விரைவில் தினசரிகளின் முதல் பக்க விளம்பரங்களில் `லிங்குசாமி பங்குசாமி அங்குசாமி அட்வான்ஸ் வாங்கிட்டு பண்ணாத போங்குசாமி` என்று விளம்பரங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விஷாலுக்கும் இவருக்குமான முட்டலும் மோதலும் அந்த அளவுக்கு முற்றிக்கொண்டு வருகிறது.
இதுபற்றி விஷால் கூறுகையில், “இந்தப் படம் ஆரம்பமாக நான் 14 மாதங்கள் காத்திருந்தேன். சண்டக்கோழி 2` தொடங்காததால்தான் கதகளி, மருது ஆகிய படங்களில் நடித்தேன். 15 நாள்களுக்கு முன்பு வரை லிங்குசாமி, அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஆரம்பிப்பது குறித்து எனக்குத் தெரியாது. என்னிடம் சொல்லாமலேயே அவர் அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட்டார். இதற்கான முன்தயாரிப்பு வேலைகளை நிச்சயம் 2 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்திருப்பார். அப்போதே என்னிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் திரைக்கதையின் இறுதி வடிவம் குறித்து கேட்டபோதுதான் அல்லு அர்ஜுனின் படம் பற்றி தகவல் தெரிவித்தார். தொழில்முறையில் இது சரியல்ல. இதற்குப் பிறகு இருவரும் இணைந்து படம் பண்ணுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். சண்டகோழி 2 தயாரிப்பாளராக முன்தயாரிப்பு வேலைகளுக்குச் செலவு செய்துள்ளேன். லிங்குசாமிக்கு முன்பணமும் அளித்துள்ளேன். இந்த நஷ்டத்தைச் சுமூகமான முறையில் தீர்க்க நினைத்தேன். ஆனால் அது சரியாக வரவில்லை. இதனால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன்,” என்றார்.
ஆனால் விஷாலை பொருட்படுத்தும் மனநிலையில் தான் இல்லை என்ற சுருக்கமான பதிலோடு ஒதுங்கிக்கொள்கிறார் லிங்கு. சண்டை சச்சரவுகள், அடுத்தவன் பணத்தை ஆட்டயப் போடுவது அவருக்குப் புதுசா என்ன?