சுமார் 1500 பேர் வசிக்கும் அந்த கிராமத்தின் டீக்கடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். தற்செயலாக மகளிர்குழு பற்றி பேச்சு திரும்பியது. 20 பேர் ஒருகுழு வீதம் 25 குழுக்கள் இருப்பதாகவும் சராசரியாக ஒவ்வொருவரும் 25,000 ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும் ஒருவர் கூறினார். கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு கோடி 25 லட்சம் ரூபாய்! இவ்வளவு ரூபாயா நம்ம ஊருக்குள்ள புழங்குது? என்று நண்பர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!
“என்னப்பா சொல்றீங்க…நம்ம ஊரே பெரிய கடன்காரப்பய ஊரால்ல இருக்கு” என்று ஒருவர் வாயைப் பிளக்க, அருகில் இருந்தவரோ, பேப்பர் பேனாவை எடுத்து ஊரில் நிலத்தை அடகுவைத்து பேங்கிலும், தனியாரிடமும் கடன்வாங்கியவர்கள் பட்டியலை தயாரித்தார். அந்தக்கணக்கும் ஒருகோடி ரூபாயை தாண்டி நின்றது!
ஒரு சிறிய விவசாயகிராமம் இரண்டு கோடிரூபாய் கடனில் உயிர்வாழ்கிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை!
அப்படியானால், நம்ம ஊரின் கடன் எவ்வளவு இருக்கும்? என்று மனதிற்குள் கணக்குப் போடுவதற்கு முன், நம்மில் யாரும் குடும்பத்தோடு சென்று இவர்களிடம் கையேந்தி கடன் கேட்காமலே வீடு தேடிவந்து கடன் கொடுக்கிறானே யார் இவன்? ஏன் கொடுக்கிறான்? அவன் பின்னணி என்ன? நம்மை கடனாளி ஆக்குவதால் அவனுக்கு என்ன லாபம்? என்று அறிந்துகொள்வது அதைவிட முக்கியமானது!
கடன் கொடுப்பவர்கள் யார்?
இவர்கள் இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறார்கள்.
1) சுயஉதவிக் குழுக்கள் (SHG):
குறிப்பாக பெண்கள் மட்டும் 10,15,20 பேர் கொண்ட குழுவாக இணைந்து சுயஉதவிக் குழுக்கள் என்ற பெயரில் இயங்குபவர்கள். பெரும்பாலும் தன்னார்வக்குழுக்கள் தலைமையில் செயல்படும் இவர்கள், நேரடியாக பொதுத்துறை மற்றும் வணிக வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி, அதில் தங்களின் மாத சந்தா பணத்தைச் சேமித்து, அதனை தங்களுக்குள் வட்டிக்குவிட்டு, பிறகு அதனை முறையாக வசூலித்து வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும்! இதே காலத்தில், குழு உறுப்பினர்களுக்கு கூடை பின்னுதல், மண்புழு உரம் தயாரிப்பு, தையல், கம்ப்யூட்டர் பயிற்சி போன்ற சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு 6 மாதகால நடைமுறைக்குப் பின் சம்பந்தப்பட்ட வங்கியில் குழுவின் பெயரில் கடன் பெற்று, கற்றுக்கொண்ட சுய தொழில்கள் மூலம் சம்பாதித்து, கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டும்! வாங்கும் கடனுக்கும், தவணை செலுத்தாதவர்களுக்கும் மொத்தக்குழுவும் பொறுப்பு ஏற்கவேண்டும்! நாடுமுழுவதும் சுமார் 30 லட்சம் சுய உதவிக்குழுக்கள் இயங்குகின்றன!
2) வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC):
இவர்கள் “பொதுமக்களிடமிருந்து சேமிப்பு நிதி திரட்டக்கூடாது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை மக்களுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள்! ஏற்கனவே செயல்பட்டுவரும் சுய உதவிக்குழுக்களைத் தவிர்த்து, இவர்கள் தனியாக பெண்கள் குழுக்களை அமைத்து, நேரடியாக கடன்வழங்கி வருகிறார்கள். ‘மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்’ என்று அழைக்கப்படும் 500-க்கும் மேற்பட்ட இத்தகைய நிறுவனங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன! சமீபகாலமாக, அரசு வங்கிகளுடன் இணைந்து செயல்படும் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கையை விட, இந்த தனியார் நிறுவனங்களின் குழுக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது!
இவ்விரு பிரிவினரும் சேர்ந்து “கடந்த ஆண்டில் மட்டும் (2015) நாடுமுழுவதும் வழங்கிய மொத்த கடன்தொகை சுமார் 48,882 கோடி ரூபாய்! இதில், வங்கி அல்லாத தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கியது மட்டும் 34,298 கோடி ரூபாய்!” என்று, வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பான சன்-தன் (SAN-DHAN) கூறுகிறது!
1,000 ரூபாய் முதியோர் பென்சனுக்கும், ஆதார் கார்டுக்கும், ரேசன் கார்டுக்கும், அப்பாவிகளை தெருநாயாக அலையவிடும் நாட்டில், இவ்வளவு பெரிய தொகையை ஏழைகளின் வீடுதேடிவந்து கடனாகக் கொடுக்க நோக்கி காரணம் என்ன? இவர்களுக்கு ஏனிந்த திடீர் அக்கறை?
கடன் கொடுப்பது எதற்காக?
“கிராமப்புற ஏழை மக்களை வறுமையிலிருந்து மீட்டு, நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், வறுமையை ஒழிக்கப் போகிறோம்!” என்கின்றன நம் மத்திய-மாநில அரசுகள்!
