இந்திய விடுதலைக்கு முன்னால் ஆங்கிலேயர்கள் எடுத்த சர்வே ஒன்று காசியில் அனாதையாக விடப்பட்ட விதவைகள் எண்ணிக்கை 5 லட்சம் இருக்கலாம் என்றது. அவர்கள் தொழில் பிச்சையெடுப்பது முதல் விபச்சாரம் செய்வதுவரைக்கும் இருந்தது. இன்றும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள விருந்தாவன் நகரம் விதவைகளின் நகரம் என்றே அழைக்கப்படுகிறது. ஆதரவற்ற ஆயிரக்கணக்கான விதவைகள் அங்கே இருக்கிறார்கள். இப்படி பெற்ற தாயை அனாதையாக தவிக்க விடுவதில் தனிச்சிறப்பு பெற்ற வட இந்திய இந்துக்கள் பசுவை “தாயாக” மதித்து அதற்காக மனிதர்களை கொலை செய்வதை சகித்துக்கொள்ளும் அளவுக்கு போகிறார்கள். எந்த கட்சியும் பசுவை கொல்வதில் தவறில்லை என சொல்ல விரும்புவதில்லை. இந்துத்துவா அந்த அளவுக்கு மக்கள் மூளையில் எழுதப்பட்டிருக்கிறது.
இத்தகைய லூசுத்தனத்தின் பெரிய பலனை அறுவடை செய்வது பாஜக என்றாலும் அதனை மறைமுகமாக வளர்ப்பதில் எல்லா கட்சிகளும் அங்கே பங்காளிகள்தான். தீமிதிப்பது, அலகு குத்துவது போன்ற வழமையான மத முட்டாள்த்தனம் இது என நாம் விலக முடியாது. காரணம் இந்த ஒரு நம்பிக்கையின் பெயரால் மதவெறி ஊட்டமேற்றி வளர்க்கப்படுகிறது.
இந்தியாவில் 18 கோடி மாடுகள் இருக்கலாம் என்கிறது மதிப்பீடுகள். அவை பெருமளவுக்கு விவசாயிகளாலேயே வளர்க்கப்படுகின்றன. நகரங்களில் மாடுவளர்ப்பது இப்போது சாத்தியமில்லை. அது அங்கே லாபகரமானதும் இல்லை. கிராமங்களில் மாடு வளர்ப்பு உயிரோடு இருக்க காரணம் அது விவசாயத்தை சார்ந்திருக்கும் ஒரு தொழில். சிறு நிலஉடமையாளர்களுக்கு அவர்களது வேலையற்ற நாட்களை ஈடு செய்யும் ஏற்பாடு. அனேகமாக கால்நடை வளர்ப்பு குடும்ப பெண்கள் செய்யும் வேலை. விவசாயியின் உற்பத்திப்பொருளான வைக்கோலுக்கு மாடுகள் இல்லாவிட்டால் எந்த சந்தை மதிப்பும் இல்லை. ஆகவே கால்நடை வளர்ப்புதான் விவசாயிகள் விவசாயத்தை கைவிடாதிருக்க உதவுகிறது. விவசாயிகளின் தற்கொலையை தள்ளிப்போடுகிறது.
இந்த இறுதி வாய்ப்பிற்க்கு வாய்க்கரிசி போடும் வேலையைத்தான் பசுவின் மீது ஒட்டப்படும் புனித லேபிள் செய்யப்போகிறது. வட இந்திய மாநிலங்களில் இரண்டே பருவங்கள்தான். அங்கே விவசாயி பணத்தை வருடத்தின் இரண்டு விளைச்சலின்போது மட்டுமே பெற முடியும். ஆனால் செலவு நாள் தவறாமல் வரக்கூடியது. அவர்கள் மாதா மாதம் பணம் பார்க்க வேண்டுமானால் பால் உற்பத்திதான் ஒரே வழி. ஆடு, கோழி ஆகியவை உத்திரவாதமான வருவாயை தேவைப்படும்போதெல்லாம் கொடுப்பவை. இதனால்தான் லாபமில்லாவிட்டாலும் விவசாயிகள் கால்நடை வளர்க்கிறார்கள். மாடு வளர்ப்பில் செலவாகும் மனித உழைப்பை கணக்கிட்டால் பாலுக்கான கொள்முதல்விலை குறைந்தபட்சம் 50 ரூபாயேனும் இருக்க வேண்டும்.
