விஜயகுமாருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் பழக்கம்னா பழக்கம், அப்படியொரு பழக்கம்! படப்பிடிப்பு, பண பரிவர்த்தனை என்பதை தாண்டி குடும்ப ரீதியாக பழகும் நண்பர்கள்தான் இருவரும். அதற்காக விஜயகுமார் சொல்வதையெல்லாம் ரஜினி கேட்டுவிடுவாரா என்றால், அது சத்தியமாக நடக்காது. அதுவும் அரசியல் விஷயத்தில் ரஜினியின் மனசு நினைத்தாலும், மூளை அதை கேட்காது. பின்பற்றவும் செய்யாது.
மோடியே ரஜினியின் வீடு தேடி வந்து வாய்ஸ் கொடுங்க என்று கேட்ட பின்பும், நழுவிய மீனாக துள்ளி ஓடியவர் ரஜினி. தமிழ்நாட்டில் இந்துத்துவா, மாட்டுக்கறி, காதலர் தின எதிர்ப்பு, மாற்று மாநிலத்தவருக்கு அடி என்று என்ன பேசினாலும் அதற்கு மக்கள் அலட்டிக் கொள்ளாமலேயே இருப்பதாலும், பி.ஜே.பிக்கு சரியான கவுன்ட்டர் நெத்தியடி கொடுக்க திராவிடக் கட்சிகள் முதல் தமிழ்த் தேசியக் கட்சிகளும் க்யூ கட்டி நிற்பதாலும் பி.ஜே.பிக் குதிரை தமிழ்நாட்டில் நொண்டிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பி.ஜே.பியில் இணைந்த நடிகர் விஜயகுமார் “இந்த தேர்தலுக்கு ரஜினியை பிரச்சாரம் செய்வதற்காக கூப்பிடப் போகிறேன்” என்று பேட்டி கொடுத்திருக்கிறார். அவர் கூப்பிடுறார் சரி. ரஜினியா போவார் ? ரஜினி ஒரு ஆன்மீகவாதியே தவிர ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதியல்ல. அவருக்கு இந்தச் சாக்கடை அரசியல் செய்யவும் தெரியாது.
ரஜினி ஒரு எளிய மனிதர். வாழ்வில் மிக உயரத்தை அடைந்தாலும் அதை அரசியலாக்கி மேலும் காசு சம்பாதித்து பிள்ளை குட்டிகள் பரம்பரை என்று எல்லாரையும் உள்ளே கொண்டுவந்து அரசியல் மேடையில் ஆடுவதற்கு அவருக்கு மனமும் இல்லை. தெம்பும் இல்லை. அவரை சூப்பர் ஸ்டாராகவே விட்டு விடுங்களேன்.