சுவாதி கொலை வழக்கு படத்தின் இயக்குனர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவன சுவாதி கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் இந்த கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவார தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்சார வயரை கடித்து மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
சுவாதி கொலை செய்யப்பட்ட உண்மை சம்பவம் தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. ஜெய சுபாஸ்ரீ என்ற சினிமா நிறுவனம் தயாரிப்பில் சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் இயக்குநர் ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இக்காட்சிகளில் போலிஸாரின் அத்துமீறல்கள் வெட்டவெளிச்சமாக்கப்பட்டன.
இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் கடந்த 31ம் தேதி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் எங்களிடம் எந்த முன் அனுமதியும் இல்லாமல் இப்படம் எடுத்துள்ளனர். எனவே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
என் மகள் இறந்து ஓராண்டு ஆன நிலையில் நாங்கள் அவளைப் பற்றிய நினைவுகளை மறக்க முடியாமல் இருக்கிறோம். இந்நிலையில் சுவாதி கொலை வழக்கு என்று என் மகள் பெயரில் வெளியாக உள்ள சினிமா டிரெயிலரைப் பார்த்து எனது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.படத்தில் எனது மகளின் வாழ்க்கையை வேண்டுமென்றே தவறாக சித்தரித்து நிறைய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அறிகிறேன். இது எங்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும் என மகள் கொலை வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட வழக்கு. இதனால் அது தொடர்பான படத்தை எடுத்து வெளியிடுவது சட்ட விரோதமானதாகும். ஆகவே இப்படத்தை வெளியிடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கும்படி கோரியிருந்தார்.
இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அப்படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன், சுவாதியை படத்தில் தவறாக சித்தரிக்கவில்லை. படத்தை சுவாதியின் பெற்றோரிடம் திரையிட்டு காட்ட தயாராக இருக்கிறோம். அதுபோல் இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தை சுவாதி குடும்பத்தாருக்கும் ராம்குமார் குடும்பத்தாருக்கும் தர தயாராக இருக்கிறோம் என்றார்.
இதனிடையே சுவாதியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி அலுவலகத்தில் இருந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இந்த புகார் மனு ஒப்படைக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சுவாதியின் பெற்றோரிடம் திரைப்படம் எடுப்பது குறித்து இயக்குனர் தரப்பில் அனுமதி கேட்கவில்லை என்பது தெரிய வந்தது.இந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சுவாதியின் பெற்றோரிடம் திரைப்படம் எடுப்பது குறித்து இயக்குனர் தரப்பில் அனுமதி கேட்கவில்லை என்பது தெரிய வந்தது.