“குறிப்பாக, கிராமப்புற பெண்கள் ஆடு-மாடு வளர்ப்பு, சிறுவியாபாரம், மற்றும் கைத்தொழில்களில் ஈடுபடுத்துவதன் மூலம் தங்கள் வறுமையை தாங்களாகவே ஒழித்து கொள்வதற்கு உதவுவதுதான் இதன் நோக்கம்” என்று ‘பெண்களுக்கான உலகவங்கி’(WOMENS WORLD BANKING -WWB) என்ற அமைப்பு கூறுகிறது!
“கிராமப்புற ஏழைகளை சிறுதொழிலில் ஈடுபடுத்தி, உற்பத்தியை சந்தைப்படுத்த உதவுவதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது” என விளக்கமளிக்கிறது மதுரை- கருமுத்து தியாகராஜன் செட்டியார் குடும்பத்தின், மதுரா மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம்!
ஆக, கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழித்து, அவர்களின் வாழ்வில் 10,000 வாட்ஸ் பல்பை ஒளிர விடுவதுதான் எங்கள் நோக்கம் என்கிறார்கள்! ஆனால், இவர்களிடம் பல ஆண்டுகளாக கடன்பெறும் பெண்கள் என்ன சொல்கிறார்கள்?
கடனாளிகளின் அனுபவம் என்ன?
“நான் மூணுமுறை கடன் வாங்கியிருக்கேன். முதல்முறையா 5,000, அடுத்து ஒருவருசம் கழிச்சு 15,000, அடுத்து ஒருவருசம் கழிச்சு இப்போ 25,000 ரூபாய் வாங்கியிருக்கேன். இதுல என்ன தொழில் பண்ண சொல்றீங்க? ஆடு-மாடு வளர்க்கனும்னா அதை மேய்க்கிறதுக்கும், பராமரிக்கிறதுக்கும் ஒரு ஆளு தனியா வேணும். ஆறு மாசம் கழிச்சுதான் அதை விக்க முடியும். மாடுன்னா வருமானம் பார்க்க ஒரு வருசமாவது ஆகும். அதுவரைக்கும் எப்படி தவணை கட்டுறது?”என்று எதார்த்தமாக கேட்கிறார் ஒரு உஜ்ஜிவன் நிறுவன பெண் பயனாளி!
“இந்தத் தெருவுல நாலுகடை இருக்கு. இதுல நான் ஐந்தாவதா ஒரு கடை வச்சா என்ன வியாபாரம் நடக்கும்? தெருவுல நாலுபேரு கடன் சொல்லிட்டு போயிருவா…அப்புறம் எந்தக்காசுல கடைக்கு சாமான் வாங்குறது? எதை வச்சு தவணை கட்டுறது? கூலிவேலைக்கு போயி கட்டுறதுதான் எங்களுக்கு ஈசியான வழி. வேற வழியில்லைங்க!” என்கிறார் இன்னொருபெண்!
12-வது படித்துவிட்டு தையல் தொழில்செய்யும் இரு குழந்தைகளுக்கு தாயான மீனா, “நைட்டி, சுடிதார், லெக்கின்ஸ், பாவாடை, கடைசியா ஜாக்கட் கூட ரெடிமேடுல வந்துருச்சு. வயசான பொம்பளைகள்தான் இன்னமும் பாவாடை- ஜாக்கட் போடுறாங்க. அன்றாடம் கைச்செலவு அளவுக்கு கிடைக்கும். ஆம்பளைங்க மாதிரி ரெடிமேடு கடைக்குப் போனா கொஞ்சம் சம்பாதிக்கலாம். ரெண்டு புள்ளைகளை வச்சுக்கிட்டு எப்படி வெளியே போகமுடியும்?” என்று புலம்புகிறார்!
வாய்ப்புள்ள சில பெண்கள், வாங்கிய கடனை முதலீடு செய்து சிறு வியாபாரம், கந்துவட்டி கொடுப்பது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். அப்படி ஒரு பெண்ணிடம் பேசியபோது, “எம்புருசன் செத்து ரெண்டு வருசமாச்சு தம்பி! பொம்பளைப் பிள்ளையை கட்டிக்கொடுத்துட்டேன். இன்னொரு ஆம்பளைப்பய இருக்கான். இன்னும் ரெண்டு வருசம் அவன படிக்கவச்சு, அவனுக்கு நல்லது கெட்டது செய்யனும்னா எங்கப்பா போறது? ஒருஆள் வருமானத்துல குடும்பத்த ஓட்டனும்ல. அதான், கூட வேலைசெய்யிற நாலு பொம்பளைகளுக்கு கொடுத்து வாங்குறேன். நான் வேற என்ன தொழில் செய்யிறது?” என்று பரிதாபமாக கேட்கிறார்!
ஒரு பெண் பயனாளியின் கணவர்,”காலேஜில படிக்கிற பையனுக்கு பீஸ் கட்ட 15,000 ரூபாய், பத்து வட்டிக்கு வாங்கினோம். பொண்டாட்டி வாங்குன கடன்ல, அதை அடைச்சிட்டு இப்ப இவங்களுக்கு தவணை கட்டுறோம்! மகளிர் கடனில் மாதம் 2 ரூபாய் வட்டிதான். நம்மளுக்கு 8 ரூபாய் வட்டி மிச்சம்!” என்று தன் வறுமையை சாதுரியமாக வென்றுவிட்டதாக சந்தோசப்படுகிறார்!
