2002-ல் பி.டி.பருத்தி, 2009-ல் பி.டி.கத்திரிக்காய், ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது 2016-ல் மரபீனிக் கடுகு வந்திருக்கிறது!
பன்னாட்டு நிறுவனங்களுக்கு பால் கறக்கும் மாடாக குடிமக்கள் (மரபீனி விதைகள், கடன், போலீஸ் அடக்குமுறை அரசு, பொய்கள்…..)
டெல்லி பல்கலைக் கழகத்தின் ‘தாவரங்களின் மரபியல் ஆராய்ச்சி’ப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் பெண்டல் மற்றும் அவரது குழுவினர், DMH-11 (DHARA MUSTARD HYBRID-11) எனப்படும் மரபீனிக் கடுகுப் பயிரை, தங்கள் கண்டுபிடிப்பு என உரிமை கொண்டாடி, வர்த்தகப் பயன்பாட்டுக்கு அனுமதிகோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.
மரபீனிப் பயிர்களை நம் நாட்டில் அனுமதிப்பதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும் அதிகார அமைப்பான ‘மரபணு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு’(GEAC), மரபீனிக் கடுகு பற்றி முடிவெடுக்க, தனியாக ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழுவை நியமித்தது. இத்துணைக் குழு “மரபீனிக் கடுகுப் பயிரை நம் நாட்டில் பயிரிட அனுமதிக்கலாம்” என பரிந்துரை செய்துள்ளது! மனிதனுக்கோ,விலங்குகளுக்கோ எவ்வித ஆபத்தும் இல்லை என மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகமும் அறிவித்து விட்டது! ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பியதை அடுத்து கடந்த 24-6-2016-ல் இந்தியாவில் பயிரிடுவதற்கு அனுமதிக்கும் முடிவை தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளது ‘மரபணு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு’(GEAC)!
ஏற்கனவே நாடு முழுவதும் எழுந்த விவசாயிகளின் எதிர்ப்பின் காரணமாக பி.டி.கத்திரியை மத்திய அரசு நிரந்தரமாகத் தடை செய்ததுள்ள நிலையில், அடுத்தடுத்து மரபீனிப் பயிர்களுக்கான ஆராய்ச்சிகள் தொடர்வதற்கு காரணம் என்ன? இந்த ஆராய்ச்சிக்கு பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம் என்ன?
மரபீனிக் கடுகு என்பது மண்ணில் இயற்கையாக உயிர்வாழும் “பேசில்லஸ் அமைலொ லிக்யுபாசியன்ஸ்” (bacillus amyloliquefaciens) என்ற பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ‘பர்னாஸ்’, ‘பர்ஸ்டர்’, மற்றும் ‘பார்’ ஆகிய மூன்று ஜீன்களை உள்ளடக்கியது!. இதில் பர்னாஸ் ஜீன், ஆண் பூக்களின் வளர்ச்சியைத் தூண்டக்கூடியது. பர்ஸ்டர் ஜீன், தாய் தாவரத்தில் உள்ள ஆண் மலட்டுத்தன்மையை தடுத்து பெண்பூக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். பார் ஜீன், என்பது குளுஃபோசினேட் (glufocinate) என்ற களைக் கொல்லியை எதிர்த்து கடுகுப்பயிர் வளர்வதற்கு உதவும். இம்மூன்று ஜீன்களையும் ஒன்றாக இணைத்து DMH-11 என்ற மரபீனிக் கடுகுப்பயிரை உருவாக்கியுள்ளார்கள்!
களவாணிளும்-கைக்கூலிகளும்!
மரபீனிக் கடுகுக்கு டெல்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பெண்டால் குழுவினர் உரிமைக் கொண்டாடினாலும், ஏற்கனவே, இது, “2002-ல் பேயர் நிறுவனத்தின் ப்ரோ-அக்ரோ விதைக்கம்பெனி உருவாக்கிய மரபீனிக் கடுகின் தொழில்நுட்பம்தான்” என்று பல சமூகவியலாளர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். மேலும் இந்த பெண்டால் கருத்து திருட்டுக்காகவும், தொழில்நுட்ப திருட்டுக்காவும் ஏற்கனவே சிறைத் தண்டனை பெற்றவர் என்பதும் அமபலமாகியுள்ளது! கண்டுபிடிப்பாளர்களே திருடர்கள் என்றால், இதற்குப் பரிந்துரை செய்த துணைக்குழு உறுப்பினர்கள் கைக்கூலிகளாகத்தானே இருக்க முடியும்!
- K.வேலுத்தம்பி – துணைக்குழுவின் தலைவரான இவர், ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் நிதியுதவில் நடைபெறும் நோய்தாக்குதலை எதிர்த்து வளரும் மரபீனி அரிசி ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்.
- SR.ராவ்- சின்ஜென்டா நிறுவனத்தின் நிதியுதவியில் நடைபெறும் தங்க அரிசி ஆராய்ச்சியில் பணிபுரிந்து வருபவர்.
- B.செசிகெரன்- பேயர், மான்சாண்டோ, பி.எ.எஸ்.எஃப்,போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினராக உள்ள ‘சர்வதேச வாழ்வியல் அறிவியல் கழக’த்தின் உறுப்பினர்! மத்திய அரசின், தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின்(NIN) முன்னாள் இயக்குனர்!
இவர்களைப் போன்ற, பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளின் கையில்தான், நமது தாவரங்களின் மரபியல் ஆய்வுகளும், எதிர்கால விவசாயமும் சிக்கியுள்ளது!
மரபீனிக் கடுகின் இலக்கு இந்தியாவின் எண்ணெய்ச் சந்தை!
அறிவியல் ரீதியாகவே மரபணு தொழில்நுட்பம் ஆபத்தானது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. “ஊடுருவித் தாக்கும் மரபணு தொழில்நுட்பம் ஒரு நாட்டின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப உருவாகி வளர்ந்த மரபணுப் பயிர்களை அழித்து, அந்நாட்டின் பல்லுயிர் தன்மையை ஒழித்துக்கட்டிவிடும். ஒரு முறை இத்தகைய மாற்றம் நடந்துவிட்டால், அதன் பிறகு எப்போதுமே அதை மீட்டெடுக்கவே முடியாது.!” என்று அறிவியலாளர்களே அலறுகிறார்கள்.
“மனித உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும். இயற்கையின் சமநிலை சீர்குலையும். நிலமும் நீரும் நஞ்சாகிவிடும். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்! குளுஃபோசினேட் களைக்கொல்லியை தொடர்ந்து பயன்படுத்துவதால் எதற்கும் கட்டுப்படாத வீரிய களைச்செடிகள் உருவாகும்!”என்று உலகம் முழுக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்!
கடுகு விவசாயம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
கனடாவின் செர்ப்ரூக் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில், மரபீனி சோளம் பயிராகும் பகுதியில் வாழும் 93% கர்ப்பிணிப் பெண்களின் ரத்தத்தில் பி.டி மரபீனியின் விஷம் பரவி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்!
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய மரபணுப் பொறியியலின் தந்தை என்று கருதப்படும் டாக்டர் புஷ்ப பார்கவா, “மரபணுக் கடுகு தொடர்பான ஆய்வில் பல ஓட்டைகள் உள்ளன, உயிரிப் பாதுகாப்பு சோதனைகள்(BIOSAFTY) போதாது, ஒழுங்குமுறை/ கட்டுப்பாடு சரியில்லை” என்று குற்றம் சாட்டுகிறார்!
