‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்ற படம் நேற்று முதல் தமிழகமெங்கும் வெளியானது. இதில் கதாநாயகியாக நடித்தவர் சசிரேகா. இப்படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை கலந்து கொள்ளவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு நடிகை சசிரேகா, வெளிநாடு சென்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். மேலும் படக்குழுவினரின் பட்டியலில் கூட நடிகையின் பெயரை குறிப்பிடாமல் இருந்தனர். இப்படத்தின் டிரைலரில் சசிரேகா சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாமல் இருக்கிறது.
கடந்த மாதம் சென்னை ராமாபுரம் அருகே 5–ந்தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்தது. இதுபற்றி ராயலநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண்ணை பற்றி எந்தவித தகவலும் தெரியாமலேயே இருந்தது. இதனால் இந்த வழக்கை சவாலாக எடுத்து தி.நகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக துப்பு துலக்கினர்.
சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காணாமல் போனவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். கொலையுண்ட பெண் சினிமா நடிகை போன்ற தோற்றத்தில் இருந்ததால், அது சம்பந்தமான விசாரணையில் போலீசார் இறங்கினர்.
அப்போது ‘‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த சசிரேகா கடந்த 2 மாதங்களாக காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர், சினிமா வட்டாரத்தில் யார்–யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது சசிரேகா கதாநாயகியாக நடித்திருக்கும் நாளை முதல் குடிக்க மாட்டேன் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரமேஷ் சங்கர் என்பவரும், சசிரேகாவும் கணவன்–மனைவி என்பது தெரிய வந்தது. இருவரும் போரூர் அருகே உள்ள மதனந்தபுரத்தில் வசித்து வந்ததும் அவர்களுடன் லக்கியா என்ற பெண்ணும் தங்கி இருந்ததும் தெரியவந்தது. இவரை ரமேஷ்சங்கர் தனது தங்கை மாதிரி என்று சசிரேகாவிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுபோன்ற தகவல்களை திரட்டியதும் மதனந்த புரத்தில் உள்ள வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் ரமேஷ்சங்கர் அந்த வீட்டை காலி செய்து விட்டு லக்கியாவுடன் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதனால் ரமேஷ்சங்கர் மீதான சந்தேகம் வலுத்தது. இதையடுத்து சசிரேகாவின் செல்போன் மற்றும் ரமேஷ் சங்கரின் செல்போன் சிக்னல் ஆகியவற்றை போலீசார் பரிசோதித்து பார்த்தனர். அப்போது, கடந்த மாதம் 4–ந்தேதி அன்று இருவரது செல்போன் சிக்னல்களும், ஒரே பகுதியை காட்டியது. போரூர் மதனந்தபுரம் வீட்டில் இருந்து சசிரேகா பிணமாக கிடந்த ராமாபுரம் வரையில் 2 பேரின் செல்போன்களும் ஒரே நேர் கோட்டில் சென்றிருப்பது உறுதியானது. இதை தொடர்ந்தே ரமேஷ் சங்கர் தான் சசிரேகாவை கொலை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர்.
இதையடுத்து சோழிங்க நல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ரமேஷ் சங்கரையும், லக்கியாவையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தங்கை என்கிற போர்வையில் ரமேஷ்சங்கருடன் வசித்து வந்த லக்கியா, அவரது கள்ளக்காதலி என்பது தெரியவந்தது. போரூர் மதனந்தபுரத்தில் உள்ள வீட்டில் ரமேஷ்சங்கர், சசிரேகா, லக்கியா ஆகிய 3 பேருமே ஒன்றாக வசித்துள்ளனர். அப்போது லக்கியாவுடனான கள்ளக்காதலை சசிரேகா கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ்சங்கரும், லக்கியாவும் சேர்ந்து சசிரேகாவை கொலை செய்து பின்னர் கொடூரமாக கழுத்தை துண்டித்துள்ளனர். இதன்பின்னர் போலீசாரை திசை திருப்புவதற்காக அவரது ஆடைகளை கிழித்து எரிந்து விருகம்பாக்கம் பகுதியில் கால்வாயில் தலையை வீசிவிட்டு உடலை ராமாபுரத்தில் போட்டு விட்டு தப்பிச் சென்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.
கொலையுண்ட சசிரேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் ரோஷன் என்ற மகன் உள்ளான். கணவரை பிரிந்து வாழ்ந்த சசிரேகா சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்போதுதான் ரமேஷ் சங்கரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதன் பின்னரே ‘‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவே இப்போது எமனாகி சசிரேகாவின் உயிரையும் பறித்துள்ளது. இது தொடர்பாக ரமேஷ்சங்கர் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–
தாம்பரம் சங்கர் நகர் அருகே உள்ள அனகாபுத்தூரில் தாய்–தந்தை–மனைவி ஆகியோருடன் வசித்து வந்த எனக்கு 20 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டது. இதில் இருந்து நான் மீளமுடியாமல் இருந்ததால் கடன்காரர்கள் என்னை நெருக்கினர். இதனால் எனது தாய்–தந்தை–மனைவி ஆகியோர் 2011–ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். இதன் பின்னர் சினிமா ஆசையில் விருகம்பாக்கத்தில் வந்து தங்கிய எனக்கு லக்கியாவின் தொடர்பு கிடைத்தது. தாய்–தந்தையை இழந்த இவர் கேரளாவை சேர்ந்தவர். 17 வயதில் அவருக்கு பாட்டி திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ததால் அவர் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார். கதாநாயகியாக ஆக்குவேன் என்று அவரிடமும் ஆசை காட்டினேன். இதனால் லக்கியா என்னுடனேயே எப்போதும் இருந்தார். இருப்பினும் அவரை தங்கை என்று சொல்லி விட்டு சசிரேகாவை திருமணம் செய்து கொண்டேன். இதன் பின்னரே, எனது வாழ்க்கை திசை மாறியது. சசிரேகாவுடன் வாழ்வதற்கு எனக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை விட்டு விலகியே இருந்தேன்.
ஆனால் சசிரேகா என்னை தேடிவந்து தொந்தரவு கொடுத்தார். என்னைப் பற்றி கடந்த செப்டம்பர் மாதம் பேட்டி அளித்தும் அசிங்கப்படுத்தினார். இதனாலேயே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி அவரை தீர்த்துக் கட்டினேன்.
இவ்வாறு ரமேஷ்சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார்.