`பிச்சைக்காரன்` படம் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காகவே பிச்சைக்க்காரர்களுக்குத் தெரியாமல் நிஜமாகவே அவர்களுடன் அமர்ந்து பிச்சை எடுத்தேன்` என்கிறார் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி. ஆனால் அப்படி பிச்சையாகக் கிடைத்த காசை இறுதியாக என்ன செய்தார் என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை.
நேற்று பிரசாத் லேப்பில் `பிச்சைக்காரன்` பட ஆடியோ வெளியீடு நடைபெற்றது. அதில் பேசிய விஜய் ஆண்டனி,”என்னை இசை அமைப்பாளரா அறிமுகப்படுத்தியதே சசி சார்தான், டிஷ்யூம் படத்துல ! அவரோட படம் பண்ணனும்னு என் ஆசையை தெரிவித்தேன் . அவர் சொன்ன கதை இது . கேட்டு முடித்ததும் அடக்க முடியாமல் குமுறி குமுறி அழுது விட்டேன்.
இந்தப் படத்தை தயாரித்து நடித்தற்காகப் பெருமைப் படுகிறேன்
இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன் . என்னை பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரதத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள் . சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்தும் நடிக்க வைத்தோம் . அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டால் ரொம்ப கொடுமையாக இருந்தது .
மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச்சை எடுக்க வந்த பெண்மணி, பிச்சை எடுத்து மகளை படிக்க வைக்கும் அப்பா ; அந்தக் குடும்பத்துக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார் .. இப்படி பல நிகழ்வுகள் …நாம் அவர்களை மிக சுலபமாக கைகால் இருக்கே உழைக்க வேண்டியதுதானே என்று திட்டுகிறோம் அல்லது புறக்கணித்து விட்டுப் போகிறோம்
ஆனால் இன்னொரு வகையில் வாழ்வில் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான் . பிச்சையாக என்ன கேட்கிறோம் என்பது மட்டுமே மாறுகிறது . நான் வாய்ப்புப் பிச்சை எடுத்து இருக்கிறேன் இப்போதும் படத்தயாரிப்புக்காக பைனான்ஸ் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் .
இந்தப் படத்தை வாங்கிய சரவணனிடம் எல்லோரும் ‘என்ன இது.. முதன் முதலாபட விநியோகம் பண்றீங்க .. பிச்சைக்காரன் என்ற படத்தை வாங்கறீங்க?’ன்னு கேட்டு இருப்பாங்க . ஆனா அவர் படத்தை நம்பி வாங்கினர் .
என் மனைவி பாத்திமா தரும் நம்பிக்கை அதிகம். அவங்க இல்லன்னா நான் இல்ல .
இது எல்லோருக்கும் பிடிக்கிற படமா வந்திருக்கு . நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ” என்றார்.
இதுவரை படத்துக்கு பிச்சைக்காரர்கள் சங்கத்திலிருந்து எதிர்ப்போ ஆதரவோ அல்லது படத்தை எங்களுக்கு திரையிட்டுக் காட்டவேண்டும் என்ற கோரிக்கையோ வரவில்லை என்பது சற்று ஆச்சரியமான செய்திதான். இச்செய்தியைப் படித்துவிட்டாவது கிளம்புங்கய்யா கிளம்புங்க…