விமர்சனம் போன்ற ஒரு அயிட்டத்தில் இது வராது. தெள்ளத்தெளிவாய் முதலில் ஓன்று சொல்லிவிட வேண்டும். இது மிக நல்ல படம். பாசாங்கில்லாத, நேர்மையான, நேரடியான படம்.தமிழில் முதன்முதலாக அசலான ஒரு சீரிய முயற்சி.
ஒரு நீண்ட ஆவணம். தலைமுறைகளின் பெருமுச்சு கேட்கிற இந்த ஆவணத்தில் புனைவின் பாஷை கூட கான்ஷியசுடன் இருப்பதில் பிரமித்தேன். துவக்க காட்சி மெல்ல நடந்து கதைக்கு துவங்கும் போது பெருமை தாங்கவில்லை. இடைவேளைக்கு அப்புறம் சொல்லி வந்த கதையின் பரிமாணத்தை சொல்லும் ஒரு பாடலில் எல்லாமிருக்கிறது. படம் முடிவதெல்லாம் அசாதாரணம். இயக்குனர் மனதில் தொகுத்து பார்த்திராமல் இந்தப் படத்தை எடுத்திருக்கவே முடியாது.
ஆனந்துக்கு, குழுவினருக்கு, இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
நாம் யோசிக்கவே ஆகாத பிரதேசங்களில் எல்லாம் கடுமையான மனித உழைப்பு எவ்விதமான நம்பிக்கைகளில் நடந்து கொண்டிருக்கிறது என்பது இருக்கட்டும், அப்படி உழைக்கிறவர்களின் வாழ்விற்கு நீதி கேட்டுப் போராடுகிறவர்களும் இருக்கட்டும், பஞ்சப் பராரிகளின் கடைசி கோவணத்தை உருவிப் போகிறவர்களின் முற்றுகைக் கூட இருக்கட்டும், எல்லாவற்றிற்கும் மௌன சாட்சியாய் நிற்கிற அந்த மலைகள் கூட நம்முடன் உரையாடுவது போலிருக்கிறது. மனதில் கொதிப்பு அடங்காமல் பரவுகிற ஆற்றாமைக்கு லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்.
மேற்குத் தொடர்ச்சி மலை – படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
முகநூலில் எம்.கே.மணி Mani Mkmani