திருநெல்வேலியின் இன்னொரு முகத்தை பரியேறும் பெருமாள் ஊடாக பார்த்தேன். கோர முகமெல்லாம் கிடையாது. யதார்த்தமான முகம். புளியங்குளத்துக்கும் புளியமங்களத்துக்கும் (அரக்கோணத்தில் நான் பிறந்த கிராமம்) ஒரே ஒரு வித்தியாசம் தான். புளியமங்கலம் அரக்கோணத்தில் இருக்கிறது. புளியங்குளம் நெல்லையில் இருக்கிறது. அப்புறம் படத்தில் பார்த்த பரியேறும் பெருமாள் B.A.B.L.வேறு யாரும் இல்லை.. என் அப்பா சிவலிங்கம் M.A. இப்படித்தான் படம் முழுக்க எங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொண்டிருந்தேன். பரியன் அப்பா அறிமுகக் காட்சியில் என்னையறியாமல் வெடித்து அழுதேன். எந்த அளவுக்கு அழுதேன் என்றால், கறுப்பி இறந்தபோது அழுததைவிட இம்முறை கதறி அழுதேன்.
பரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம். ஜோ-க்கள் பரியன்களின் வாழ்க்கையில் தேவதைகளாக வருவார்கள். கூடவே கொஞ்சம் சனியையும் அழைத்து வருவார்கள். ஆனால், அது அவர்கள் தவறு கிடையாது. தலைமுறை தலைமுறையாக பிடித்திருக்கும் சனி. பரியனின் தோழன் ஆனந்தும் ஒரு தேவதை என்றே சொல்ல வேண்டும். இறுதியாக ஒன்று புரிந்தது … பரியனாக கைகளில் நோட்டு புத்தகங்களுடன் உலகை புரிந்துக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பரியேறும் பெருமாள் சொல்வது… `பேயாகப் படிக்கணும். ஏளனப் பார்வை வீசிய கண்கள் முன் தலை நிமிர்ந்து நடக்கணும்’.
HatsOff to the whole team!