தேசிய விருது பெற்ற கலைஞனும், மாபெரும் மனித நேயருமான கலாபவன் மணி நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
கலாபவன் மணியின் திடீர் மரணத்தால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். வில்லன் நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் அபாரமாக நடிப்பை வெளிப்படுத்திய மணி, இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கலாபவன் மணியின் உடல் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவக் குழுவினரால் திங்கள்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக, அங்கு, ஏராளமான பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மணியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, திருச்சூர் மாவட்டம், சாலக்குடியில் உள்ள மணியின் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு பிறகு முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கு நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பொது மக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டிருந்தனர். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் திரையுலகப் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.