“இன்றைய அரசியல் நிலவரத்தை, என் போன்ற மாணவ சமுதாயம் பாராட்ட முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டுமே, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மக்கள் மீது பாசம் வருகிறது.நான், முதன் முறையாக ஓட்டளிக்க இருக்கிறேன். ஆனால், அரசியல் கட்சிகளுக்குக் கிடையாது. என் ஓட்டு, ‘நோட்டா’வுக்குத்தான்'” ரம்யா என்ற கல்லுாரி மாணவி, ‘தினமலர்’ தேர்தல் களம் இணைப்பிதழில் தெரிவித்திருந்த கருத்து இது.
முதல்முறை ஓட்டளிக்க இருக்கும், 19 வயது ரம்யாவிற்கே அரசியல் கட்சிகள் மீது இவ்வளவு வெறுப்பு! அப்படியானால், வாட்டும் வெயிலில் வரிசையில் நின்று, பலமுறை ஓட்டளித்து வேட்பாளரை வெற்றியடையச் செய்துவிட்டு, ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும் பொதுமக்களுக்கு தேர்தல் மீது எவ்வளவு வெறுப்பு இருக்கும்?அந்த வெறுப்பின் வெளிப்பாடு தான், ரம்யாவை மட்டுமல்ல; பல்லாயிரம் இளைஞர்களை, பொதுமக்களை செல்லாக் காசான, ‘நோட்டா’வை நோக்கித் திரும்ப வைத்திருக்கிறது. நானும், 2006 தேர்தலில், ஓட்டுச்சாவடி அதிகாரி யோடு மல்லுக்கட்டி, ‘நோட்டா’வுக்கு ஓட்டுப் போட்டவன் தான். ‘நோட்டா’ ஆதரவாளர்களுக்கு இதைப் படிக்கும் போது, பெரும் கோபம் எழலாம்; இருக்கட்டும். ‘நோட்டாவை’ விமர்சிக்கும் முன், அதன் வரலாற்றை சுருக்கமாகப் பார்த்து விடலாம்.
‘நோட்டா’ பட்டன் வருவதற்கு முன் இருந்த, ’49 -ஓ’ நடைமுறையின்படி, ஓட்டுச்சாவடியில் உள்ள அதிகாரியிடம், ‘நான் யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை’ என்று தெரிவித்துவிட்டு, குறிப்பிட்ட படிவம் ஒன்றில் கையெழுத்து போடவேண்டும். இந்த நடைமுறையானது, ஒரு குடிமகனின் ஓட்டு குறித்தான ரகசியம் காக்கும் உரிமையைப் பறிப்பதாக இருந்தது. இதை எதிர்த்து, 2004ம் ஆண்டு பி.யு.சி.எல்., என்ற பொதுநல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ‘யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை’ என்பதற்கு தனி பட்டன் வழங்க வேண்டும் என்று கோரியது.இந்த வழக்கில், 2013, செப்., 27ம் தேதி அன்று, உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் தான், வாக்களிக்கும் இயந்திரத்தில், ‘நோட்டா’ பட்டன் வந்து உட்கார்ந்தது.
சரி, ‘நோட்டா’ ஏன் செல்லாக் காசு?
ஒரு கற்பனை உதாரணம். ஒரு தொகுதியில், மூன்று பேர் போட்டியிடுகின்றனர். 100 ஓட்டுகள் பதிவாகின்றன. ஒரு வேட்பாளர் ஐந்து ஓட்டுகளும், இன்னொருவர், 10 ஓட்டுகளும், மூன்றாமவர், 15 ஓட்டுகளும் வாங்குகின்றனர். மீதமுள்ள, 70 ஓட்டுக்களும், ‘நோட்டா’விற்கு விழுகின்றன. இப்போது யார் ஜெயித்தவர்? தற்போதைய தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, 15 ஓட்டுகள் வாங்கிய மூன்றாவது வேட்பாளர் தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
அதாவது, ‘நோட்டாவிற்கு’ விழுந்த, 70 ஓட்டுகளை கழித்து விட்டு, மொத்தம் அந்தத் தொகுதி யில் பதிவான ஓட்டுகள், 30 தான் என்ற அடிப்படையிலேயே ஓட்டுகள் எண்ணப்படும். அதாவது, ‘நோட்டா’வுக்கு விழுந்த, 70 ஓட்டுகளும் கணக்கிலேயே கொள்ளப்படாது. இப்படித் தான், 2014 லோக்சபா தேர்தலில், தமிழகத்தின், 39 தொகுதிகளிலும் சேர்த்து, ‘நோட்டா’ வுக்கு விழுந்த, 5,81,782 ஓட்டுகளும் வீணாகிப் போகின.