சராசரியாக 30 ஆயிரத்தில் இருந்து 50000 ரூபாய் விலை ஒரு மாட்டுக்கு ஆகிறது. கறவைத்திறன் வயது ஆகியவற்றை வைத்து அதன் விலை இறங்கிக்கொண்டிருக்கும். இறுதியான வாய்ப்பாக அவை இறைச்சிக்கு அனுப்பப்படுகின்றன. அதுதான் ஒரு மாட்டின் விலையில் நிலைத்தன்மையை பராமரிக்கிறது. அது இல்லாவிட்டால் நடுத்தர வயது மாட்டின் விலையை நிர்ணயம் செய்வதில் கடும் குழப்பம் உருவாகும். அது மாடு விற்பனையை சந்தையை கடுமையாக சீர்குலைக்கும்.
இதனால் மாடுகள் ஒரு சொத்து எனும் தகுதியை இழக்கின்றன. அதைவிட்டுவிட்டு வெறும் பாலை மட்டும் வருவாயாக எடுத்துக்கொண்டால் அது விவசாயத்தைக் காட்டிலும் மோசமான நட்டமேற்படுத்தும் தொழில் (தவிடு ஒரு கிலோ 50 ரூபாய் என்பது உங்களுக்கு தெரியுமா). பசுப் பொறுக்கிகளின் இந்த நடவடிக்கைகள் மூலம் இன்னும் சில மாதங்களில் மாடு விற்பனைத் தொழில் சரிவை சந்திக்கும்போது விவசாயிகள் தங்கள் சொத்தின் மதிப்பை இழப்பார்கள். அவர்கள் நட்டத்தோடு மாடு வளர்க்கலாம் அல்லது மாடு வளர்ப்பை கைவிடலாம். பெருந்தொகையான விவசாயிகள் மாடு வளர்ப்பை கைவிட்டால் வைக்கோல் விலை சரிந்து விவசாயி இன்னும் நட்டப்படுவான். அதோடு பால் உற்பத்தி குறைந்து அதன் விலை கணிசமாக அதிகரிக்கும்.
வேறொரு தளத்தில் மாடுகள் எண்ணிக்கை கூடும். வயதான மாடுகள் கொல்லப்படாமல் இருப்பதால் உருவாகும் விளைவு இது. காற்றில் கலக்கும் மீத்தேனின் பெரும்பங்கு கால்நடை சாணத்தால் உருவாகிறது. பராமரிப்பு செலவு கணிசமாக கூடி மாடுகளை வீதிகளில் கைவிடும் போக்கு அதிகரிக்கும். எளிதில் நோய்வாய்படும் வயதான மாடுகள் மற்ற மாடுகளுக்கும் நோய்களை பரப்பும். கால்நடை பராமரிப்புக்கு என அரசு செலவிடும் தொகை அதிகரிக்கும். ஏற்கனவே எல்லா வரி வருவாயையும் இழந்து பராரியாக நிற்கும் மாநில அரசும் மாட்டுக்கு கருணை காட்டுமா?
மாட்டுத்தோல் வியாபாரம் மற்றும் இறைச்சி விற்பனை ஆகியவை முஸ்லீம்களின் தொழில் எனும் நம்பிக்கை பரவலாக இருக்கிறது. ஆகவே சாகப்போவது அவந்தானே எனும் சைக்கோத்தனமான சந்தோஷம் பல இந்துத்துவ கள்ளக்காதலர்கள்களுக்கு இருக்கிறார்கள். யதார்த்தம் என்னவென்றால் அவர்களுக்கு வேறு மாற்று தொழில்கள் கிடைத்துவிடும். போக்கிடம் இன்றி மாட்டப்போவது பசுவை பூஜிக்கும் இந்து விவசாயிகள்தான்.
மயிருக்குக்கூட ஆகாத மத நம்பிக்கைகள் மூலம் நாம் விவசாயத்தையே வாழ்க்கை ஆதாரமாக கொண்டிருக்கும் நாட்டின் பெரும்பான்மை மக்களை மரண விளிம்பில் தள்ளுகிறோம். விவசாயி இன்னும் மோசமான நட்டத்தை எதிர்கொண்டால் என்னாகும், இன்னும் பெருந்தொகையான மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்தால் என்னாகும்? இந்திய பொருளாதாரத்தையும் மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தையும் முற்றிலுமாக நிர்மூலமாக்கவல்ல ஒரு பிரச்சினையை வெறும் மதநம்பிக்கை சார்ந்து மட்டும் பார்க்கலாமா எனும் குறைந்தபட்ச யோசனையைக்கூட செய்யாத அரசு மற்றும் கட்சிகளை வைத்துக்கொண்டுதான் மிடில்க்ளாஸ் அப்பாவிகள் வல்லரசு சுய இன்பத்தில் திளைக்கிறார்கள்.
அடுத்த பெரும் பிரச்சினை கட்டாய ஹிந்தி. (தொடரும்)