கார்ப்பரேட் ஆதிக்கம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஆனால் பன்னாட்டு நிறுவனங்களோ, தமக்கு லாபம் ஈட்டித்தராத எந்த அறிவியலையும் (இயற்கை, சுற்றுச்சூழல், விவசாயம் பற்றிய அறிவியலை) கண்டு கொள்வதில்லை! அவர்களின் ஒரே குறிக்கோள் சந்தையும், லாபமும்தான்! மரபீனிக் கடுகின் இலக்கு இந்திய சமையல் எண்ணைச்சந்தை!
கடுகு விவசாயம் ஒரு பார்வை
இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்களில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை முக்கிய சமையல் எண்ணெயாக பயன்படுவது போல, வடக்கு, கிழக்கு மாநில மக்கள் பாரம்பரியமாக கடுகு எண்ணெயைத்தான் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ராஜஸ்தான்,ம.பி, ஹரியான,உ.பி, மாநிலங்களில் அதிகளவில் கடுகு விவசாயம் நடக்கிறது. பெரும்பாலும் மானாவாரி நிலங்களிலும், சில இடங்களில் சிறு விவசாயிகளால் கோதுமையின் ஊடுபயிராகவும் கடுகு பயிரிடப்படுகிறது. இவ்வாறு நாடு முழுவதும் சுமார் 60.36 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 80 லட்சம் டன் கடுகு அறுவடையாகி வருகிறது. பெரும்பாலும் பாரம்பரிய முறையிலான எண்ணெய் பிழியும் 7000-9000 தொழில்கூடங்களில் தான் எண்ணை உற்பத்தி செய்யப்படுகிறது. மிகக் குறைந்த அளவிலேயே நவீன தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய்யப்படுகிறது.
உற்பத்தியும் இறக்குமதியும்
இயல்பில், அதிக காரநெடியும், பிசுபிசுப்புத் தன்மையும் கொண்ட கடுகு எண்ணெயில் இருதய நோய்க்குக் காரணமான கரையாத கொழுப்புகளைக் கரைக்கும் வேதியியல் பொருள்கள் உள்ளன என இந்திய கடுகு ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது! இதன் புண்ணாக்கு கால்நடைத் தீவனமாகவும், இலைகள் மக்களின் கீரை உணவாகவும் பயன்படுகிறது! மக்களின் இந்த பாரம்பரிய உணவுப் பழக்கத்தை 1990-ல் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை தலைகீழாய் புரட்டிப் போட்டுவிட்டது!
பன்னாட்டுக் கம்பெனிகளின் காவல் நாயாக மத்திய அரசு!
“உள்நாட்டு உணவுப்பொருள் உற்பத்தியைக் குறைத்து, தாராள இறக்குமதியை ஊக்குவிப்பது” என்ற மக்கள்விரோதக் கொள்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதால், பாமாயில், சோயா எண்ணைகளை பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியச் சந்தையில் இறக்கிவிட்டன. 1998-ல் சர்வதேச சந்தையில் ஒரு டன் 150 டாலருக்கு விற்ற சோயா எண்ணெய்க்கு, அமெரிக்கா 190 டாலர் மானியம் கொடுத்து தனது எண்ணெய் நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவித்தது! ஏசியான் நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு மலேசியா, இந்தோனேசியா நாடுகள் மிகக் குறைந்த விலையில் பாமாயிலைக் கொண்டுவந்து குவித்தன! இதனால் உள்நாட்டு சமையல் எண்ணெய்கள் விலையிழந்து, எண்ணெய் வித்து உற்பத்தி செய்யும் விவசாயமும் அழியத் தொடங்கிவிட்டது! இத்துடன், நிறம், வாசனை, ருசியற்ற சோயா, பாமாயில் எண்ணெய்களை, நம் உள்நாட்டு எண்ணெய்களுடன் எளிதாகக் கலந்து விற்கும் கலப்பட எண்ணெய் மோசடிகளும் அதிகரித்தது!