அதிகபட்சமாக நீலகிரி தொகுதியில் மட்டும், 46,559 ஓட்டுகள். ‘நோட்டா’விற்கு அதிக வாக்குகள் விழுந்தால் அந்த தொகுதியில் மறுதேர்தல் நடக்கும்; போட்டியிட்ட வேட்பாளர்கள் திரும்பவும் போட்டியிட முடியாது என்பதெல்லாம் சட்டப்படி உண்மையில்லை. ‘வாட்ஸ்-ஆப்’பில் உலா வரும் பல வதந்திகளில் அதுவும் ஒன்று; அவ்வளவுதான். சரி, ரம்யா போன்றோருக்கு என்னதான் தீர்வு; அவருக்குத் தான் எந்தக் கட்சியையும் பிடிக்கவில்லையே?
ஓட்டு போட வரும் வாக்காளர்களின் தேர்விற்கு, மூன்று வகையான வேட்பாளர்கள் உள்ளனர். பிரபலமான கட்சிகள், அதிகம் அறிமுகமில்லா கட்சிகள், சுயேச்சைகள் என்ற அந்த மூன்று வகையில், ஒருவரைத் தான் நாம் தேர்வு செய்ய வேண்டி வரும்.பிரபலமான, பிரதான கட்சிகளைப் பிடிக்கவில்லை என்றால், நல்ல கொள்கை -கோட்பாடுகளை முன்வைத்து இயங்கும், சிறிய கட்சிகளில் ஏதோ ஒன்றிற்கு வாக்களிக்கலாம். அதுவும் இல்லையென்றால், தேர்தல் களத்தில் மான, அவமானங்களை தாங்கிக் கொண்டு ஒரு லட்சியத்திற்காக, சுயேச்சையாகப் போட்டியிடும் சமூக ஆர்வலர் அல்லது இளைஞர்கள் யாருக்காவது ஓட்டளிக்கலாம்.
அந்த வகையில் ஓட்டளித்தால், நம் வாக்கும் வீணாகாது; வளர்ந்து வரும் சிறிய கட்சிக்கோ, ஒரு சமூக ஆர்வலருக்கோ, இளைஞருக்கோ ஊக்கமளிப்பதாகவும் அது அமையும். இதுபோன்று ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது, ‘என் ஓட்டை, கள்ள ஓட்டாக யாரும் போட்டு விடக்கூடாது’ என்ற பிரச்னைக்கும் தீர்வு கிடைத்து விடும்.’நோட்டா’ என்பதன் அர்த்தமே, ‘போட்டியிடும் யாரையும் பிடிக்கவில்லை’ என்பது தான்.
இந்த முடிவெடுக்கும் முன் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் விவரங்களையும் நாம் அறிந்து கொண்டோமா என்று யோசித்துப் பாருங்கள். தேர்தல் களத்தில், உங்கள் தொகுதியில் நிற்கும் சிறிய கட்சிகள், சமூக ஆர்வலர்கள், சுயேச்சைகள் பக்கம் உங்கள் பார்வையைத் திருப்புங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியுடைய வேட்பாளர் அங்கு கூட இருக்கலாம்.
‘ஜெயிக்கும் கட்சிக்கு ஓட்டளிப்பேன், நோட்டாவிற்குப் போடுவேன்’ என்பதெல்லாம் வானொலி காலத்து சிந்தனை. ‘சரியான ஒருவருக்கு ஓட்டளித்து அவரை ஜெயிக்க வைப்பேன்’ என்று நினைப்பதே உங்களின் வாக்கு உரிமையை நீங்கள் சரியாகப் பயன்படுத்தும் முடிவு.
‘வாட்ஸ் அப்’ செய்தியிலிருந்து..
நோட்டா பற்றிய மேலும் விளக்கங்களுக்கு..
https://en.wikipedia.org/wiki/None_of_the_above