A3V சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
சுமார் நான்கு வருட தயாரிப்பில் மூன்று தயாரிப்பாளர்கள் மாறிய இப்படத்தை பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இந்தப்படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பூபதி பாண்டியன் பேசும்போது“எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது.. ஆனால் படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருப்பதை பார்த்து பின்வாங்கிவிட்டார் போல தெரிகிறது. அதன்பின் தான் விமல் இந்தப்படத்தை தானே தயாரிக்க முன்வந்தார். எனக்கு ஒரு ராசி இருக்கிறது.. என் டைரக்சனில் நடித்த ஹீரோக்கள் தனுஷ், விஷால் ஆகியோர் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள். அந்தவகையில் விமலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவருக்கு படத்தயாரிப்பில் உறுதுணையாக நின்ற சிங்காரவேலனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..
இந்தப்படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டுலதான் ஒரு விஷயத்தை கவனிச்சேன். நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியலை. அந்த அளவுக்கு நம்ம பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா தொலைச்சுட்டு வர்றோம். ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பின்போது எனக்கும் விமலுக்கும் சின்னதாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு நாட்கள் பேசமால் இருந்தோம்.. ஆனால் பின்னர்தான் பேசாமல் இருந்ததை விட பேசியே இருக்கலாம் என சொல்லும் வகையில் தனித்தனியாக எங்கள் உதவியாளர்களிடம் புலம்பிக்கொண்டு இருந்தோம்.
இந்தப்படத்தில் ஒளிப்பதிவு செய்துள்ள சூரஜ் நல்லுசாமி, ‘அவள் அப்படித்தான்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளரின் மகன் என்பதில் எனக்கு பெருமைதான். இசையமைப்பாளர் பிஜாய் ஜாக்ஸ், தெனாலி கமல் போல எதற்கெடுத்தாலும் பயப்படுவார். ஆனால் அது படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான். இந்தப்படத்தின் எடிட்டர் கோபியை நான் இயக்கிய ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின்போது உதவியாளராக சேர்த்துவிட்டேன்.. இன்று என் படத்துக்கே எடிட்டராக மாறி எனக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இடைவேளைக்குப்பின் இடம்பெற்றுள்ள சரண்யா-நீலிமா காமெடி மிக முக்கியமாக பேசப்படும்” என்றார்.
வரும் ஜன-12ல் பொங்கல் வெளியீடாக இந்தப்படம் திரைக்கு வருகிறது..