இவ்வாறு தங்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளுக்குத்தான் கடன் பயன்படுகிறது என்ற உண்மை, கடன் வழங்கும் நுண்கடன் நிறுவனங்களுக்கும், அரசுக்கும் தெரியாத விசயமில்லை!
“கிராமங்களில் கடன் பெறுபவர்களில் 7 முதல் 15% பேர்தான் தொழில் செய்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் நட்டத்தில்தான் உள்ளனர். எனவே நுண்கடனால் எவ்வித சமூகப்பயனும் ஏற்படுவதில்லை” என்று தனது வாடிக்கையாளர்களிடம் நடத்திய மதுரா நிறுவனத்தின் ஆய்வின் முடிவு கூறுகிறது! மேலும், ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட மலேகாம் கமிட்டியின்(MALEGAM COMMITTEE)-யின் அறிக்கை இன்னும் வெளிப்படையாக, “பெரும்பாலான கடன்கள் நுகர்வுக்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது” என்று கூறுகிறது! எனவே, கடன் தொகையையும் அதற்கான கந்து வட்டியையும் பெண்களின் கூலி உழைப்பிலிருந்துதான் வசூலித்துக் கொள்கின்றன நிதிமூலதன நிறுவனங்கள்.
ஆக, நுண்கடன் திட்டங்கள் மூலம் ஏழ்மை ஒழிப்பு-வறுமை ஒழிப்பு- பெண்களின் சுயமுன்னேற்றம் என்பதெல்லாம் நடைமுறைக்கு உதவாத நடவடிக்கைதான் என்பதை ‘வளர்ச்சித்திட்ட அறிவாளிகளே’ ஒத்துக்கொள்கிறார்கள்! என்றால், இத்திட்டத்தின் உண்மையான நோக்கம்தான் என்ன?
நுண்கடன் என்றால் என்ன?!
“நுண்கடன் என்றால், சந்தை மற்றும் வர்த்தக அணுகுமுறைக்கு உதவும் வகையில், ஏழைகளுக்கு வழங்கும் பலவித பொருளாதார சேவையை குறிக்கிறது! இது சேமிப்பு, ஆயுள்காப்பீடு, பணபரிமாற்றம் மற்றும் கடன் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்” என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் RP.கிறிஸ்டன், துறைசார்ந்த விளக்கம் தருகிறார்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
“பொருள்கள் மற்றும் சேவைத்துறையின் சங்கிலித்தொடர் சந்தையில், பொதுமக்களை இணைக்காவிட்டால் நவீன பொருளாதார முறையே நொறுங்கிவிடும் என்பதிலிருந்துதான் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் என்ற தத்துவம் தொடங்குகிறது!” என்று நுண்கடன் தத்துவத்தின் ஆணிவேரை அடையாளம் காட்டுகிறார் மதுரா மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் KM.தியாகராஜன்!
மேலும், ”கிராமப்புறங்களில் சொத்து ஏதுமற்ற ஏழைகள் (UNDOCUMENTED COMMUNITIES) 40% பேர் உள்ளனர். இவர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் இவர்களை நவீன பொருளாதார அமைப்பு முறைக்குள் கொண்டு வருவதுதான் முதல்படி! அடுத்து, பயனாளிகளின் (கடனாளிகள்!) அடையாள ஆவணங்களை (ரேசன், வாக்காளர், ஆதார் அட்டைகள்) சேகரிப்பது மூலம், கடன்பெறுவதை ஒழுங்குபடுத்தி, அதனை கண்காணிக்கும் அமைப்புகளையும் உருவாக்குவது இதன் 2-வது படி!” என்று விவரிக்கிறார் KM.தியாகராஜன்!
அமெரிக்க நிபுணரின் வரையறையும், அதற்கு விரிவுரையாக மதுரையின் KM.தியாகராஜன் கூறும் விளக்கமும் ஒரே அலைவரிசையில் இருக்கிறது! அதாவது, இல்லாதவன் கையில் கடனாக காசைக் கொடுத்து கடையில் விற்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் தயாரிப்புப் பொருள்களை வாங்க வைப்பதுதான் இக்கடன் திட்டத்தின் நோக்கம் என்கின்றனர்! ஆனால், இந்தியாவில் நுண்கடன் நிறுவனங்களின் செயல்பாடுகளையும், அவற்றின் விரிவான பின்னணியும் நெருங்கிப் பரிசீலித்தால் இவர்கள் கூறுவதையும் தாண்டி, வேறுசில நோக்கங்களும் இருப்பதைக் காணலாம்!
வறுமை ஒழிப்பின் பின்னணியில் அமெரிக்க கவுச்சி!
