அஜீத்,ஹெச்.வினோத் கூட்டணியின் ‘வலிமை’படப்பிடிப்பு இவ்வார இறுதியில் துவங்குகிறது என்றாலும் படம் ரிலீஸாகவிருப்பதென்னவோ அடுத்த தீபாவளிக்குத்தான் என்று தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதால் அவரது ரசிகர்கள் பயங்கர அப்செட் ஆகியுள்ளனர்.
அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டான நிலையில், இயக்குநர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இருவரும் மீண்டும் இணைந்து ’வலிமை’ படத்தை உருவாக்கி வருகிறார்கள்.இந்தப் படத்தில் அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனம் நடத்திய விருது விழாவில் கலந்துகொண்ட போனி கபூர், டிசம்பர் 13-ம் தேதி,அதாவது இன்னும் 4 தினங்களில் வலிமை படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். போனிகபூரின் இத்தகவலால் அஜீத் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த தீபாவளி வரைக்கும் வேற படம் இல்லைன்னா, இன்னும் ஒரு வருஷத்துக்கு காத்திருக்கணுமா என்று புலம்பி வருகின்றனர்.