“மனித மூளை தற்போதுள்ள அளவிற்குப் பெரிதாக வளர்ச்சி அடைவதை நடத்தல், ஓடுதல், உழைப்பு ஆகியவைதான் தூண்டியிருக்கின்றன” என்று கூறினார் பிரடெரிக் எங்கெல்ஸ். பின்னாளில் பரிணாம உயிரியல் விஞ்ஞானி டானியேல் லிபர்மேன் இதனை உறுதி செய்தார். இன்றோ காரில் அமர்ந்திருத்தல் என்பதையே ஒரு செயல்பாடாக ஆக்கியிருக்கிறது முதலாளித்துவம். இது இன்றைய முதலாளித்துவத்தைச் சித்தரிக்கும் பொருத்தமானதொரு உருவகம்.

கார் என்பது முதலாளித்துவத்தின் இதயத்தோடு இணைந்தது. அது மிகப்பெரிய ஒரு தொழில் துறை மட்டுமல்ல, மூலதனத் திரட்சிக்கான மிக முக்கியமானதொரு ஆதாரம். அதே நேரத்தில் நமது வாழ்க்கையையும் சூழலையும் அது முற்று முழுதாகச் சிதைத்திருக்கிறது.

நமது சமூகத்தின் எளிய ஒரு மனிதன் காரினால், அதன் ஒலியால் அவமானப்படுத்தப்படுகிறான், புகையால் தாக்கப்படுகிறான், நெட்டித்தள்ளி ஒதுக்கப்படுகிறான், ஆதிக்கம் செய்யப்படுகின்றான், கடைசியாகக் கொல்லவும் படுகிறான். சாலை என்பது இன்றைக்கு ஜனநாயகமே இல்லாத ஒரு பிரதேசமாக ஆகியிருக்கிறது.

முதலாளித்துவ கலாச்சாரம் ‘வேகத்தை’ப் போற்றுகிறது. ஃபெராரி மற்றும் ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களின் வேகத்தை கிரிக்கெட் நட்சத்திரங்களான தோனியும் டெண்டுல்கரும் கொண்டாடுகிறார்கள். வேகமாகப் பறக்கும் கார்கள், முன்னேற்றத்தின் அடையாளமாகச் சித்தரிக்கப்படுகின்றன. சாலையில் வேகத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் யாரும் முன்னேற்றத்தின் தடைக்கற்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இத்தகைய அதிவேகத்தை சமாளிக்கும் ஆற்றலைப் பரிணாம வளர்ச்சியானது மனிதனுக்கு வழங்கவில்லை என்ற அறிவியல் உண்மையை வேக வெறியர்கள் மறந்து விடுகிறார்கள். அதி வேகம் என்பது மனிதக் கண்ணின் பார்க்கும் ஆற்றலை முடக்குகிறது என்ற உண்மையை பிரபல நரம்பியல் விஞ்ஞானி வி.எஸ்.ராமச்சந்திரனும், ஆர்.எல்.கிரெகோரியும் நிறுவியிருக்கிறார்கள்.

வேகமாக கார் ஓட்டுதல் ஒரு வகை ஆதிக்க மனோபாவத்தையும், போட்டி போடும் வெறியையும், சமூக விரோத உணர்வுகளையும் ஓட்டுனருக்குத் தோற்றுவிக்கிறது. “சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளையும் குழந்தைகளையும் சைக்கிளோட்டிகளையும் ஒழித்துக் கட்டப்பட வேண்டிய புழு பூச்சிகளாகக் கருதி வெறுக்கும்படி காரின் அதிவேக எஞ்சின் அதன் ஓட்டுனரைச் சிந்திக்கத் தூண்டவில்லையா?” என்று கேள்வி எழுப்புகிறார் அறிஞர் அடோனோ.

கார்களை வைத்து வளர்ச்சியை மதிப்பிடும் பார்வை வலதுசாரி அரசியலுக்கே உரியது. “25 வயதான பின்னரும் ஒரு கார்கூட வாங்க முடியாத இளைஞன் தோற்றுப்போனவன் என்றே நாம் மதிப்பிடவேண்டும்” என்றார் மார்கரெட் தாட்சர். வேகம்- பாசிசம்- கார் ஆகியவற்றுக்கு இடையே ஒரு வரலாற்று ரீதியான தொடர்பு இருக்கிறது. அமெரிக்க தொழிலதிபர் ஃபோர்டும் ஹிட்லரும் ஒருவரை ஒருவர் பெரிதும் விரும்பினர். ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைமையில் பல ஆண்டு காலம் இருந்த மாக்ஸ் மோஸ்லி வெளிப்படையான பாசிச ஆதரவாளர். அவருடைய தந்தை நாடறிந்த பிரிட்டிஷ் பாசிஸ்ட்.

கார்களுக்கான விளம்பரங்கள் ஆண்மை, அதிகாரம், பாலியல் ஆதிக்கம் சார்ந்த பிம்பங்களைத் தொடர்ந்து தோற்றுவிக்கின்றன. கார் முதலாளிகளின் குழுமம், ஏழை எளிய மனிதர்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், முற்போக்கான அரசியல் கருத்துக்களையும் எப்போதுமே வெறுப்புடனும் பகையுணர்ச்சியுடனும்தான் பார்க்கிறது. அமெரிக்காவைப் பற்றிக் கூறும்போது, “அங்கே பாதசாரிகள் நாய்களைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள்” என்கிறார் பிரஞ்சு மெய்யறிவாளர் ழான் பொதிலேர்.

இந்தியச் சாலைகளில் இன்று நடந்து கொண்டிருக்கும் வர்க்கப்போரில், விலை உயர்ந்த கார்களில் குடிபோதையில் வெறித்தனமாக வண்டி ஓட்டும் பணக்கார இளைஞர்கள்தான் கொலைகாரர்கள். இந்தப் போரில் பலியாகிறவர்களோ பெரும்பாலும் ஏழை மக்கள். இப்படிப் பணக்கார இளைஞர்களால் பாதசாரிகளும் நடைபாதைவாசிகளும் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பல. சல்மான்கான் வழக்கு, நந்தா வழக்கு, கார்ட்டர் சாலையில் 7 நடைபாதைவாசிகள் கொல்லப்பட்ட வழக்கு – இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டும்தான். கார் என்ற வாகனமும் பணக்காரர்களின் கிரிமினல்தனமும் ஒட்டிப்பிறந்த இரட்டைகள் போலும்!எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்கா நடத்தும் போர்கள், மதவெறிக் குழுக்களை உருவாக்கும் அதன் நடவடிக்கைகள், இராணுவவாதம், வெறித்தனம் போன்ற உலக மேலாதிக்க நடவடிக்கைகளுக்கும் எஸ்.யு.வி. (ஸ்கார்ப்பியோ போன்ற கார்கள்) எனப்படும் வாகனங்களுக்கும் இடையிலான உளவியல் ரீதியான உறவினை அறிஞர்கள் பலர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.

பிரெஞ்சு இயக்குநர் கோடார்டு, “வீக் எண்ட்” என்ற தனது திரைப்படத்தில், போக்குவரத்து நெரிசலை முதலாளித்தவத்தின் தோல்விக்கான குறியீடாகச் சித்தரிக்கிறார். முதலாளித்துவ நுகர்வியச் சமூகத்தின் அழிவுப் பார்வையை அந்தத் திரைப்படம் சித்தரிக்கிறது.

போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்காக மென்மேலும் அதிகமான சாலைகளை அமைப்பதென்பது தீயை அணைக்க எண்ணெய் வார்ப்பதைப் போன்ற அறிவீனம். இருப்பினும் மேலை நாடுகளின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக, இந்தியாவும் சீனாவும் அவர்கள் சென்ற அதே அழிவுப்பாதையில்தான் செல்கின்றன.

உலகிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு நமது நாட்டின் சாலைகளில் ஏழைகள் படுகொலை செய்யப்படுகின்றார்கள். பாலியல் குற்றவாளிகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமென்று நாம் கூறுகிறோம். ஆனால், அதைப் போல பத்துமடங்கு குழந்தைகள் வெறித்தனமாக விரையும் மோட்டார் வாகனங்களால் கொல்லப்படுகிறார்கள். 2014 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1,40,000 பேர் மோட்டார் வாகனங்களுக்குப் பலியாகியிருக்கிறார்கள். உலகிலேயே இதுதான் மிகவும் அதிகம். சாலை விபத்துகள் மேலை நாடுகளில் குறைந்து வருகின்றன. நமது நாட்டிலோ இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் பொதுப் பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட்ட வெள்ளை நிறவெறியை எதிர்த்துக் குரல் கொடுத்து ஒரு பெரும் சமூக மாற்றத்தைத் தொடங்கி வைத்த ரோஸா பார்க்ஸ். (கோப்புப் படம்)

பொதுப் போக்குவரத்துக்கான முதலீடு குறையக்குறைய மக்கள் உயிரற்ற சரக்குகளைப் போலப் பந்தாடப்படுகிறார்கள். 1953-இல் கொல்கத்தாவில் ஒரு போராட்டம் நடந்தது. டிராம் வண்டிகளின் கட்டணம் ஒரு பைசா உயர்த்தப்பட்டதற்கு எதிராக ஒரு மாத காலம் இடதுசாரிக் கட்சிகள் அன்று போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தின. துப்பாக்கிச் சூட்டில் சிலர் கொல்லப்பட்டனர். ஆனால், இப்போராட்டத்தின் விளைவாக, டிராம் சேவையை நடத்தி வந்த பிரிட்டிஷ் கம்பெனி கட்டண உயர்வைத் திரும்பப் பெறவேண்டியதாயிற்று. அன்று இந்தப் போராட்டத்தின் தலைவர்களுள் ஜோதிபாசுவும் ஒருவர். பின்னாளில் அவர்தான் டாடாவின் நானோ கார் திட்டத்தை ஆதரித்தார்.

அறிவுபூர்வமான போக்குவரத்து கொள்கை என்பது நகர்ப்புறத் திட்டமிடலின் ஒரு அங்கமாகும். தொழிலாளர்களின் குடியிருப்புகள் அவர்களது தொழிலகங்களுக்கு அருகாமையில் இருப்பதுதான், நகர்ப்புற நிலங்களைச் சமூகரீதியில் நியாயமான முறையில் பயன்படுத்தும் கொள்கையாகும். இதுதான் தொழிலாளிகள் பயணம் செய்வதற்கான தேவையை இல்லாமல் ஆக்கும்; அல்லது குறைக்கும். ஒரு பயணம் என்பதற்கு சமூகக் கண்ணோட்டத்தில் ஏதேனும் நோக்கம் இருக்க வேண்டும்.

இன்று பணக்காரர்கள்தான் தமது தொழிலகங்களுக்கு அருகில் வசிப்பது போன்ற சூழலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சமீபத்திய ஆதர்ஷ் அடுக்குமாடிக் கட்டிட ஊழல் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். அங்கே முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மும்பையின் கஃபே பரேடு என்ற மிக மையமான பகுதியில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைந்திருக்கிறது. இதற்கான நிலம், மும்பை பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து நிலையத்துக்குச் சொந்தமானது. பணக்காரர்களுக்கான ஆடம்பரக் குடியிருப்புக்கு அது தாரை வார்க்கப்பட்டுவிட்டது.

