WordPress database error: [You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'FROM 4bz_posts WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_...' at line 2]
SELECT SQL_CALC_FOUND_ROWS all FROM 4bz_posts WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_posts.post_status = 'publish'))) ORDER BY 4bz_posts.post_date DESC LIMIT 0, 15

அரசியலிலும், இலக்கியத்திலும் கவிஞர் டயமண்டுவின் லாபி உலகப்பிரசித்தி பெற்றது. தேசிய விருதுகள் பல வாங்கிக்குவித்தது போதாதென்று இந்த ஆண்டு ஞானபீடை விருதை அநேகமாகக் கைப்பற்றிவிடுவார் என்ற அச்சங்கள் இலக்கிய ஏரியாவில் படபடக்கின்றன.

எங்கெல்லாம் அநீதி நடக்கவிருக்கிறதோ அங்கெல்லாம் தனது குரலை ஓங்கி உறுமும் ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகத்துக்கு நடக்கவிருக்கும் மாபெரும் அநீதி என்கிறார்.

இதோ அவரது ஆதங்கம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயிடுவை இதற்காகச் சந்திக்கவுள்ளனர் என்று கேள்விப்பட்டேன்.. பாரதிய ஜனதாக் கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பொறுப்பிலிருப்பவர்கள் சிலர் இதற்கான தனிமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.தருண் விஜயை அழைத்துக் கூட்டம் நடத்தியது, மோடி கவிதைகளை வெளியிட்டது என அவர் சென்ற சில ஆண்டுகளாக  படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார். மோடி எதிர்ப்பில் அன்றாடம் குமுறும் நம் ஊடகங்கள்,அறிவுஜீவிகள்கூட இச்செயல்களைப்பற்றி ஏதும் சொல்லாமல் அடக்கியேவாசித்தன. ஆகவே ஐயம் உறுதியாகிறது.

 

இது வெறும் வதந்தியாக இருந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால் தமிழ் இலக்கியம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சிறுமைகளில் ஒன்றாக இது இருக்கும்.  இன்று இந்திய இலக்கியச் சூழலில் தமிழுக்கு என எந்த மதிப்பும் கிடையாது. காரணம், நாம் தேசிய அளவில் முன்னிறுத்தும் படைப்பாளிகள் பெரும்பாலும் எவரும் இலக்கியப்பெறுமதி கொண்டவர்கள் அல்ல. அகிலன்,நா.பார்த்தசாரதி, சிவசங்கரி முதல் பாமா, பெருமாள் முருகன் வரை. ஆனால் அவ்வரிசையிலேயே கூட இறுதியாகச் சேர்க்கப்பட வேண்டியவரான வைரமுத்து ஞானபீடம் பெறுவார் என்றால் தமிழிலக்கியச் சூழல் தன்னைத்த்தானே அவமதித்துக்கொள்வதாகவே பொருள்படும்.

 

இது ஏன் நிகழ்கிறது என்று நாம் பார்க்கவேண்டும். இங்கே சமநிலையும் நேர்மையும் கொண்ட இலக்கிய விமர்சனம் இல்லை. வைரமுத்து ஒரு நல்ல படைப்பாளி அல்ல என அறியாத இலக்கியவாசகன் இல்லை. ஆனால் அவரைப்பற்றி அப்படி தெளிவாக மதிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு நல்ல விமர்சனக் கட்டுரை தமிழிலக்கிய சூழலில் இருந்து எழுதப்பட்டிருக்காது. அந்த மதிப்பீடுகள் செவிச்சொற்களாகவே சுழன்றுவரும். ஆனால் அசோகமித்திரன் பற்றியும் சுந்தர ராமசாமி பற்றியுமெல்லாம் பக்கம் பக்கமாக வசைகளும் நிராகரிப்புகளும் எழுதப்பட்டிருக்கும். அரிதாகவே நல்லசொற்கள் தென்படும்.

 

ஏனென்றால் நல்ல இலக்கியத்தை, அழகியல்மரபை நிராகரிக்கும் தெருமுனை அரசியல் எழுத்தாளர்கள் இலக்கியத்திற்கும் இலக்கியவாதிகளுக்கும் எதிராக சலிக்காமல் எழுதிக்குவித்திருப்பார்கள். இலக்கியத்திற்குள் இருக்கும் உள்குத்துகள் மற்றும் காழ்ப்புகளால் இலக்கியவாதிகளாலும் அவை  எழுதப்பட்டிருக்கும். ஆனால் தமிழின் மையஓட்டமான அதிகார முகங்கள் பற்றி ஆழமான அமைதியே இருக்கும்.ஏன் வைரமுத்து குறித்து எதுவும் எழுதப்படுவதில்லை? ஏனென்றால் பொதுவாக தமிழ்ச்சூழலில் இலக்கியவாதிகளின் ஆவேசமெல்லாம் அதிகாரமேதுமில்லாத அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்களை நோக்கியே திரும்பியிருக்கும். வைரமுத்து போன்ற அதிகாரத்திற்கு அணுக்கமானவர்களைப்பற்றி எவரும் வாய் திறப்பதில்லை.அந்த அதிகாரம் கும்பலதிகாரமாக இருந்தாலும் அப்படியே.

 

உதாரணம், இன்குலாப் இவ்வருடச் சாகித்ய அக்காதமி விருதுபெற்றதற்கான எதிர்வினைகள். சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச் சிற்றிதழ்சார் இலக்கியமரபு இன்குலாபை ஓர் இலக்கியவாதியாக கருதியதில்லை. எந்த எழுத்தாளரும் அவரைப்பற்றி பேசியதில்லை. அவரே அதைப்பற்றி கசந்து கூறியிருக்கிறார். இப்போதும் அவருடைய கவிதையை தனிப்பேச்சில் ஏற்றுக்கொள்ளும் இலக்கியவாதியோ வாசகனோ இல்லை ஆனால் அவருக்கு சாகித்ய அக்காதமி கொடுக்கப்பட்டபோது நானறிந்து லட்சுமி மணிவண்ணனும் நானும் மட்டுமே எதிர்வினையாற்றினோம். மற்றவர்களின் நிலைபாடு  ‘எதற்கு வம்பு’ என்பதே.வசைக்கும்பலைக் கண்ட அச்சமே காரணம்.  இந்த தயக்கத்திலிருந்தே வைரமுத்து போன்றவர்கள் மேலெழுந்து செல்கிறார்கள். அவருக்கு இங்கிருப்பவர்களின் இடமென்ன இயல்பென்ன என நன்றாகவே தெரியும்.

 

ஆகவே, வேறுவழியில்லாமல் என் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன்.இவ்விருது அளிக்கப்பட்டால்கூட தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழல் அந்தரங்கமாக முணுமுணுத்துக்கொள்ளுமே ஒழிய வாய்திறந்து எதிர்ப்பைப் பதிவுசெய்யப்போவதில்லை. என் குரல் அகிலனுக்கு அளிக்கப்பட்ட ஞானபீடத்திற்கு எதிராக எழுந்த சுந்தர ராமசாமியின் குரலுக்கு ஒரு சமகாலநீட்சி என சிலரேனும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

 

வைரமுத்து தமிழின் வளமான இலக்கியமரபின் தொடர்ச்சி அல்ல. எவ்வகையிலும் நவீனத்தமிழிலக்கியத்தின் முகம் அல்ல. அவர் ஒரு பரப்பியல் எழுத்தாளர், இலக்கியமறியா பொதுவாசகர்களுக்கு மட்டும் உரியவர். அவருடைய எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் என்று கருதப்படும் மொழியமைதி, வடிவ ஒருமை, அந்தரங்கநேர்மை, நுண்மடிப்புகள் கொண்டது அல்ல. செயற்கையாக செய்யப்பட்டவை அவை.

 

ஞானபீடம் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளான மூத்தபடைப்பாளிகளுக்கே இங்கு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. பிற இந்தியமொழிகளில் அவ்விருதைப்பெற்றவர்களின் பெரும்பாலானவர்கள் இந்திய இலக்கிய மேதைகள். அவ்வரிசையில் வைரமுத்து தமிழின் பிரதிநிதியாக வைக்கப்படுவாரென்றால் அது தமிழிலக்கியச்சூழலை சிறுமைசெய்வதாகவே அமையும்.  தமிழிலக்கியத்தையே அவரைக்கொண்டு பிறர் மதிப்பிட ஏதுவாகும். ஆகவே இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய முயற்சி.

 

இது ஓர் அமைப்பு ஒருவருக்கு விருது அளிக்கிறது என்னும் தனிநிகழ்வு அல்ல. ஞானபீடம் தமிழின் ஒரு சித்திரக்குள்ளரை இந்தியாவின் பேருருவப் படைப்பாளிகளின் வரிசையில் நிற்கவைத்து தமிழில் இவ்வளவே இலக்கியம் உள்ளது, தமிழுக்கு இதுவே தரம் என்று சொல்கிறது என்பதே இவ்விருதின் உண்மையான அர்த்தம் . தமிழை மட்டுமல்ல ஞானபீடம் தன்னைத்தானேகூட இதன் வழியாக மட்டம்தட்டிக்கொள்கிறது.