நமது நாட்டின் சமையல் எண்ணெயின் ஒருவருடத்தேவை சுமார் 217 லட்சம் டன். இதில் உள்நாட்டு உற்பத்தி 89.78 லட்சம் டன். மீதி 127.31 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது! (அட்டவணை கட்டுரையின் இறுதியில்) அதாவது, உள்நாட்டின் 68% தேவைக்கு அந்நிய நாடுகளை நம்பியே இருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள் ளோம்! ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 கோடி ரூபாயை சமையல் எண்ணை இறக்குமதிக்காக மத்திய அரசு செலவிடுகிறது!
ஆண்டுக்கு 20% என அதிகரித்து வரும் இறக்குமதி சந்தையை முழுமையாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் நோக்கத்திற்காகவே தனது உள்நாட்டு எண்ணெய் வித்து விவசாயத்தை திட்டமிட்டு ஒழித்துக்கட்டி வருகிறது மத்திய அரசு!
2005-06-ல் உள்நாட்டின் சமையல் எண்ணெய் உற்பத்தி 83.16 லட்சம் டன்னாகஇருந்தது. ஒன்பதாண்டுகள் முடிவில் 2014-15-ல் சுமார் 5 லட்சம் டன்கள் மட்டுமே உயர்ந்து 89.78 லட்சம் டன்னாக இருந்தது! இதே காலத்தில் சமையல் எண்ணெய்யின் இறக்குமதி 40.91 லட்சம் டன்னிலிருந்து 127.31 லட்சம் டன் என மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது! பன்னாட்டுக் கம்பெனிகளின் காவல் நாயாக மத்திய அரசு செயல்படுவதை, மேற்கண்ட மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களே நிரூபிக் கின்றன!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
“பூச்சி,நோய் தாக்குதல் இல்லாதது”, “25% அதிக விளைச்சல் திறன்”, என்ற வழக்கமான விளம்பரங்களுடன் வரும் மரபீனிக் கடுகுப் பயிரைவிட கூடுதல் விளைச்சல்தரும் உள்நாட்டுரகங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதைக்கூட புறக்கணித்துவிட்டு, மரபீனிக் கடுகை அனுமதிக்க முயல்வது, உள்நாட்டு விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்யும் பச்சைத் துரோகம்! கடுகு எண்ணெய்ச் சந்தையை, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இறக்குமதி எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ருச்சி, காத்ரெஜ், அதானி, ரிலையன்ஸ் போன்ற உள்நாட்டு முதலாளிகளுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும் சதி!
மோடியே பன்னாட்டு நிறுவனங்களின் மரபணுக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வீரிய ரகம்தான்! இதனுடன் ‘இந்துத்துவா’ மரபணுவை சற்று தூக்கலாக பிணைத்துவிட்டால் கிடைப்பதுதான் ‘இந்தியாவின் வீரிய வளர்ச்சி’! இப்போது சொல்லுங்கள் மோடி வளர்ச்சியின் நாயகனா? இல்லையா?
எண்ணெய் வருடம் நவம்பர்–அக்டோபர் |
எண்ணெய்வித்துக்களின்உற்பத்தி* |
உள்நாட்டின்மொத்த ச.எ.உற்பத்தி அளவு. |
இறக்குமதி ** |
மொத்த பயன்பாடு |
2005-2006 |
279.79 |
83.16 |
40.91 |
124.07 |
2006-2007 |
242.89 |
73.70 |
46.05 |
119.75 |
2007-2008 |
297.55 |
86.54 |
54.34 |
140.88 |
2008-2009 |
277.19 |
84.56 |
74.98 |
159.54 |
2009-2010 |
248.83 |
79.46 |
74.64 |
154.1 |
2010-2011 |
324.79 |
97.82 |
72.42 |
170.24 |
2011-2012 |
297.98 |
89.57 |
99.43 |
189 |
2012-2013 |
309.43 |
92.19 |
106.05 |
198.24 |
2013-2014 |
328.79 |
100.80 |
109.76 |
210.56 |
2014-15 |
266.75 |
89.78 |
127.31 |
217.09 |
– மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.