கழிந்தன.

பிறகு ஈமக்காரிய நாள் வந்தது. சடங்குப் பொருள்களை வாங்கப் போயிருந்தோம். பத்திருபது குடும்பப் பெண்களும் ஐந்தாறு ஆடவர்களுமாக சடங்குப்பொருள்களை வாங்கி முடித்து, பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்தில் ஒரு தேநீர்க் கடையில் நல்ல ஒலிப்பில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. நான் பேருந்து நிலையக் கடைவரிசைத் தூணொன்றில் சாய்ந்துகொண்டேன்.

அந்தத் தேநீர்க் கடையிலிருந்து ஒலித்த ஒரு பாடல், என்னையே அறியாமல் என் உயிருக்குள் ஊடுருவியது. அதுவரை பிடிக்காதிருந்த அந்தக் குரல் அப்போது என்னை என்னவோ செய்தது. இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல். பாடல் என்மீது விழுந்து திகுதிகு என்று பற்றி எரிகிறது.

இதுவரை அழாமல் இருந்துவிட்டேன். தந்தை இறப்பில் மன உறுதி குன்றாமல் இருந்தவன் என்று என்னைப்பற்றி உறவுகள் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அந்தப் பாடல் எனக்குள் எதையோ உடைத்தது. பாடலின் பல்லவி முடியும்வரை என்னை எப்படி எப்படியோ உதட்டைக் கடித்து கண்களை உருட்டி கட்டுப்படுத்திக்கொண்டேன். அதற்குமேல் முடியவில்லை.

முதல் சரணம் தொடங்கியது. ‘ஆத்மராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே… உயிரின் ஜீவநாடியே நாதம் தாளம் ஆனதே… உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே…’ அவ்வளவுதான். ஓர் இளைஞனால் எத்துணை பரிதாபமான அகவலோசையை எழுப்பமுடியுமோ அந்த ஒலியை எழுப்பியபடி ஓங்கிக் குரலெடுத்து அழத் தொடங்கினேன். நான் அழுவதைப் புதிதாய்ப் பார்த்த பெண்கள், இழவு வீட்டுக் கிராமத்துப் பெண்கள்… கேட்கவா வேண்டும் ! அந்த இருபதுபேரும் ‘என்ன நினைச்சான்னே தெரியலயே…’ என்று என்னைச் சூழ்ந்துகொண்டு ஓவென்று அழத்தொடங்கினார்கள்.

நான் அழுகை மீறிச் சரிந்து உட்கார்ந்துவிட்டேன். அந்தப் பாடல் போய்க்கொண்டே இருக்கிறது. நான் முழுமையாக, என் வாழ்வின் பேரழுகையை அங்கு அழுது தீர்த்தேன். என்னவோ ஏதோ என்று பேருந்து நிலையத்தில் எங்களைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிவிட்டது. பாடல் முடிந்தது. எனக்குச் சோடா வாங்கித் தரப்பட்டது. தேற்றி அழைத்துக்கொண்டு வந்தார்கள்.

அந்த இழவில் அந்த அழுகையை நான் அழுதிருக்காவிட்டால் அந்த மன அழுத்தம் என்னை எப்படி வேண்டுமானாலும் திரித்துக் குதறியிருக்கும். உள்மையத்தின் ஏதோ ஒன்றைச் சுண்டி அதை வெளியே எடுத்துப்போட்டுக் குணமாக்கும் ஔஷதம் அந்தப் பாடல் வடிவில் என்னை வந்தடைந்தது. அது அறிவுக்கும் அப்பாற்பட்ட ஒன்று என்பதைத் தெரிந்துகொண்டேன். அந்தப் பாடல் வழியே எனக்குள் நிகழ்ந்ததை விளக்க இயலாது. இன்றுவரை அந்தப் பாடலை எங்குக் கேட்டாலும் கொஞ்சம் கண் ததும்புகிறது. அதுவரை எனக்குப் பிடிக்காதிருந்த இளையராஜா அதன்பின் என் உயிரானார். அவர் என் தந்தைக்கும் மேலானவர் என்றால் மிகையில்லை. ராஜா வாழ்க !

முகநூலில் கவிஞர் மகுடேசுவரன்

Related Images: