மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தனி ஒருவன்’. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்த இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. கார்ப்பரேட்டுகளின் நடமாடும் வடிவாக அசத்தியிருந்தார் அரவிந்த்சாமி.
தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக்காக இருக்கிறது. ‘தனி ஒருவன்’ தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்க, சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.
‘தனி ஒருவன்’ படத்தின் சித்தார்த் அபிமன்யு பாத்திரம் குறித்து மாதவனிடம் கேட்டதற்கு, “என்னால் அது நிச்சயமாக முடியாது. அது எனக்கு சாத்தியமே இல்லை” என்று கூறி மறுத்துவிட்டாராம் மாதவன். தெலுங்கில் அரவிந்த்சாமியே சித்தார்த் அபிமன்யு பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தமிழில் கூட அரவிந்த்சாமிக்கு முன்னர் அந்த வேடத்தில் நடிக்க மாதவனிடம் தான் முதலில் மோகன்ராஜா பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அரவிந்த்சாமியின் அட்டகாசமான வில்லன் நடிப்பு சமூகத்தில் பணம் உள்ளவர்களால் எதையும் எப்படியும் திரித்து நடக்க வைக்க முடியும் என்பதை பயம் கலந்து உணரவைக்கும் படி இருந்தது.