கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் டஜன் கணக்கில் இருந்தாலும் பாவம் வறுமையில் வாடுகிறது தென்னிந்திய நடிகர் சங்கம். அதற்கு கட்டிடம் கட்டக் கூட காசின்றி சிரமப்படும் நிலையில் கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இந்த போட்டியை தொடங்கி வைத்தனர்.
இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ் சினிமாவின் முன்னணி சினிமா நட்சத்திரங்களான பிரபு, விக்ரம், கார்த்திக், ஜெயராம், சத்யராஜ், கவுண்டமணி, தனுஷ், நடிகைகள் சுஹாசினி, ஸ்ரேயா. தப்ஸி, கார்த்திகா, நமிதா, பிந்து மாதவி உட்பட பலரும் கலந்துகொண்டனர். தமிழ்த் திரையுலகைத் தவிர மற்ற தென்னிந்திய நட்சத்திரங்களான மம்முட்டி, நாகார்ஜூனா, வெங்கடேஷ், சிவராஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான அணிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டன.
இதில் சூர்யா தலைமையிலான ‘சென்னை சிங்கம்ஸ்’, விஜய் சேதுபதி தலைமையிலான ‘ராம்நாட் ரைனோஸ்’, ஜீவா தலைமையிலான ‘தஞ்சை வாரியர்ஸ்’ ஆர்யா தலைமையிலான ‘சேலம் சீட்டாஸ்’ ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. அதில் சூர்யா தலைமையிலான சென்னை அணியும், ஜீவா தலைமையிலான தஞ்சை அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டியை நடிகர் மம்முட்டி தொடங்கி வைத்தார்.
காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்ற அனைத்து போட்டிகளும் 5 ஓவர்கள் கொண்டதாகவும், இறுதிப் போட்டி 6 ஓவர்களைக் கொண்டதாகவும் அமைந்தது. இறுதிப் போட்டியில் முதலில் விளை யாடிய தஞ்சை வாரியார்ஸ் அணி 6 ஓவர்களில் 83 ரன்கள் எடுத்தது. அதை அடுத்து களம் இறங்கிய சென்னை சிங்கம்ஸ் அணி 84 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அதை காலையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பிய விதத்தில் சன் டி.வி. 9 கோடி ரூபாய் கொடுத்தது. ப்ளஸ் டிக்கெட் விற்பனை மற்றும் இதர வழிகளில் மொத்தம் 13 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகிவிட்டதாம். விளையாட்டை தான் ஒளிபரப்புவதற்காக 9 கோடி ரூபாய் கொடுத்த சன் டி.வி. தனது விளம்பரங்களில் எடுத்தது எத்தனை கோடி ரூபாய் என்பதை சொல்லவில்லை.
விஷால் அணியினர் நடிகர் சங்க நிலத்தை முந்தைய சங்கத்து ஆட்கள் பிவிஆரிடம் அடமானம் வைக்கக் கிளம்பியதை தடுத்துவிட்டார்கள். ஆனாலும் ஏதோ நலிவுற்ற கலைஞர்களுக்கு வாழ்வளிக்கவே கிரிக்கெட் போட்டி நடத்தினோம் என்று சொல்லி இந்தக் கிரிக்கெட்டிலும் பலர் லாபம் பார்த்துக் கொண்டார்கள் என்பதே உண்மை.
ஆனாலும் என்னப்பா. சங்கத்துக்கு கட்டடம் வந்துடுமேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.