‘தொடர்ந்து ‘குப்பி’ வனயுத்தம்’, ‘காவலர் குடியிருப்பு’ போன்ற உண்மைச்சம்பவங்களைப் படமாக்கியதால் ‘ஒரு மெல்லிய கோடு’ படமும் சசிதருர்-சுனந்தா புஷ்கர் கதை என்று வதந்திகள் பரவி நான் சென்சார் வாங்க பட்டபாடு சொல்லிமாளாது’ என்கிறார் இயக்குநர் ரமேஷ்.
அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா நடித்து, இளையராஜா இசையில், ‘குப்பி’ ரமேஷ் டைரக்டு செய்துள்ள படம், ‘ஒரு மெல்லிய கோடு.’ இது, முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மற்றும் அவருடைய மனைவி சுனந்தா புஷ்கர் பற்றிய கதை என்று தகவல்கள் பரவின.
டைரக்டர் ரமேஷ் இதற்கு முன்பு டைரக்டு செய்த ‘குப்பி,’ மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி-விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட கதை. அதேபோல் அவர் டைரக்டு செய்த ‘காவலர் குடியிருப்பு’ படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதைதான். அடுத்து அவர் இயக்கிய ‘வனயுத்தம்,’ சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை பற்றிய கதை. எனவே ‘ஒரு மெல்லிய கோடு’ படமும் சசிதரூர்-சுனந்தா புஷ்கர் தொடர்பான உண்மை சம்பவத்தை கருவாக கொண்ட கதையாகவே இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
மேற்படி செய்திகளால் சென்சார் வெரி சென்சிடிவ் ஆக ரமேஷ் மறு தணிக்கைக் குழுவுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக அலைந்து சர்டிபிகேட் பெற்றிருக்கிறார்.
நேற்று ஞாயிறன்று காலை பிரசாத் ஸ்டுடியோவில் இசைஞானி இளையராஜாவின் கரங்களால் இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட இயக்குநர் ரமேஷ் பேசியதாவது…
‘‘ஒரு மெல்லிய கோடு படம் தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் தயாரானது. தமிழ் படத்துக்கு, ‘ஒரு மெல்லிய கோடு’ என்றும், கன்னட படத்துக்கு, ‘கேம்’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. இதில், கன்னட படமான ‘கேம்,’‘யு ஏ’ சான்றிதழுடன் கடந்த மாதம் 26-ந் தேதி வெளியானது. தமிழ் படத்தில், பல காட்சிகளை நீக்கும்படி தணிக்கை குழுவினர் கூறியதால், படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
இது, சசிதரூர்-சுனந்தா புஷ்கர் கதை அல்ல. ஒரு கொலையையும், அதன் பின்னணி மற்றும் புலன் விசாரணையை பற்றிய கதை. மறு தணிக்கை குழுவினரிடம் இதை விளக்கமாக எடுத்துச் சொல்லி, ஒரு மாத கால போராட்டத்துக்குப்பின், ‘யு ஏ’ சான்றிதழுடன் படத்தை திரைக்கு கொண்டு வர அனுமதி பெற்று இருக்கிறோம். மறு தணிக்கையில், ஒரு காட்சி கூட நீக்கப்படவில்லை.’’
என்று டைரக்டர் ‘குப்பி’ ரமேஷ் கூறினார்.