சென்ற ஆண்டுகளில் இந்தியச்சூழலில் இன்று அறியப்பட்ட எந்த மேதைக்கும் நிகரான பெரும்படைப்பாளிகள் சிலர் தமிழிலிருந்து ஞானபீடத்திற்கு முன்வைக்கப்பட்டனர். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் என. அவர்கள் அனைவரும் திறமையான உள்குத்துகள் வழியாக தோற்கடிக்கப்பட்டனர். இன்று வைரமுத்து மேலேறிச்செல்கிறார்

கி.ராவுக்கு ஞானபீடம் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் என நான் எழுதியபோது, அதற்கு கல்வித்துறையின் சிறிய ஆதரவு இருந்தால்கூடப்போதும் என்றபோது, தமிழ்ச்சூழலில் இருந்து சிறிய அளவில்கூட ஆதரவு எழவில்லை. இலக்கியவாதிகள்கூட குரலெழுப்பவில்லை. அதற்குப்பின்னாலிருப்பது இத்தகைய அரசியல் கணக்குகள், சாதிக்கணக்குகள்.

என்ன துயரம் என்றால் உள்ளே பல்வேறு அதிகார விளையாட்டுக்களுக்கு உடன்பட்டு இந்தமுயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களே வெளியே இலக்கியக்காவலர்களாகப் பேசிக்கொண்டும் இருப்பார்கள். இதில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் பெயர்களையும் வெளிக்கொண்டுவந்து இவர்களின் தரமென்ன என்று இலக்கியவாசகர்கள் முன் வெளிப்படுத்தவேண்டும். இவர்கள் தமிழுக்கு இயற்றிய அநீதி என்ன என்று அடுத்த தலைமுறை உணரும்படிச் செய்யவேண்டும்

 

அனைத்துக்கும் மேலாக ஒன்றைச் சொல்லிக்கொள்வேன், இலக்கிய மதிப்பு என்பது அமைப்புகளின் அடையாளங்களால் அமைவதல்ல. ஞானபீடம் என்ன நோபல் கூட எவரையும் இலக்கியவாதியாக நிலைநாட்டுவதில்லை. அகிலனின் மதிப்பு இந்திய இலக்கியத்தில் என்ன? ஏன் தமிழில் அவருடைய இடம் என்ன? வைரமுத்து தமிழின் முகம் அல்ல என மிக எளிதில் வலுவான சில கட்டுரைகள் வழியாக தேசிய அளவிலேயே இலக்கியவாசகர்களிடம் நிறுவிவிடமுடியும். இதனால் அவருக்குக் கிடைப்பது இலக்கியத்துடன் சம்பந்தமற்ற ஒரு தற்காலிகப்புகழ் மட்டுமே. உண்மையான சோகம் என்பது இதன்மூலம் இந்தியாவின் பொதுவாசகனிடம் உள்ள தமிழைநோக்கிய இழிவான நோக்கு உறுதிப்படுத்தப்படும் என்பதும் , இவ்விருது வாழும் முன்னோடிகளை அவமதிப்பதாக ஆகும் என்பதும் மட்டுமே

வைரமுத்து சிறந்த பாடலாசிரியர். நல்ல கவிஞரோ எழுத்தாளரோ அல்ல. அவர் தமிழ்நவீன இலக்கியச் சூழலின் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி அல்ல. அதிகார அமைப்புகளினூடாகச் சென்று அவர் இவ்வங்கீகாரத்தைப் பெறுவார் என்றால் அது தமிழுக்கு இழிவு.   இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், அதன்பொருட்டு கருத்துத்தெரிவிக்கும் துணிவுமுள்ளவர்கள் தங்கள் எதிர்ப்பை ஆங்கிலத்தில் எழுதி ஞானபீட அமைப்பின் செயலருக்கு அனுப்பவேண்டும். அதிகார விளையாட்டுக்களை இலக்கியம் எளிதில் கடக்க முடியாது. ஆனால் தமிழிலக்கியச்சூழலின் எதிர்ப்பை மீறியே இவ்விருது அளிக்கப்பட்டது என்பதைப் பதிவுசெய்வோம். இத்தருணம் கடந்தால் நம் தலைமுறைகள் முன் சிறுமையுடன் நின்றிருப்போம்.

Related Images: