நல்ல முயற்சிகள் ஆரம்ப நிலையிலேயே சொதப்பப்பட்டால், அதற்கப்புறம் அதை நாலு கால் ஜீவன் கூட சீண்டாது. அப்படியொரு சொதப்பல்தான் கார்த்திக் சுப்புராஜின் முயற்சியில் உருவாகியிருக்கும் அவியல் திரைப்படம் ! ஐந்து குறும்படங்களை இணைத்து சேர்த்து அவற்றை ஒரு படமாக்கி தருவதென்பது தமிழில் அற்புதமான புதியதொரு முயற்சி. நல்ல நல்ல கான்செப்ட்கள் ரசிகர்களை சென்றடையும் என்பதுடன், ஒரே படத்தை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கண்டு தொலைக்கிற அயற்சியிலிருந்தும் அவனுக்கு விடுதலை கிடைக்கும்.
ஐந்து குறும்படங்கள் சேர்ந்தது தான் ‘அவியல்’ படம். உங்க ஓப்பனிங் நல்லாருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையேப்பா என்று கேட்க வைப்பது போல, அவியல் படத்தில் முதலில் சொல்லப்பட்ட கதையும், அதில் நடித்த நடிகர் நடிகைகளும் அபாரம். அந்த வாலிபனும், ஒரு வயசு மட்டுமே மூத்த அந்த சித்தியும் மனதை கொள்ளையடித்துவிட்டார்கள். பெரிய திரைக்கு வந்தால் பிரமாதமான இடத்தை பிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையை தந்த அந்த முதல் ஒரு படத்தை தவிர, மீதி கோர்த்துவிடப்பட்ட குறும்படங்கள் நான்கும் திராபை.
அவியல் குவியலின் அந்த முதல் படம் போலவே மீதி நான்கையும் தேடி தேடி கண்டு பிடித்து சேர்த்திருந்தால், இந்த முயற்சி கொண்டாடப்பட்டு இருக்குமே? இனிமேல் இப்படி ஒருவர், குறும்படங்களின் கலவை என்று கூறிக் கொண்டு வந்தால், எந்த ரசிகன் உள்ளே வருவான்? ஒரு புதிய முயற்சியை முதல் நோக்கத்திலேயே வெற்றியாக்கத் தவறியிருக்கிறார் சுப்பாராஜ்.