கமல்ஹாசனின் நடிப்பில் லைகா ராஜபக்சே நிறுவனம் வெட்கமில்லாமல் தயாரிக்கும் படம் ‘சபாஷ் நாயுடு’. டி.கே.ராஜீவ்குமார் இயக்கும் இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 16ஆம் தேதி லாஸ்வேகாஸில் துவங்குகிறதாம்.

படத்தலைப்பு வெளிவந்த அன்றே இப்படி ஜாதிப் பெயரில் படத் தலைப்பு இருக்கலாமா என்று ஊடகங்களில் பலரும் பேச ஆரம்பித்தனர். இந்த நிலையில், இப்படத்தின் தலைப்புக்கு விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் பொதுச் செயலாளரும், வானூர் தொகுதி வேட்பாளருமான ரவிக்குமார், இதை விமர்சித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

“தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. முன்பு ஹரியானாவில் மட்டுமே இருப்பதாகப் பேசப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை இங்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் சாதியின் பெயரை படத்தின் தலைப்பாகவோ பாத்திரங்களின் பெயர்களாகவோ பயன்படுத்துவது தமிழகச் சூழலை மேலும் சீரழிப்பதாகவே அமையும்.

முன்னர் அப்படி தலைப்பு வைத்து கமல்ஹாசன் எடுத்த படத்தின் பாதிப்பு இன்னும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும்போது மீண்டும் அப்படியொரு விபரீத முயற்சியில் ஈடுபடவேண்டாம் என கமல்ஹாசன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தலைப்பிலோ வசனங்களிலோ சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் திரைப்படத்துக்கு தமிழக அரசு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இது காமெடிப் படம் என்பதால் கமல் அந்த மாதிரியான சீரியஸாக ஜாதி விஷயத்துக்குள் போகமாட்டார் என நாம் நம்பலாம்.

படத்தின் தலைப்பில் ஜாதிப் பெயர் வந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறதா என்ன ?

Related Images: