இந்த தேர்தலில் நான் முடிந்தால் வாக்களிப்பேன் என்று நாமெல்லாம் சொன்னால் கண்டுகொள்ளாத தேர்தல் கமிஷன்  அதே போல் பேசிய  கமலுக்கு பதில் தெரிவித்து ஓட்டுப் போடுங்க என்று அறிவுறுத்தியுள்ளது.

கமல் நடிக்கும்  ‘சபாஷ் நாயுடு’ படத்துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கமல் “மே 16-ல் நான் இங்கு இல்லை. என்னுடைய வாக்கை யாராவது போட்டு விடுவார்கள். இதற்கு முன்பு எனக்கு ஓட்டு இல்லை என்றார்கள். அப்போது நான் கெஞ்சிக் கேட்டு, “இல்லீங்க… நான் இன்னும் இந்திய பிரஜை தான் என்று சொன்னேன்”. பாவம்…தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் எனக்கு நண்பர்கள் தான். நானும் முடிந்தால் இங்கு வந்து வாக்களித்துவிட்டு செல்வேன்” என்று தெரிவித்தார் கமல்.

போன தேர்தலின்போது தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் தோன்றி, ‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்று கூறிய கமல், “இந்தமுறை வாக்களிப்பது சந்தேகம்தான்” என்று கேஷூவலாகச் சொன்னதை சமூக வலைதளங்களில் பலரும் ‘ஏன்யா இப்படி?’ என்கிற ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்துவிட்டனர். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் கமல், முதலில் அதுபோல் தான் நடந்து காட்ட வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, வெளியிட்டுள்ள பதிவில் ‘கமலுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. சமுதாயத்தில் ஒரு ரோல் மாடலாக திகழும் நீங்கள் தயவுசெய்து வாக்களிக்க வேண்டும் ’ என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

தப்பான இந்தத் தேர்தல் முறையால் மக்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்கிற விஷயத்தையே மறைத்து ஏதோ தேர்தல் ரொம்ப முக்கியமாக மக்களின் வாழ்க்கைத் திருப்புமுனை போலத் தோன்றச் செய்யும் கமல் போன்ற பிரபலங்களும், காய்கறி வியாபாரிகளின் பணத்தைப் பிடுங்கி கருப்புப் பணத்தைத் தடுக்கிறோம் என்று தேர்தல் கமிஷனும், மக்களின் மழுங்கிய மூளையை மழுங்கடித்து, ஏதோ நாடு ரொம்ப நன்றாக ஜனநாயகமாகச் செயல்படுகிறது போன்ற தோற்றத்தை மக்களுக்கு உருவாக்கித் தருகின்றன.

நாமும் ஆமாம் சனநாயகம் செம ஸ்ட்ராங்ங்கா இருக்குன்னு போய் ஓட்டுப் போட்டுட்டு வந்து மந்தையில் அடைஞ்சிடுறோம்.

Related Images: