இமயமலைக்கு ஆன்மீக பயணமாக சென்று அங்கே ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் பாஜக முதல்வரான பிரேம் குமார் துமாலை ஆன்மீகமாக சந்தித்துவிட்டு வந்த கையோடு சென்னையில் பேட்டி கொடுத்தார்.
என்னை பின்னாலிருந்து இயக்குவது பா.ஜ.க அல்ல. கடவுளும், மக்களுமே என்று பேட்டியின் போது அழுத்திச் சொன்னார் ரஜினி காந்த். வேற வழியில்லை. இல்லாவிட்டால் இவரையும் காவிக் கோஷ்டி என்று மக்கள் நினைத்துவிடுவார்களே என்கிற பதட்டம் இருக்கிறது அவரிடம்.
ரதயாத்திரை உள்ளே நுழைந்த நேரம், சொல்லி வைத்தார் போல் பெரியாரின் சிலையை தலையை வெட்டிப் போட்டது பா.ஜ.க கோஷ்டி. கடைசியில் ஒரு போலிஸ்காரர் தான் தலையை வெட்டினார் என்று அமுக்கிக் கொண்டார்கள். ஆனால் ரத யாத்திரைக்கு தமிழ்நாடெங்கும் ஒலித்த எதிர்ப்புக் குரல்களைக் கண்டு அவர்கள் ரகசியமாக சந்தோஷப் பட்டுக் கொள்வார்கள். ஏனென்றால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறவேண்டும் என்பது தானே அவர்கள் நோக்கம்.
1990களில் அத்வானி ரதயாத்திரை நடத்தி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து முடித்தார். இப்போது இது எதுவும் அரசியல் ரதயாத்திரை அல்ல ஏதோ மத அமைப்பு யாத்திரை செய்கிறது என்று சொல்லும் இந்த யாத்திரையை ஆரம்பித்து வைத்தவர் மத்தியப் பிரதேச பா.ஜ.க முதல்வர் யோகி ஆவார். இந்த யாத்திரை செல்லும் இடமெல்லாம் இதை ஆதரித்து கூடவே ஆர்ப்பரித்து செல்பவர்கள் ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் , பி.ஜே.பி வகையறாவினர் தான். இவ்வளவு இருந்தும் இதை அரசியலற்ற ஏதோ மத அமைப்பு செய்த யாத்திரை என்று பச்சையாகப் புளுக வேறு செய்கிறார்கள்.
இந்த நிலையில் ரஜினியின் வார்த்தைகள் பா.ஜ.கவின் நடவடிக்கைகள் மேல் காட்டமாக விழுந்திருக்கின்றன. “ரதயாத்திரை நடக்கலாம். ஆனால் அது மதக்கலவரத்துக்கு வித்திடக்கூடாது..” என்று இன்றைய பேட்டியின் போது கூறியிருக்கிறார் ரஜினி. அத்துடன் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என்றும் கூறினார் ரஜினி.
பா.ஜ.கவின் ஊதுகுழலாகவே ரஜினி உருவாக்கப்பட்டாலும் அதை எதிர்த்துச் செல்ல வேண்டிய நிலையை பா.ஜ.க மேலும் மேலும் ரஜினிக்கு ஏற்படுத்திவருகிறது.