நாட்டில் செயல்படும் 500 நுண்கடன் நிறுவனங்களில் முதல் 10 பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் மற்றும் இயக்குனர்களில் பெரும் பான்மையினர் இந்தியாவில் பிறந்திருந்தாலும், அமெரிக்காவின் “ஞானப்பால்” குடித்து வளர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்! மதுரா நிறுவனத்தின் தலைவர், தாரா தியாகராஜன், கிராம விடியலின் வினோத் கோஸ்லா, பி.எஸ்.எஸ் –நிறுவனர் டாக்டர். ரமேஷ் பெல்லம்கொண்டா, உஜ்ஜிவன் நிறுவனர் சமித்கோஷ், பந்தன் நிறுவனர் சந்திரசேகர்கோஷ் ஆகிய அனைவரும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் எம்.பி.ஏ.பட்டம் பெற்றவர்கள்! இவர்கள்தவிர, இந்தியாவின் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஆகியவற்றின் முன்னாள் மாணவர்கள், அரசு மற்றும் நபார்டுவங்கியின் ஓய்வுபெற்ற உயரதிகாரிகள்தான் இந் நிறுவனங்களின் இயக்குனர்களாக உள்ளனர்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, வெறும் 100 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கும் இந்த நுண்கடன் நிறுவனங்கள், பல்லாயிரம் கோடிகளை கடனாக வழங்குவதற்குத் தேவையான பெருமளவு நிதியை வெளிநாடுகளின் நிதி முதலீட்டு வங்கிகள், மற்றும் நிறுவனங்கள் மூலமாகவே திரட்டுகின்றன! உதாரணமாக,
1) சென்னையில் செயல்பட்டுவரும் ஆசீர்வாத் மைக்ரோபைனான்ஸ் நிறுவனத்தில், (மணப்புரம் கோல்டு பைனான்சுக்கு சொந்தமானது) அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளையின் உதவியுடன் இயங்கும் லோக்-கேப்பிட்டல் என்ற நுண்கடன் முதலீட்டு நிறுவனம் முதல்கட்டமாக 7 கோடியை முதலீடு செய்துள்ளது!
2) உஜ்ஜிவன் நிறுவனத்தில், மொரீசியஸ் யுனைடட் கார்ப்பரேசன், நெதர்லாந்து டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் ஆகியவையும் உலகவங்கியின் முன்னாள் தலைவர் வொல்ஃபென்ஷனும் முதலீடு செய்துள்ளார்!
3) திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிராம விடியல் நிறுவனம், உலக அளவில் லாபகரமாக இயங்கிவரும் சிறு-நடுத்தர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தொழிலாகக் கொண்ட மைக்ரோவெஸ்ட் என்ற அமெரிக்க நிதி முதலீட்டு நிறுவனத்திடமிருந்து நிதி பெறுகிறது! (கிராம விடியல் நிறுவனத்தை தற்போது ஐ.டி.எஃப்.சி என்ற தனியார் நிதி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது)
4) நாட்டின் மிகப்பெரிய நுண்கடன் நிறுவனமான பந்தன் நிறுவனம், கலடியம் இன்வெஸ்ட்மென்ட் என்ற சிங்கப்பூர் நிதி நிறுவனம், மற்றும் சர்வதேச நிதிக் கழகம் என்ற உலக வங்கியின் துணை நிறுவனத்திடமிருந்தும் முதலீடு திரட்டுகிறது!
5) தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனமான ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில், DEVELOPING WORLD MARKETES-DWM என்ற அமெரிக்க நிறுவனம் முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது!
இவ்வாறு, ஏழைகளை வறுமையிலிருந்து மீட்கப் போவதாக சொல்லும் நுண்கடன் நிறுவனங்களில், உலக கந்துவட்டிக் கம்பெனிகளான சர்வதேச நிதி முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது ஏன்?
ஏழ்மையை அல்ல…ஏழைகளை ஒழிப்பதே நோக்கம்!
மனித சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் தனது மூலதனத்தை பெருக்கிக் கொள்வதற்கான சந்தையாக மாற்றிக்கொள்ளத் துடிக்கும் பன்னாட்டு முதலாளிகள், பின்தங்கிய நாடுகளின் வறுமையையும் ஒரு சந்தையாகவே பார்க்கிறது!
“இந்தியாவில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் தேவை” (THE DEMAND FOR MFI IN INDIA) என்ற உலகவங்கியின் 1994, 1998-ம் ஆண்டின் ஆய்வறிக்கை, இந்தியாவில் உள்ள “ஏழைகளின் சந்தையை” எவ்வளவு துல்லியமாக கணக்கிடுகிறது பாருங்கள்: “இந்தியாவில் 7.5 கோடி குடும்பங்களில் உள்ள 40 கோடிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்! இதில் 6 கோடிபேர் கிராமங்களிலும்,1.5 கோடிபேர் நகர்ப்புறங்களிலும் வசிக்கின்றனர். இவர்களின் ஒருவருட கடன்தேவை 12 பில்லியன்டாலர்! (இன்றைய மதிப்பில் 79,200 கோடி ரூபாய்)” இதன் தற்போதைய மதிப்பீடு 2 லட்சம் கோடிரூபாய் என்கிறது நபார்டு வங்கி!
மேலும், 2005-ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் 60 கோடிபேர் வறுமையின் பிடிக்குள் இருப்பதாகவும், இவர்களின் ஒருவருட கடன் தேவை 100 பில்லியன் டாலர்! என்று ஏழைகளின் உலக சந்தை நிலவரத்தையும் கூறுகிறது உலகவங்கி!(காண்க: www.theatlantic.com/business/archive/2011/01/lies-hype-and-profit-the-truth-about-microfinance/70405/)
இவ்வளவு பெரிய சந்தையை இழக்க விரும்பாததாலும், சிறு முதலீடு என்றாலும் உத்தரவாதமான கடன் வசூலும், லாபமும் இதில் இருப்பதாலும்தான் சர்வதேச நிதி நிறுவனங்கள் இந்திய நுண்கடன் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றன! இதனை ஊக்கப்படுத்தும் வகையில்தான் மத்திய அரசின் கொள்கை முடிவுகளும் உள்ளன!
நவீன கந்துவட்டி நிறுவனங்கள்!
