அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் திரைப்படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’. இந்த படத்தின் பாடல்களை தனித்துவமான முறையில் வெளியிட முடிவு செய்த ஜிப்ரான் மற்றும் குழுவினர், தற்போது நெடுந்தூர சாலை வழி பயணத்தில் பயணித்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னையில் ஆரம்பித்த இந்த நெடுந்தூர பயணமானது தற்போது சிங்கப்பூரை நோக்கி பயணமாகி கொண்டிருக்கிறது. தங்கள் படத்தின் முதல் பாடலை சென்னையிலும், இரண்டாவது பாடலை பூட்டானிலும், மூன்றாவது பாடலை மியான்மாரிலும் பல தடைகளை தாண்டி இந்த குழுவினர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் யாவும் இணையத்தளங்களில் கசிந்திருக்கும் செய்தி, இந்த குழுவினருக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதை பற்றி படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது, “இதுவரை யாரும் மேற்கொள்ளாத முயற்சியை நீங்கள் ஏன் கையாண்டு இருக்கிறீர்கள்…என்று திரையுலகினரும், எனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களும் கேட்டதுண்டு…”
“ஒரு இசை ஆல்பம் என்பதை தாண்டி சென்னை 2 சிங்கப்பூர் பாடல்கள் யாவும் எங்கள் அனைவரின் உள்ளங்களோடு ஒன்றி இருக்கின்றது… கடந்த ஜனவரி மாதத்தில் எங்களின் சென்னை 2 சிங்கப்பூர் பயணத்தை பற்றி நான் எனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்திருந்தேன்… மியன்மார் பூகம்பம் உள்ளிட்ட பல தடைகளை நாங்கள் கடந்து வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எங்களது கார் ‘லக்ஷ்மி’ தற்போது தாய்லாந்து நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது… விரைவில் அது சரி செய்யப்படும்…தற்போது நாங்கள் தாய்லாந்து மற்றும் மியன்மாரின் எல்லை பகுதியில் இருக்கிறோம்…. இத்தகைய தடங்கல்களால் நாங்கள் சில சமயங்களில் இந்த பயணத்தை ரத்து செய்துவிடலாம் என்று கூட எண்ணியிருக்கிறோம்… ஆனால் எங்கள் குழுவினரின் வலுவான நம்பிக்கை எங்களுக்கு பக்கபலமாக இருக்கின்றது.
ஆனால் தற்போது நாங்கள் கடுமையான அதிர்ச்சியில் இருக்கின்றோம்… சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் யாவும் இணையத்தளங்களில் கசிந்திருக்கிறது என்கின்ற தகவல் தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்… இதை பற்றி விவரமாக நான் எனது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு காணொளி மூலம் தெரிவித்து இருக்கிறேன்..
எங்கள் பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல பாராட்டுகளும், வரவேற்பும் இருந்தாலும், அவை இணையத்தளங்களில் கசிந்திருக்கும் செய்தி எங்களை மிகுந்த மன வேதனைக்கு ஆழ்த்தியுள்ளது… தற்போது எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை.. இதற்கு மேல் எதற்காக இந்த பயணம் என்ற கேள்வி கூட எங்கள் மனதில் எழுகின்றது… நாம் எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், ஏதாவது ஒரு விதத்தில் அவை கசிந்து விடுகின்றன. தற்போது பதிவு செய்யப்படாத இணையத்தளங்களில் இருந்து எங்களின் பாடல்களை நீக்க சொல்லி இருக்கிறோம்…. இப்படிப்பட்ட இணையத்தளங்களில் இருந்து பாடல்களை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்….இந்த நிலைமையை சரி செய்ய உதவி வரும் என்னுடைய ரசிகர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ” என்று கூறுகிறார் ஜிப்ரான்.
விரைவில் சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் நான்காவது பாடலான ‘டெக்சாஸ் போகிறேன்’ பாடலானது தாய்லாந்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.