’ஈ’ படத்துக்குப்பிறகு நயன் தாராவுடன் நடிக்க சரியான படங்களே கிடைக்காத நிலையில் மீண்டும் அவருடன் ஜோடி சேருவதற்கு ஒன்பது ஆண்டுகள் காத்திருக்கவேண்டியதாகிவிட்டது’ என்று கொஞ்சமும் கூச்சம் இன்றி ராவாக மேட்டரைப் போட்டு உடைத்தார் ஜீவா.
அவரும் ஜீவாவும் இணைந்திருக்கும் ‘திருநாள்’ பட ஆடியோ வெளியீட்டுவிழா பிரசாத் லேப்தியேட்டரில் நேற்று நடைபெற்றது.
அதில் பேசிய ஜீவா,” இன்று ஒரு நல்ல நாள். இந்த திருநாளில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. இது ஒரு பாசிட்டிவான டீம். நல்ல எண்ணம் கொண்ட நண்பர்கள் கொண்ட படக்குழு. இந்தப் படத்தின் கதையை நீண்டநாட்கள் முன்பே கேட்டேன்.
பிறகு தயாரிப்பாளராக செந்தில்குமார் அமைந்தார். அவர் வெறும் தயாரிப்பாளர் அல்ல, எங்கள் குடும்ப நண்பர். சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் ‘சூர்யவம்சம்’,’திருப்பாச்சி’ போன்ற பல வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்தவர்.
அவர்தான் படத்தைத் தயாரிப்பது என்று முடிவானதும் உடனே படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டோம்.ஒரே மூச்சில் படத்தை முடித்தோம்.
பொதுவாகப் படப்பிடிப்பில் எல்லாம் தினம் ஒரு பிரச்சினை வரும்.
படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்கு பிரச்சினை வரக்கூடாது. எந்தப் பிரச்சினையும் வராமல் இருந்தால்தான் நிம்மதியாக நன்றாக நடிக்க முடியும்.
இப்படத்தில் அப்படி எதுவும் தெரியவே இல்லை. நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எல்லாவற்றையும் செந்தில்குமார் பார்த்துக் கொள்வார் அவர் பார்க்காத பிரச்சினையா?அப்படிப்பட்ட அனுபவசாலி அவர்.
இந்தப் படம் முழுக்க வேட்டியில்தான் வருகிறேன். நீண்டநாட்களாகவே லோக்கலாக இறங்கி படம் பண்ணவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி லோக்கலாக அமைந்த படம்தான் ‘திருநாள்’.
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சத்தம் போட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. பதற்றமாகி நான் பார்த்ததில்லை .அவருடன் 100 படங்கள் கூட வேலை பார்க்கலாம். கலை இயக்குநர் சீனு ராவ் கடினமான உழைப்பாளி.இசையமைப்பாளர் ஸ்ரீ அழகழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஈ’ ‘தெனாவட்டு’ படங்களுக்குப் பிறகு அவருடன் இதில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதலில் இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஸ்ரீ எப்போதும் குத்துப் பாட்டுதான் போடுவார் என்று நினைத்தேன் . ஆனால் இதற்காக இனிமையான மெலடி பாடல்கள் போட்டுள்ளார்.
நயன்தாராவுடன் 9 ஆண்டுகளுக்குப் பின் நடித்திருக்கிறேன். படத்தில் முதலிலேயே அவரைத்தான் நடிக்க வைக்க நினைத்தோம் .ஆனால் அப்போது அவர் பிஸியாக இருந்தார் .பிறகு வேறு நடிகைகள் எல்லாம் பார்த்தோம். சரிப்பட்டு வரவில்லை.ஆனால் தாமதமானாலும் நயன்தாராதான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.
பிறகு அவரே வந்து சேர்ந்துவிட்டார் .முதல்நாள் படப்பிடிப்பு முதல் கடைசிநாள் படப்பிடிப்பு வரை இயக்குநர் சொன்னதை மட்டும்தான் ஆர்வமாகச் செய்தேன். இப்படத்தில் விருப்பமாக நடித்தேன்., சுதந்திரமாக நடித்தேன். பிளேடு வாயில் வைப்பது போன்ற பல காட்சிகளில் சிரமப்பட்டு நடித்தேன். . இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும். ” என்றார்.