கடந்த சில தினங்களாகவே ‘குற்றப்பரம்பரை’ படத்தை யார் இயக்குவது என்பது குறித்து இயக்குநர் பழைய இமயம் பாரதிராசாவுக்கும், இயக்குநர் புதிய இமையம் பாலாவுக்கும் இடையில் பஞ்சாயத்து நடந்துவருவதாக பரபரப்பான தகவல்கள் நடமாடிவருகின்றன.
இதுகுறித்து இதுவரை பாரதிராசாவோ பாலாவோ வாயைத்திறக்காத நிலையில், ‘குற்றப்பரம்பரை நாவலை எழுதிய எழுத்தாளர், சமீபகால நடிகர் வேல.ராமமூர்த்தி ‘குமுதம்’ இதழுக்கு அளித்த பேட்டியில் பாரதிராசாவை வேலவெட்டியத்த மனுஷன் என்று துவங்கி நாக்கைப் புடுங்குகிற மாதிரி தாக்கிப்பேசியிருக்கிறார்.
இதற்கு பாரதிராசா எந்த பதிலும் அளிக்காத நிலையில் அவரது படங்களுக்கு கதை,வசனம் எழுதிய ரத்னக்குமார் நாளிதழ்களில் வேல.ராமமூர்த்திக்கும்,பாலாவுக்கும் ‘எங்க குற்றப்பரம்பரையை பாரதிராஜாவை மீறி எடுத்துப்பாருங்க. எத்தனை தலை உருளுதுன்னு பாருங்க’ என்று சீறியிருக்கிறார்.
‘குற்றப்பரம்பரை’ கதை ரெண்டுபேர்கிட்டயுமே இருக்கு. ஆக ரெண்டுபேருமே அவங்கவங்க பாணியில இயக்கி வெளியிட வேண்டியதுதான, இதுக்கு கட்டி உருளவேண்டிய அவசியமென்ன என்று குழம்பிய வேலையில், வேல.ராமமூர்த்தியின் ‘குற்றப்பரம்பரை’ நாவலை வெளியிட்டிருக்கும் பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், புத்தக விற்பனை சூடுபிடிப்பதற்காக இப்படி ஒரு வேடிக்கை அப்பனாக மாறியிருக்கிறாரோ என்று சந்தேகம் கொள்ளும் நிலையில் இருக்கின்றன ’பொதுவாகவே நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது “குற்றப் பரம்பரை” நாவல்’ போன்ற அவரது முகநூல் கமெண்ட்டுகள்.