2012-ம் ஆண்டில் டில்லியில் ஒரு தனியார் பேருந்துக்குள் நடந்த வல்லுறவும் கொலையும் (நிர்பயா படுகொலை) வெளிப்படுத்திய மிக முக்கியமான உண்மை என்ன? நகரங்களில் பாதுகாப்பான, எளிதான பொதுப்போக்குவரத்து வசதி இல்லை என்பதுதான் அது. ஆனால், நிர்பயா பிரச்சினை குறித்த விவாதம் முழுவதும் “குற்றவாளிகளுக்குப் போதுமான தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் வேண்டும்” என்ற வரம்புக்குள் நிறுத்தப்பட்டு விட்டது.

டெல்லியின் பரந்த ஆளரவமற்ற குடியிருப்புப் பகுதிகளும், விரிவடைந்து செல்லும் புறநகர்ப் பகுதிகளும், திரும்பிய இடங்களிலெல்லாம் பெருகியிருக்கும் மதுபானக்கடைகளும் மோட்டார் வாகனம் சார்ந்த வன்முறைக்கான களத்தை ஏற்படுத்தி தருகின்றன. வல்லுறவுக் குற்றங்களுக்குத் தேவையான தனிமையையும், தப்பிச் செல்வதற்கான வாய்ப்பையும் குற்றவாளிகளுக்கு வழங்குகின்ற அபாயகரமான களங்களாக கார்கள் மாறி வருகின்றன. உலகிலேயே அதிகமான விபத்துகள் நடக்கின்ற, விபத்துகளின் தலைநகரமாகவும் டெல்லி இருக்கிறது.

சாலைகள், பாலங்கள் போன்ற உள் கட்டுமானங்களை நிறுவுவதற்கான செலவுகள் உள்ளிட்டுப் பல்வேறு வகைகளிலும் கார்களுக்காக தமது வரிப்பணத்தை அளிப்பவர்கள் சாதாரண மக்கள்தான். காரை நிறுத்துவதற்கான இடத்துக்காகக்கூட பணக்காரர்கள் தம் பணத்தை அவிழ்ப்பதில்லை. மக்களின் வரிப்பணத்தை வைத்துத்தான் பல மாடி கார் பார்க்கிங் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. பணக்காரர்கள்தான் நகர்ப்புறச் சாலைகளின் ஓரமாக தங்களது காரை நிறுத்தி, மென்மேலும் அதிகமான இடத்தை ஆக்கிரமிக்கிறார்கள். அதே நேரத்தில் இந்தப் பணக்காரர்கள்தான் இவர்களைக் காட்டிலும் பன்மடங்கு குறைவான இடத்தைப் பயன்படுத்தும் நடைபாதை வியாபாரிகளையும், குடிசைவாசிகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

“மோட்டார் வாகனங்கள் அமெரிக்காவைக் கைப்பற்றியது எப்படி? அதை நாம் திரும்பப் பெறுவது எப்படி?”- இது ஜேன் ஹோல்ட்ஸ் கே என்பவர் எழுதிய அற்புதமான ஒரு நூலின் தலைப்பு. இது இந்தியாவுக்கு அப்படியே பொருந்தும். நம்முடைய நகரங்களையும் நம்முடைய வாழ்க்கையையும் இந்த கார் கலாச்சாரம் விழுங்கி அழிப்பதற்கு முன்னதாக, நாம் நமது சாலைகளையும் வாழ்க்கையையும் மீட்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவின் ஆட்டோமொபைல் முதலாளிகள் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு அமெரிக்க மக்களைக் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கான டாலர்களை வாரியிரைத்து ஊடகங்களையும் கல்வியாளர்களையும் விலைக்கு வாங்கி, அவர்களைத் தமது கூலிப்படையாக்கிக் கொண்டார்கள். நமது அன்றாட வாழ்வை அச்சுறுத்தி இடையூறு செய்யும் கார் என்ற வாகனம் நவீனத்தின் அடையாளமாக மாற்றப்பட்டது இப்படித்தான்.

