நம் நாட்டில் சாதிப் பிரச்சனையே இல்லை என்று கூறிக் கொண்டு இன்னும் தலித்துகளை யுனிவர்சிட்டியில் வைத்து காலி செய்கிறார்கள் இல்லையா அது போலத் தான் அமெரிக்காவிலும். கறுப்பினத்தவரான ஒபாமாவே ஜனாதிபதியாக வந்தாலும் கருப்பினத்தவர் மீதான பாரபட்சம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகமோ எதிர்வரும் 2044ஆம் ஆண்டுவாக்கில் நாட்டின் வெள்ளையின மக்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள் என கணித்துள்ளது.
ஆஸ்கார் விருதுகள் கொடுக்கத் தொடங்கி 88 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆண்டுக்கான தேர்வும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறுகிறது. சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர்கள் என முக்கியப் பிரிவுகளில் வெள்ளையர்களின் பெயர்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மைக்கேல் பி ஜோர்டான், இத்ரிஸ் எல்பா போன்ற கருப்பின நடிகர்கள் முக்கிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படாதது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. கருப்பின நடிகர்கள் அகாடமி விருதுகளுக்கு புறக்கணிக்கப்படுகிறார்கள் எனும் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
ஆப்ரிக்க-அமெரிக்க நடிகர் மற்றும் நடிகைகளுக்கு போதிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அகாடமியிலுள்ள 6,000 உறுப்பினர்களில் 94% வெள்ளையினத்தவர்.
இதன் காரணமாக இந்த ஆண்டு இயக்குநர் ஸ்பைக் லீ மற்றும் நடிகை ஜாடா பிண்கெட் ஆகியோர், தமது எதிர்ப்புகளைத் தெரிவிப்பதற்காவே விழாவை புறக்கணிக்கிறோம் என அறிவித்துள்ளனர்.
ஆஸ்கார் விருதுகளில் பன்முகத்தன்மை இல்லை என சமூக ஊடகங்களிலும் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கத் திரையுலகில் இருக்கும் இன மற்றும் பாலியல் பன்முகத்தன்மை குறித்த ஆய்வை தெற்கு காலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிடுகிறது. நடிப்பு, இயக்கம், இதர பணிகள் ஆகியவற்றில் எவ்வித பின்புலம் கொண்டவர்கள் எந்த அளவில் இருக்கின்றனர் என அந்த ஆய்வு கூறுகிறது.
2006-2013க்கான கால அளவைப் பற்றி ஆய்ந்திருக்கும் அந்த முடிவுகள் ஒருவேளை ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கலாம்.