அரசின் பொதுத்துறை வங்கிகளின் சராசரி வட்டி விகிதம் 9% தான்! சுயஉதவிக் குழுக்களுக்கு இவ்வங்கிகள் 7 முதல் 9.65% வட்டிக்குத்தான் கொடுக்கின்றன! செய்முறைக்கட்டணம், அபராதம், கட்டாய இன்சூரன்ஸ் ஏதும் அரசு வங்கிகளில் பிடிப்பதில்லை. ஆனால் நுண்கடன் நிறுவனங்களை மட்டும் 26% வரை வட்டி வசூலித்துக்கொள்ள இந்திய ரிசர்வ்வங்கி அனுமதியளித்துள்ளது! ஆனால், நடைமுறையில் பல நிறுவனங்கள் 40% அளவுக்கு வட்டி வாங்குகின்றன!
உஜ்ஜீவன் நிறுவனம், 15,000 ரூபாய் கடன்பெறும் தனது பயனாளியிடம் ஒருவருட வட்டியாக 2117 ரூபாய் (23%) வசூலிக்கிறது. இதில் 70% வட்டியை முதல் 5 மாத தவணையிலேயே பிடித்துக் கொள்கிறது! இதுதவிர, ஒவ்வொருவரிடமும், செய்முறைக் கட்டணம் 171 ரூபாயும், கட்டாய இன்சூரன்சாக 208 ரூபாயும் பிடித்துக் கொள்கிறது! இதன்படி நாடுமுழுவதும் இந்நிறுவனத்திற்கு 22 லட்சம் பயனாளிகள் இருப்பதைக் கணக்கிட்டால் தோராயமாக, வட்டியாக மட்டும் ஆண்டுக்கு 9300 கோடி ரூபாய் வருமானம் வருகிறது! செய்முறை கட்டணமாக மட்டும் கிடைப்பது 37 கோடி ரூபாய்! இந்தியாவில் செயல்படும் முதல் 10 பெரிய நிறுவனங்கள் சுமார் 4.50 கோடி பயனாளிகளைக் கொண்டுள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அப்படியானால் நுண்கடன் நிறுவனங்களின் ஒருவருட லாபத்தை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! மேலும், சிறுகடன் மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற ரிசர்வ்வங்கியின் விதிமுறைக்கு மாறாக, செல்ஃபோன், லேப்டாப், மளிகை சாமான்கள் விற்பனையிலும் ஈடுபட்டு கொள்ளையடிக்கின்றன இந்நிறுவனங்கள்!
“கந்துவட்டிக்காரனிடம் கூட இன்னைக்கு இல்லைனா நாளைக்கு தர்றேன்னு சொல்லாம். ஆனால் இவர்களிடம் அது நடக்காது. ஒரு ரூபாய் பாக்கின்னாலும் வாங்காமல் வீட்டைவிட்டு நகர மாட்டன். அந்த அவமானத்திற்குப் பயந்தே நகையை அடகுவைத்து ஒருமுறை தவணை கட்டினேன்” என்கிறார் கூலிவேலை செய்யும் ஈஸ்வரி! ஈஸ்வரிகளின் தன்மானமும், வாங்கிய கடனை திருப்பிக்கட்ட வேண்டும் என்ற நேர்மை யும்தான் நுண்கடன் நிறுவனங்கள் மற்றும், சர்வதேச நிதி முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்கு உரமாக இருக்கிறது!
தமிழக அரசின் கந்துவட்டித் தடைச்சட்டத்தால் சிறிதுகாலம் அடங்கியிருந்த கந்துவட்டிக் கும்பல், தற்போது நுண்கடன் நிறுவனங்களின் பாணியில் தனியாக பெண்கள்குழு அமைத்து தங்கள் ‘பைனான்ஸ்’தொழிலை சட்டபூர்வமாக நடத்திவருகிறார்கள்!
ஜார்கண்ட், சத்தீஸ்கரில் நுண்கடன்
கந்துவட்டி கார்ப்பரேட்டுகள்!
2013-ம் ஆண்டில் வங்கித்துறையைத் தனியாருக்கு திறந்துவிடுவது என கொள்கை முடிவை அறிவித்தது. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட. எஸ்.கே.எஸ், பந்தன், உஜ்ஜிவன் போன்ற 10 முக்கிய நுண்கடன் நிறுவனங்கள், லாப நோக்கமற்ற நிறுவனங்கள் (NON-PROFIT) என்பதிலிருந்து விலகி, லாபநோக்கிலான (FOR PROFIT) சிறுநிதி வங்கிகள் (SMALL FINANCE BANKS) என்ற பெயரில் ரிசர்வ்வங்கியின் அனுமதியுடன் தனியார் வங்கிகளாக மாறிவிட்டன! இந்திய வங்கித்துறையின் இம்மாற்றத்திற்கு பிறகுதான் இதுநாள் வரை, பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து கொள்ளையடித்த சர்வதேச நிதிநிறுவன முதலாளிகள், நுண்கடன் நிறுவனங்களிலும் முதலீடு செய்வதை தீவிரப்படுத்தி யுள்ளனர். இதன்மூலம் அதிக முதலீடுகளையும், செயல்படும் பரப்பையும் அதிகரித்துக் கொண்டு பெரும்நிதி நிறுவனங்களாக நுண்கடன் நிறுவனங்கள் உருமாறி வருகின்றன!
