தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக்கள் எதுவும் அவ்வளவு ஸ்மூத்தாக நடந்ததில்லை… முடிந்ததில்லை. எப்பவும் எதிர் அணிக்கும் பொறுப்பில் இருக்கிற அணிக்கும் ஒரு வாக்கு வாதம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு, யாரையும் ஒரு வார்த்தை பேச விடாமல் அரை மணி நேரத்தில் முடிந்தது. எல்லாப் புகழும் விஷாலுக்கே?
10 மணிக்கு துவங்க வேண்டிய பொதுக்குழு 12 மணிக்கு துவங்கியது. ஆக்ரோஷத்துடன் வந்திருப்பவர்களை மெல்ல தணிப்பதற்கான நேரம் கடத்தல்தான் இது என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டாலும், அதே ஸ்பிரிட்டோடு உள்ளே நுழைந்தது ஒரு கோவக்கார டீம்! யார் யாரெல்லாம் எதிரணியை சேர்ந்தவர்களோ… அவர்களையெல்லாம் மேடையில் ஏற்றி குளிர்விக்க நினைத்தார் சங்கத்தின் செயலாளர் கதிரேசன். எஸ்.ஏ.சி, எல் எம் எம் முரளி, டி.சிவா, போன்ற மூத்த தயாரிப்பாளர்கள் ஓரளவுக்கு இதற்கு இசைந்தாலும், மேடைக்கு அழைத்த பின்பும் கையெடுத்து கும்பிட்டபடி கீழேயே அமர்ந்து கொண்டார் டி.ராஜேந்தர்.
விஷால் தன் தலைமையுரையை ஆரம்பித்ததுதான் தாமதம். நீங்க ஆளுங்கட்சிக்கு எதிரா பேசுறீங்க. செயல்படுறீங்க. அதனால் உங்க பதவியை ராஜினாமா பண்ணிட்டு பேசுங்க என்று முதல் குரல் கொடுத்தார் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன். அதற்கப்புறம் சுமார் அரை மணி நேரம் வெங்கல கடையில் யானை புகுந்த கதைதான். யாரும் யாரையும் பேச விடவில்லை. ஒரே கூச்சல்… குழப்பம். டி.ராஜேந்தர், சேரன், சுரேஷ்காமாட்சி, ஜே.கே.ரித்தீஷ், ராதாகிருஷ்ணன், விடியல்ராஜு, சூப்பர்குட் பாபு, கிஷோர், போன்றவர்கள் முன் வரிசைக்கு பாய்ந்தபடி கூக்குரல் எழுப்பினார்கள்.
சிலர் மைக்கை பிடுங்கினார்கள். இதற்கப்புறமும் கூட்டம் நிம்மதியாக நடக்காது என்பதை புரிந்து கொண்ட விஷால், யாருமே எதிர்பாராத விதத்தில் சுமார் ஆறேழு பேர் கொண்ட பொறுப்பாளர்களுடன் தேசிய கீதம் பாட ஆரம்பித்துவிட்டார். உரத்த குரலில் அவர் தேசிய கீதம் பாடியது கூட பிரச்சனையில்லை. அட்டன்ஷனில் பாடப்பட வேண்டிய தேசிய கீதம், ஆக்ரோஷமான கையசைப்புடன் பாடப்பட்டது. பாடி முடித்த அடுத்த நிமிஷமே இடத்தை காலி பண்ணிவிட்டு வெளியேறினார்கள்.
இந்த திடீர் திருப்பத்தை எதிர்பார்க்காத எதிரணியினர் அங்கேயே நின்றபடி அடுத்த திட்டம் குறித்து விவாதித்தார்கள்.
இந்த கூட்டத்தை பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன், ‘கூட்டம் நடந்தது. பொதுக்குழு செல்லும்’ என்று கூறிவிட்டு கிளம்பியதாக விஷால் அணியினர் கூறினார்கள்.
இந்த களேபரத்தை தொடர்ந்து வெகு விரைவில் ஒரு நம்பிக்கையில்லாத தீர்மான கூட்டம் வரும் போலதான் தெரிகிறது. அந்த கூட்டத்தில் யார் தலையில் சூடம் கொளுத்தப் போகிறார்களோ?