தமிழீழம் பேசிய தமிழக அரசியல் தலைவர்கள் முதல், சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் மௌனமாய் அங்கீகரித்திருக்கும் விஷயம் லைக்கா. ராஜபக்ஷேவின் பினாமியான சுபாஷ் கரண் தயாரிப்பாளராய் இறங்கி ராஜபக்ஷேவின் கருப்புப் பணங்களை தமிழக மக்கள் புண்ணியத்தில் வெள்ளையாக்கிக் கொண்டிருக்கிறார்.
லைகா நிறுவனம் ஷங்கர் இயக்கி ரஜினி நடிக்கும் எந்திரன் 2.0, கமலின் புதிய காமெடி படம் உட்பட பல படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பாளர்கலிடம் வாங்கி வெளியிட்ட நானும்ரவுடிதான் மற்றும் வெற்றிமாறனின் விசாரணை ஆகிய இரண்டுபடங்களுமே பெரிய வெற்றி. படத்தை எடுத்த சிறிய தயாரிப்பாளர்களை சிறிய லாபங்களோடு ஓரங்கட்டி விட்டு பெரிய லாபத்தை அடைந்திருக்கிறது லைக்கா. விரைவில் வெளியாகவிருக்கும் விஜய்யின் தெறியின் விநியோகத்தைக் கைப்பற்றும் முயற்சியில் லைக்கா இறங்கியிருக்கிறதாம்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் பாடல் வெளியீடு நடக்கவிருக்கும் இந்நிலையில் அந்தப்படத்தை வெளியிடும் உரிமையை முழுமையாக லைகா நிறுவனம் வாங்க முன்வந்திருக்கிறதாம்.
இது தமிழ் சினிமா கார்ப்பரேட்டு மயமாவதை கோடிட்டுக் காட்டுகிறது. மிகப் பெரும் பணம், சுமார் சில ஆயிரம் கோடிகள் இத்துறையில் ஒரு நபரிடம் மட்டும் புழங்கும் போது, சிறிய மீன்களை சாப்பிடும் நோக்கத்தில் சிறிய பட்ஜெட் படங்களை மிகக் குறைந்த லாப வித்தியாசத்திற்கு வாங்கி, அவற்றை பெரும் அளவில் பிரமாண்டமாய் விளம்பரப்படுத்தி பெரும் வசூலைக் குவித்துக் கொள்வது நடக்கிறது.
முன்பு ரிலையன்ஸ் போன்ற சில கார்ப்பரேட்டுகள் இதில் இறங்கினர். பின்பு எதிர்பார்த்த கொள்ளை வருமானம் வராதபோது ஒதுங்கினர். தற்போது லைக்கா ராஜபக்ஷே குடும்பத்தின் கருப்புப் பணத்துடன் களம் இறங்கியிருக்கிறது.