தற்சார்போடு தாமாக நடத்தி வந்த கால் டாக்சி தொழில் தற்போது ஓலா, உபர் (OLA, UBER) போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கு சென்றுவிட்டதால், இன்று அந்நிறுவனங்களில் மிகக் குறைந்த வருமானத்துடன் பணியாற்றும் நிலைக்கு கால்டாக்சி ஓட்டுநர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மிகப்பெரும் சந்தை இன்று இந்த இரு பெரு நிறுவனங்களின் அதிகாரப்பிடிக்குள் சிக்கி நிற்கிறது. ஒரு அடிப்படைத் தொழிலாளர் உரிமை கூட கால்டாக்சி டிரைவர்களுக்கு இந்த ஓட்டுநர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்த நிறுவனங்களின் உச்சகட்ட சுரண்டலின் காரணமாக ஓட்டுநர்கள் எந்த லாபமும் இன்றி, ஓய்வும் இன்றி தொடர்ச்சியான பணிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வாரத்தின் ஏழு நாளுமே அவர்கள் பணிசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படி விடுப்பு எடுக்கும் பட்சத்தில் டீசல் போடும் செலவு கூட மிஞ்சுவதில்லை என்பதே ஓட்டுநர்களின் குரலாக இருக்கிறது. இவர்கள் தங்கள் உரிமைக்காக கேள்வி எழுப்பினாலும், உடனடியாக அவர்களை மரியாதையின்றி தூக்கி எறியும் நிலை இருக்கிறது. பணிப்பாதுகாப்பு அற்ற, தொழிலாளர் உரிமை அற்ற தொழிலாக கால்டாக்சி ஓட்டுநர்களின் தொழிலை இந்த நிறுவனங்கள் மாற்றியிருக்கின்றன.
ஆரம்பத்தில் இந்த நிறுவனங்கள் காட்டிய உத்தரவாதத்தை நம்பி, கடனுக்கு வண்டி வாங்கி கால் டாக்சி ஓட்ட ஆரம்பித்த பலர், இன்று கடனை திருப்பிக் கட்ட முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கடன் சுமை தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இதே உபெர் நிறுவனத்துக்கு எதிராக பிரேசில், ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் சுரண்டலுக்கு உள்ளான ஓட்டுநர்கள் மிகப் பெரிய போராட்டத்தினை நடத்தியுள்ளார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளை இந்திய அரசு உருவாக்கிட வேண்டும்.
இந்த சுரண்டல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றால், கால்டாக்சி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா கார்ப்பரேட் முதலாளிகளுக்கே சாதகமாக உள்ளதால் அதனை உடனடியாக கைவிட வேண்டும். 8 மணி நேர பணி என்ற தொழிலாளர் உரிமை கால்டாக்சி ஓட்டுநர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவர்களின் உழைப்பிற்கு முறையான பங்கினை வழங்கிட வேண்டும்.