உதாரணமாக, ஆசியாவின் இரண்டாவது பெரிய நுண்கடன் நிறுவனமான எஸ்.கே.எஸ் என்ற இந்திய நுண்கடன் நிறுவனத்தில், சர்வதேச முதலீட்டு நிறுவனமான குவாண்டம் குரூப் ஆஃப் ஃபண்ட் 26% பங்குமுதலீடு செய்துள்ளது! மேலும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி 28.12 கோடியும், ஜேபி.மோர்கன், மோர்கன் ஸ்டான்லி, ரிலையன்ஸ், பிர்லாசன் போன்ற பங்குசந்தை சூதாட்டக் கம்பெனிகள் மட்டும் இதில் 300 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன! இதனால் இந்த நிறுவனம் ஒருலட்சம் கிராமங்களில், 46 லட்சம் பயனாளிகளுக்கு சுமார் 11,000 கோடிக்குமேல் கடன் வழங்கும் பெரும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது! (காண்க: times of India business/Jul 29, 2010 மற்றும் http://www.vccircle.com/news/micro-finance/2010/03/26)
அன்னிய முதலீட்டைப் பெற்ற நுண்கடன் நிறுவனங்கள், கிராமங்களில் ஓரளவு பணப்புழக்கம் அதிகமுள்ள, பணப்பயிர் விவசாயம் நடக்கும் பகுதிகளை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, புதிதாக தங்களின் கடன் வலையை நகர்புறங்களில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, போன்ற சிறுவணிகர்களை குறிவைத்து வீசத்தொடங்கி விட்டனர்! இவ்வாறு கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழிப்பதற்காக மத்திய-மாநில அரசுகளால் கொண்டுவரப்பட்ட நுண்கடன் திட்டங்கள், இறுதியில் வெறும் வட்டி-லேவாதேவி நிறுவனங்களாக சீரழிந்துவிட்டன!
இக்கொடுமையைக் கண்ட நுண்கடன் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பங்களாதேஷின் முகம்மது யூனுஸ் என்பவர், “நுண்கடன் என்பது உள்ளூர் வட்டித்தொழில் செய்பவர்களை ஒழிப்பதற்குத் தானே தவிர, வட்டித்தொழில் செய்பவராக மாறுவதற்கல்ல” என்று நொந்துகொள்ளும் அளவில்தான் நம் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது!
கொள்ளையர்களின் கூட்டாளிகள்!
நுண்கடன் திட்டம் என்பதே, உலகவங்கியும், சர்வதேச நிதிமுதலீட்டு நிறுவனங்களும் கூட்டுசேர்ந்து நடத்தும் ஒரு கொள்ளைத் திட்டம்! இதற்கு இந்தியாவின் புரோக்கராக செயல்படுவது சிட்பி- என்ற சிறுதொழில் வளர்ச்சி வங்கியும், நபார்டு வங்கியும்தான்! இதற்கு சட்டரீதியான அங்கீகாரம் தருவதுதான் மத்திய அரசின் வேலை!
இந்தியாவில் நுண்கடன் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக “நீண்டகால மற்றும் பொறுப்பான நுண்கடன் விரிவாக்கத் திட்டம்”-ன் கீழ் உலகவங்கி 2686 கோடி ரூபாயை கடனாக வழங்கியது! இதில் 23% அளவுக்கு சிட்பி வங்கி முதலீடு செய்யும்! இரண்டு தொகையையும் சேர்த்து நுண்கடன் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச வட்டியில் கொடுத்து, முறையாக செயல்படுத்துவது சிட்பி வங்கியின் பொறுப்பு! உலகவங்கி கொடுக்கும் கடனுக்கு 0.75% வட்டியுடன் 35 வருட காலத்தில் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்கிறது இதற்கான ஒப்பந்தம்! ஆசிய வளர்ச்சி வங்கி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி ஆகியவையும் இதுபோல, சிட்பி-யுடன் பல்வேறு நிதி ஒப்பந்தங்களை செய்துள்ளன!
தவிர,“தேசிய கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு இயக்கம்”(NATIONAL RURAL LIVLIHOOD MISSION) என்ற 2011-ல் கொண்டுவரப்பட்ட திட்டத்திற்கு மத்தியஅரசு 33,000 கோடியை ஒதுக்கியது! உலகின் மிகப்பெரிய வறுமை ஒழிப்புத்திட்டம் என்று வர்ணிக்கப்படும் இதற்கு, உலகவங்கி 6,600 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளது! ஏனென்றால் கிராமப்புற ஏழைப்பெண்களை சுயவேலை வாய்ப்புள்ளவர்களாக உயர்த்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என்று மத்திய அரசு கூறுகிறது! அதாவது நுண்கடன் நிறுவனங்கள் செய்த அதே வேலையை, தன்னார்வக் குழுக்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தப் போகிறார்கள். அதனால்தான் உலகவங்கிக்கு இதில் ஆர்வம் பொங்கி வழிகிறது! (2015 முதல் இத்திட்டத்தை “தீன்தயாள் அந்யோதயா யோஜனா” என பெயர் மாற்றம் செய்துள்ளது தேசபக்த மோடிஅரசு!!)
