புதுப் புது பரிணாமப் பரிமாணங்களில் உருக் கொண்டு கருக் கொண்ட கதைகள், வியப்பூட்டும் படங்கள்… இவற்றின் ஆலவட்டம் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது .
ஆனால் குழந்தைகளுக்கான படங்கள் என்பதை மாசு மருவில்லாமல் புரிந்து கொண்டு அவர்களுக்காகவும் அவர்கள் வழியே குடும்பத்தோடு படம் பார்க்க வரும் மக்களுக்காகவும் படம் எடுக்கும் படைப்பாளிகள், மிகக் குறைவாகவும் சொல்லப் போனால் அரிதாகவுமே இருக்கிறார்கள்.
அந்த வகையில் குடும்பத்தோடு வந்து பார்த்து, பொங்கி சிரித்து பூரித்து ரசித்து மகிழும் படமாக வருகிறது சங்கு சக்கரம். படத்தை இயக்கி இருப்பாவர் மாரீசன் .
லியோ விஷன்ஸ் சார்பில் வி எஸ் ராஜ்குமாரும் சினிமா வாலா பிக்சர்ஸ் சார்பில் கே சதீஷும் தயாரிக்கும் படம் இது .
பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்பது போல , நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் , இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற நகைச்சுவையும் கிண்டல் கேலியும் நிறைந்த படங்களை தயாரித்தவர்கள் இவர்கள்தான் என்று சொன்னாலே , இந்த சங்கு சக்கரம் படமும் எப்படி இருக்கும் என்பதை உணர முடியும் அல்லவா?
ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் , கீதா , பசங்க படப் புகழ் நிஷேஷ் ஆகியோருடன் எட்டு சிறுவர் சிறுமியர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும், சுவாரஸ்யமும் பரபரப்பும் நிறைந்த படம் இது .
இந்த குட்டீஸ்கள் செய்யும் சில வீர தீர செயல்கள், சந்திக்கும் சிக்கல்கள், ஆகியவற்றை திரில்லாகவும் நகைச்சுவையாகவும் சங்கு சக்கரம் படத்தில் சொல்கிறார்கள்.
தனது அட்டகாசமான இசையால் ஜில் ஜங் ஜக் படத்தை ‘சல்’லென்று உயரே தூக்கி வைத்துள்ள விஷால் சந்திரசேகர்தான் இந்தப் படத்துக்கும் இசை அமைக்கிறார் . ஒளிப்பதிவு ஜி ரவி கண்ணன் ; கலை இயக்கம் ஜெய் .
“படத்துக்கு சங்கு சக்கரம் என்று பெயர் வைத்தது ஏன்/” என்று கேட்டால் “சஸ்பென்ஸ் , திரில், சுவாரஸ்யம் , கிண்டல் , கேலி , நக்கல் , நையாண்டி , எள்ளல், ஏகடியம் எல்லாம் கலந்த ஒரு சுழலில் , படம் பார்க்கும் ரசிகர்கள் சிக்கிச் சுழன்று சந்தோஷத்தில் திளைப்பார்கள் . அதாவது தீபாவளிக்கு சங்கு சக்கரம் விடுகிற மாதிரியான சந்தோஷத்தில் அதுதான் சங்கு சக்கரம் என்கிறார்.
அசத்தல் விளக்கம் !