நியூயார்க் நகரில் கார் ஓட்டுனர்கள் காரை நடைபாதையின் மீது ஏற்றினாலும், பாதசாரிகளைக் கொன்றாலும் அந்த மாநகரப் போலீசு ஓட்டுனர்கள் மீது வழக்கு போடுவதில்லை. “வெர்சோ புக்ஸ்” என்ற பிரபல நூல் வெளியீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஜேக்கப் ஸ்டீவன்ஸின் மனைவி 2011-இல் கார் மோதி இறந்தார். இந்த மரணம் குறித்து மிகவும் அலட்சியமான முறையில், ஒப்புக்கு விசாரணை நடத்திய நியூயார்க் மாநகரப் போலீசுக்கு எதிராக ஜேக்கப் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

வெகு நீண்ட காலமாக கார் கலாச்சாரத்துக்கு ஆட்பட்டிருந்த முன்னேறிய நாடுகளிலேயே இன்று கார்களுக்கு எதிரான கலாச்சாரம் தோன்றி வருவதைக் காண முடிகிறது. மோட்டார் வாகனங்கள் இன்னமும் அங்கே ஆதிக்கம் செலுத்திய போதிலும், கார்மயமாக்கம் என்ற முட்டாள்தனம் தோற்றுவித்த பிரச்சினைகளின் காரணமாகவும், பொதுக்கருத்தின் வலிமை காரணமாகவும் சைக்கிளோட்டிகளுக்கு சாலையில் உரிய வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும், பாதசாரிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயமும் முன்னேறிய நாடுகளிலேயே ஏற்பட்டிருக்கிறது.

பிரேசில் நாட்டிலும் கூட கார்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சாவ் போலோ நகரில் சைக்கிளோட்டி ஒருவரின் மீது மோதிய கார், அவரது கையைப் பிய்த்தெறிந்து விட்டது. இந்தச் சம்பவம் கார்களின் ஆதிக்கத்துக்கு எதிரான பொதுக்கருத்தைப் பெருமளவில் தோற்றுவித்தது. அதன் விளைவாக, அந்த நகர் முழுதும் உள்ள சாலைகளில் சைக்கிள்களுக்கென அற்புதமான தனிப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியிலும் நியூயார்க்கிலும் கார்களின் ஆதிக்கத்தை எதிர்த்து சைக்கிளோட்டிகள் போர்க்குணமிக்க முறையில் போராடுகிறார்கள். நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் அரசின் ஆதரவின்றி, மக்களே ஒரு சைக்கிள் புரட்சியை தோற்றுவித்திருக்கிறார்கள்.

“வலிமை குன்றிய மக்களின் ஆயுதம்” என்ற நூலின் ஆசிரியரான ஜேம்ஸ் ஸ்காட், எதிர்ப்புகள் இல்லையென்றால் ஆதிக்கம் எப்படி வேர் விட்டு விடுகிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் கூறுகிறார். எந்த வாகனமும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்ததாம் ஒரு சாலை. இருந்த போதிலும் அந்த சாலையைக் கடக்க விரும்பிய சிலர் பாதசாரிகள் கடப்பதற்கான பச்சை விளக்கு எரிவதற்காக அமைதியாகக் காத்துக் கொண்டிருந்தார்களாம்.

ஆதிக்கத்துக்கு பணிதல் என்பது ஆழ்மனதில் பதிந்து விடுவதை இந்த எடுத்துக்காட்டின் மூலம் விளக்கி, பாதசாரிகள் இத்தகைய ஜனநாயக விரோதமான கட்டுப்பாடுகளை ஆரவாரமின்றி மீறவேண்டும் என்கிறார் ஸ்காட். அப்படிப்பட்ட சின்னச் சின்ன எதிர்ப்புகள் இல்லாமல், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான பெரிய போராட்டத்துக்கு நாம் ஒருபோதும் தயாராக மாட்டோம் என்று அவர் கூறுகிறார்.