உலகில் நுண்கடன் நிறுவனங்களின் சராசரி கடன்திருப்புதல் திறன் அல்லது கடன்வசூல் திறன் என்பது 95 சதவீதமாக உள்ளது! உலகளவில் சுமார் 10,000 நிறுவனங்கள் செயல்படுகின்றன! இவற்றின் லாபவிகிதம் ஆப்பிரிக்க நாடுகளில் 30.90 சதவீதம்! ஆசிய நாடுகளில் 30.20 சதவீதமாக உள்ளது! இதுதவிர, செய்முறைக் கட்டணம், சேவைவரி, தவணை தவறிய கடனுக்கு அபராதம், இடைக்காலக் கடன் என பலவழிகளில் 30 முதல் 60 சதவீதம்வரை வட்டி வசூலிக்கின்றன! நுண்கடன் நிறுவனங்களின் இத்தகைய அசுர வளர்ச்சியால் ஈர்க்கப்பட்டுத்தான் சர்வதேச நிறுவனங்கள் இதில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன! இந்த உண்மையை மறைப்பதற்காக, பாசிச ஜெயலலிதாவை ‘புரட்சித்தலைவி!’ என்பதைப்போல, ஏழைகளைச் சுரண்டும் கொள்ளைத் திட்டங்களுக்கு “வறுமை ஒழிப்பு” “பெண்களின் சுயமுன்னேற்றம்” என்று பெயரிட்டு மக்களை ஏய்க்கிறார்கள்!
வலைப்பின்னல் கூட்டணி!
மிக எளிதாக தோன்றும் நுண்கடன் நிறுவனங்களின் செயல்பாடுகள் கடந்த 30 ஆண்டுகளாக உலகளவில் வெகு கவனமாக திட்டமிட்டு கட்டியமைக்கப்பட்டவை! நுண்கடன் நிறுவனத்தை தொடங்குவது எப்படி என்பதில் தொடங்கி, மக்களை அணுகும் முறை, பண நிர்வாகம், தவணை வசூலிக்கும் முறைகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவங்களுடன் உறவை வளர்த்துக் கொள்ளும் நுட்பங்கள், வங்கி நிர்வாக முறைகள் ஆகியவை பற்றி உலகத்தரத்தில் பயிற்சியளிக்கும் சிறப்பு பயிற்சி மையங்கள் (ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி.தேர்வுக்கான பயிற்சி மையங்கள் போல) மேற்கத்திய நாடுகளில் ஏராளமாக உள்ளன!
பில்கேட்ஸ், ராக்பெல்லர், மூடி, வால்மார்ட், மெட்லைஃப், இன்டெர் அமெரிக்கன் வளர்ச்சிவங்கி, ஐரோப்பிய மறுகட்டமைப்பு வளர்ச்சி வங்கி ஆகிய கார்ப்பரேட்டுகளின் நன்கொடைகளில்தான் இம்மையங்கள் இயங்குகிறது! இதில், நுண்கடன் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களை பிடித்துதரும் புரோக்கர் நிறுவனங்களும் தனியாக உள்ளன! இவற்றில் அக்சியன் (ACCION) மற்றும் பெண்களுக்கான உலகவங்கி (WWB) ஆகியவை முக்கியமானவை! இவை பல்வேறு வழிகளில் இந்திய ஆளும்வர்க்கத்துடனும் அரசியல், மற்றும் அதிகார வர்க்கத்துடனும் மிக நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளன!
உதாரணமாக, பெண்களுக்கான உலக வங்கியை (WWB) உருவாக்கியவர்களில் ஒருவர் எலாஃபட் (ELA BHATT) என்ற இந்திய குஜராத்திப் பெண்! இவர் இந்திய திட்டக்கமிசனின் முதல் பெண் உறுப்பினர் (1989)! பத்மஸ்ரீ, பத்மவிபூசன், இந்திராகாந்தி அமைதி விருது, ராமன் மக்ஸசே ஆகிய அனைத்து விருதுகளையும் பெற்றவர்! மேலும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்!! மத்திய அரசின் பல்வேறு பெண்கள் அமைப்புகளில் இன்றும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்! இந்தியாவில் இயங்கும் தன்னார்வக் குழுக்களின் நம்பிக்கை நாயகி என்பதால் ஹிலாரி கிளிண்டனின் ‘கதாநாயகி’ ஆனவர்!
ACCION- என்ற அமெரிக்க நிறுவனம், தனது நிர்வாகப் பயிற்சி மையங்களை இந்தியாவில் 9 மாநிலங்களில் நிறுவி தமிழ்,மலையாளம் உட்பட பிராந்திய மொழிகளில் பயிற்சியளித்து வருகிறது! தன்னிடம் பயிற்சி பெற்ற நுண்கடன் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களையும் ஏற்பாடு செய்து தருவதுதான் இதன் சிறப்பம்சம்!
குழப்பமாகத் தெரியும் நுண்கடன் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒரு சித்திரமாக வரையத் தொடங்கினால், கிராமத்திற்கு கடன்வசூலிக்க வரும் நிறுவன ஊழியரில் ஆரம்பித்து, நிறுவனத் தலைவர்- அமெரிக்க படிப்பு- வங்கி நிர்வாகப் பயிற்சி- சர்வதேச நிதி நிறுவனங்கள்- உலகவங்கி என்று படிப்படியாக மேலே சென்று, பிறகு மத்திய அரசு- ரிசர்வ் வங்கி- சிட்பி, நபார்டு வங்கிகள்- 26% வட்டி- நுண்கடன் நிறுவனக் கிளைகள் என்று படிப்படியாக கீழிறங்கி நம் கிராமத்திற்கே வந்து நிற்கிறது! இதில் ஏழைகளுக்கு இருக்கும் ஒரே வேலை கடன் வாங்குவது, வட்டிகட்டுவது மட்டும்தான்!
தோற்றுப்போன அரசமைப்பை தூக்கி எறிவோம்!
புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக, நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக இருந்த விவசாயத் தொழிலே முற்றாக சீரழிக்கப்பட்டு விட்டது! இதனால் வாழ்விழந்த சிறு-குறு விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளிகளும், தங்களின் சொற்ப வாழ்வை தக்கவைத்துக் கொள்வதற்காக திருப்பூர், கோவை, கேரளா, ஆந்திரா, மும்பை என்று ஓடிச்சென்று, கொத்தடிமைகளாக 12-14 மணிநேரம் உழைத்துச் சாகிறார்கள். அங்கும் அவர்களை விடாமல் வறுமை துரத்துகிறது! அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், எட்டாக் கனியாகிவிட்ட கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள், ஆகியவற்றை இரவுபகலாக குடும்பத்தோடு உழைத்து சம்பாதித்த பணத்தால் சமாளிக்க முடியாத அவல நிலையில் தான், கையேந்தி கடன்வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்!
உழைக்கும் மக்களின் இந்த அவலம்தான் நேற்றுவரை வாரவட்டி, மீட்டர்வட்டி கொள்ளையர்களுக்கு சாதகமாக இருந்தது! இதையே வர்த்தகரீதியில் ஒழுங்குபடுத்தி, கார்ப்பரேட்டு பாணியில், சட்டபூர்வமாகக் கொள்ளையடிக்க உருவானவைதான் இந்த நுண்கடன் நிறுவனங்கள்!
நுண்கடன் நிறுவனங்களில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் லாபவெறிக்காகத்தான் நம் உணவுப்பொருள் உற்பத்தியை பாழடித்து, ஏற்றுமதிக்கான விவசாயம் ஊக்குவிக்கப்பட்டது! விதை, உரம், பூச்சிமருந்துகளுக்கான மானியங்கள் ரத்து செய்யப்பட்டது!
இதனால்தான் நிலத்தை இழந்த சிறு விவசாயிகளும், வேலையிழந்த கூலிவிவசாயிகளும் கிராமத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்டனர்!
இன்று வறுமை ஒழிப்புத்திட்டத்திற்கு நிதிஉதவி செய்யும் உலகவங்கிதான், பேனா, பென்சில், தீப்பெட்டி, மற்றும் கைத்தறி, நெசவு, கைவினைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த சிறுதொழில்கள்களை நாசமாக்கியது! அன்னியப்பொருள்களை தாராள இறக்குமதி செய்யுமாறு மத்திய அரசை மிரட்டியது!
“விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்! கிராமப்புற வறுமையை விரட்டுவேன்!” என்று முழங்கும் மோடி அரசுதான், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபட அனுமதி வழங்கியது! கிராம வங்கிகளையும், கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளையும் தனியாருக்கு தாரைவார்க்க சட்டம் இயற்றுகிறது!
இப்படி பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை எல்லாம் ஒழித்துக்கட்டிய மக்கள் விரோத கிரிமினல்களே இவர்கள்தான்!
வாழ்விழந்து, வறுமையின் பிடியில்சிக்கி விழிபிதுங்கி நிற்கும் ஏழைகளுக்கு, 5,000, 10,000-ஐ வீசியெறிந்து “நீயே உன் வறுமையை ஒழித்துக்கொள்!” என்று இழிவுபடுத்துகிறார்கள்!
80-களில் கொண்டுவந்த ‘ஒருங்கிணைந்த ஊராக வளர்ச்சித் திட்டத்தில்’ தொடங்கி, இன்றைய ‘தீன்தயாள் அந்யோதயா யோஜனா திட்டம்’ மற்றும் தமிழகஅரசு கொண்டுவந்த, ‘புது வாழ்வு’ ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டங்கள் உட்பட எண்ணற்ற வறுமையொழிப்பு திட்டங்களும் அதிகாரிகளையும், கிரிமினல் அரசியல்வாதிகளையும் தான் வாழவைத்தது.! ஏழைகளை வறுமையிலிருந்து மீட்பதற்குப் பதிலாக, மேலும் கடன்காரனாக்கி, மீளவேமுடியாத வறுமையின் கோரப்பிடியில் மாட்டிவிட்டுள்ளன!
நுண்கடன் நிறுவனங்கள் என்பது, தனது நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து, சுதந்திரமாக வாழவைக்க முடியாத இந்த அரசுக் கட்டமைப்பின் அவமான சின்னங்கள்! இனிமேலும் நாட்டையும், மக்களையும் ஆள அருகதையற்ற அரசின் அடையாளங்கள்!
வறுமையின் கொடுமையில் நிற்கும் அப்பாவிகளின் ஒரே சொத்தான உழைப்பையும், வட்டியின் பெயரால் சுரண்டித்தின்று உயிர்வாழும் அளவுக்கு இக்கட்டமைப்பு தோற்றுப் போய்விட்டதன் குறியீடுகள்!
இக்கட்டுரையின் தொடக்கத்தில் நடந்த டீக்கடைப் பேச்சுவார்த்தையின் முடிவில் ஒருவர், “திடீர்னு எல்லாப்பயலும் ஒன்னாவந்து எங்க கடனையெல்லாம் இப்பவே திருப்பிக் கொடுங்கடான்னு கேட்டா என்னா செய்யுறது?” என்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு ஒரு பெரியவர் “ஒன்னு கடன் வாங்குனவய்ங்க எல்லாம் மருந்தக் குடிச்சு சாகணும். அல்லது, நாம எல்லாம் ஒண்ணா சேர்ந்து அவய்ங்களை சுட்டுக் கொன்னுபுடனும். இதான் ஒரேவழி!” என்று பதில் கூறினார்.
இந்த அரசுக் கட்டமைப்பின் மீது மக்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதற்கு, வேறு என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு?
-மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.