டெல்லி கணேஷ் தயாரிப்பில் என்னுள் ஆயிரம் படம் கடந்த வெள்ளி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தியேட்டர்கள் சிரியாகக் கிடைக்காமல், குறைந்த தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அதிலும் பல தியேட்டர்களில் மதியம் 1 மணிக் காட்சி மட்டும் என்று மனிதர்களே வராத காட்சிகளைத் தந்திருக்க, அடைந்த நஷ்டத்தால் வெறுத்துப் போன அவர், ஒரு ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.
அதில் டெல்லி கணேஷ் பேசியிருப்பது..
நான் நடிகர் டெல்லி கணேஷ் பேசுகிறேன். என்னுள் ஆயிரம் என்ற படத்தை எடுத்து எப்படியோ ரிலீஸ் செய்துவிட்ட, ஒரு தயாரிப்பாளர். ரொம்ப சிரமம். யாருமே மதிக்க மாட்டீங்கறாங்க. ஒரு இந்திப் படம், ஒரு தெலுங்குப் படம், ஒரு இங்க்லீஷ் கார்ட்டூன் படம் இதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுக்கறாங்க. தமிழ் வாழ்க, தமிழன் என்று சொல்லடா.. புண்ணாக்கு புடலங்கான்னு சொல்றாங்க. ஆனா தமிழ்நாட்டுல தமிழ்ப்படங்களுக்கு ஒரு ஷோ குடுக்க மாட்டீங்கறாங்க. அந்த இந்திப் படத்தையும், இங்க்லீஷ் படத்தையும் மத்தியானம் ஒரு மணிக்குப் போட்டா ஒண்ணும் குடிமுழுகிப் போறதில்ல. பார்ப்பாங்க. ஆனா நம்ம படத்த ஒரு மணிக்குப் போட்டா ஒரு பய வரமாட்டீங்கறான். சார்.. மூணு மணி ஷோ இல்லையா சார்.. ஆறு மணி ஷோ இல்லையா சார் அப்டின்னு கேட்கறாங்க.
ரொம்ப மோசம்.. திருச்சில எல்லாம் என் படம் ரிலீஸ் ஆகவே இல்லை. கோயமுத்தூர்ல ஒரு தியேட்டர்ல.. எங்கயோ ஓரத்துல இருக்கற தியேட்டர். திருநெல்வேலில எங்கயோ கொடுத்திருக்காங்க. அதும் ஒரு ஷோ. ஏ.ஸி. இல்ல. இந்த வெயில்ல சாகறாங்க அங்க உட்கார்ந்து. ஒரு பய போமாட்டீங்கறான். ‘உங்களுக்காகத்தான் போனேன் சார். இல்லீன்னா அந்த தியேட்டருக்கு மனுஷன் போகமாட்டான்’ங்கறாங்க. அப்டி ஒரு தியேட்டர்.
இப்டி யாராலும் தேவையில்லாத, இந்த மாதிரி ஒன்னரை மணிக்கு வர்ற படங்களெல்லாம்.. வாசல்ல ப்ளாக்ல டிக்கெட் விக்கற பய என்ன சொல்றான்னா, இதெல்லாம் உப்புமா கம்பெனின்னு சொல்வாங்க சார் நார்மலா அப்டின்னு. நம்ம மூணு கோடிரூவா போட்டு க்வாலிட்டியா டெக்னிஷியன்லாம் வெச்சு படம் எடுத்தா, ஒன்னரை மணிக்கு ரிலீஸ் ஆகறதால உப்புமா கம்பெனின்னு சொல்லுவாங்களாம். அதும் யாரு சொல்றா. ப்ளாக்ல டிக்கெட் விக்கறவன் சொல்றான்.
எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு.. நமக்குத்தான் ஒரு எழவும் தெரிய மாட்டீங்குது.. யாரும் சொல்லவும் மாட்டீங்கறாங்க. என்ன பண்றது.. யார்கிட்ட போய்க் கேட்கறது..
ஒண்ணாந்தேதி வந்தா, ‘ஐயயோ.. ஒண்ணாந்தேதி வராதீங்க. எட்டாம் தேதி.. அய்யயோ எட்டாம் தேதி நெறைய படம் வருது… பக்கத்துலயே வராதீங்க.. பதினாலு.. ஐயோ போச்சு தெறி வருது.. இருபத்து இரண்டு.. ம்ம்ம். பாக்கலாம்… எப்படி போனாலும் உங்களுக்கு வர்ற கூட்டம் வரும் அப்டின்னு சொல்லி ஆரம்பிச்சு.. இப்ப எல்லாரும் என்ன சொல்றாங்க.. 29 வந்திருக்கணும் சார்.. நீங்க ஏன் 22ல வர்றீங்கன்னு..
மொத்தத்துல என்னமோ பைத்தியக்காரன் மாதிரி ஆக்கிடறாங்க.. சரி போகட்டும்.. ஏதோ நம்ம ஒரு படம் எடுத்தோம்.. நெறைய கத்துக்கிட்டேன். இத்தன வருஷத்துல நான் கத்துக்காத விஷயங்கள்லாம் இப்ப கத்துகிட்டேன். ‘நண்பரும் பகைபோல் தெரியும்.. அது நாள்படப் நாள்படப்புரியும்’ அப்டிங்கற பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது.. பார்ப்போம்!
எல்லாரும் சேர்ந்து என்ன முடிவெடுக்கணும்னு தெரியாதபடி.. எதாவது கொஞ்சம் சம்பாதிச்சா முடிவெடுக்க உட்காரலாம். சம்பாத்யமே இல்லாம மூணு கோடி போட்டு மூணு லட்சம் சம்பாதிச்சா (விரக்தியாகச் சிரிக்கிறார்) என்ன முடிவெடுக்க வருவா? பார்ப்போம். தொடர்பிலிருப்போம். ஆவன செய்வோம். நன்றி”
இவ்வாறு தன் படம் வெளியிட தியேட்டர்கள் கிடைக்காத ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் டெல்லி கணேஷ்.
சிறு படங்களை பெரும் படங்கள் முழுங்குவது பற்றிய உங்கள் ஆதங்கம் சரியானது தான் சார். சிறு பட்ஜெட் படங்களைத் திரையிட நடிகர் சங்கங்கள் மூலம் ஏதாவது வரையறை செய்தால் நிறைய சிறு பட்ஜெட் படங்கள் தப்பிப் பிழைக்கும் என்பது உண்மை. அதே சமயம் இதற்கும் தமிழர்கள் என்பதற்கும் சம்பந்தமில்லை சார். படம் நல்லா இருந்தால் ஆட்டோமேட்டிக்காகவே அடுத்தடுத்து தியேட்டர்களில் திரையிடப்படும் என்பதும் ஒரு உண்மை.