சாலைகளில் பாதசாரிகளுக்கு கூடுதல் உரிமை வேண்டும் என்ற கோரிக்கை முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலேயே வலுத்து வருகிறது. நகரச் சாலைகளில் சரிபாதியாவது பாதசாரிகளுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்கிறார் கொலம்பியத் தலைநகர் பகோடாவின் மேயர் என்ரிக் பெனெலோசா.

சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ச்சூழலின் பேரழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், தனியார் தானியங்கி வாகனங்களுக்கு எதிராக வர்க்கப் பார்வையிலான ஒரு எதிர்ப்பை நாம் உடனே தொடங்கியாக வேண்டும் என்கிறது கார்களும் முதலாளித்துவமும் என்ற நூல். தானியங்கி வாகனங்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் அதிகரிப்பது என்பது முதலாளித்துவத்துடன் பிரிக்க முடியாத வண்ணம் பிணைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் இந்த நூலின் ஆசிரியர்கள். கார்ப்பரேட் மோசடிகள், அரசியல் சதிகள், இலஞ்சம், ஊடகங்களை விலைபேசுதல், நிறவெறி, கல்வித்துறை ஊழல், ஏழை நாடுகளின் ஆட்சிக் கவிழ்ப்புகள், இரகசிய இராணுவங்கள், சுற்றுச்சூழல் பேரழிவு, போர் ஆகிய அனைத்தும் தனியார் தானியங்கி வாகனங்களுடன், குறிப்பாக கார்களுடன் இணைந்திருக்கிறது. எனவே கார்களின் ஆதிக்கத்தை நாம் எதிர்க்கிறோம் என்றால், முதலாளித்துவத்துக்கு நாம் சவால் விடுகிறோம் என்றே பொருள்.

“நடத்தல் என்பது ஒரு அரசியல் நடவடிக்கை” என்றான் கவிஞன் வேர்ட்ஸ்வொர்த். உண்மைதான். நடை என்பது அரசியல் எதிர்ப்பின் சிறந்த வடிவமாக அமைய இயலும். 17, 18, 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் மிகப்பெரிய புரட்சிகளெல்லாம் இலண்டன், பாரிஸ், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்களின் வீதிகளில் நடந்தவைதான்.

அதேபோல, பொதுப்போக்குவரத்து என்பதும் எதிர்ப்பையும் கிளர்ச்சியையும் நடத்துவதற்கான மிக முக்கியமான களமாகும். கருப்பின மக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் பேருந்துகளில் தனித்தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்த காலத்தில், ரோஸா பார்க்ஸ் என்ற கருப்பினப் பெண், “வெள்ளைக்காரனுக்காகத் தனது இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது” என்று எதிர்ப்புக்குரல் எழுப்பினாள். இந்தச் சிறு பொறிதான் நிறவெறிக்கு எதிரான சிவில் உரிமை இயக்கம் எனும் தீயை அமெரிக்காவில் பற்ற வைத்தது.

வீதிகள் வாழத்தக்கவையாக மாற்றப்பட வேண்டும். தோழமைக்கும் கூடிப்பழகுவதற்குமான களமாக வீதிகள் இருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக அவை அப்படித்தான் இருந்தன. வீதிகள் நம்முடையவை. அவற்றை நாம் மீட்டெடுத்தாக வேண்டும்.

***

வித்யாதர் ததே, மூத்த பத்திரிகையாளர். பருவநிலை மாற்றத்தின் சகாப்தத்தில் போக்குவரத்து – நடை, சைக்கிள், பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை – என்ற நூலின் ஆசிரியர். ரூபே இணைய தளத்தில் வெளிவந்திருக்கும் இவரது கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம் இது.
___________________________
புதிய ஜனநாயகம், மே 2016
___________________________

நன்றி. வினவு இணையதளம்.

Related Images: