இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது.
வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து வருகிறது. மிகக் குறைந்த வருடங்களிலேயே இந்நிறுவனம் சுமார் 200 திரைப்படங்களை வெளியிட்ட பெருமையைப் பெற்றிருக்கிறது.
தர்பார் திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுவதற்கு எங்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தவர் கல் ராமன், தலைமை டிஜிட்டல் அதிகாரி, சாம்சுங் அமெரிக்கா. இவர் ஒரு தமிழர். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு மதிநுட்பமான தொழிலதிபர்.இப்படம், ரஜினிகாந்த்துடன் இயக்குநர் முருகதாஸ் இணைந்து பணியாற்றும் முதல் படம் என்பதால் திரைப்பட ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்காவெங்கும் சுமார் 250 க்கும் மேற்பட்ட திரைகளை ஆரம்பக் கட்டமாக கொண்டிருக்கும் இப்படக்குழு, இந்த எண்ணிக்கை மதிப்பீடுகள் நிச்சயமாக அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறது.ரஜினிகாந்தின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு சந்தையான அமெரிக்காவில், அதுவும் வேறு எந்த கோலிவுட் நட்சத்திரங்களுடனும் ஒப்பிடமுடியாத இணையற்ற சந்தை மதிப்பைப் பெற்றிருக்கும் அவருடைய தர்பாரை வழங்குவதற்கான வாய்ப்பினை வழங்கிய வெளிநாட்டு விநியோகஸ்தர் பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு பிரைம் மீடியா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது.
ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பும், எதிர்பார்ப்பும் கொண்டிருக்கும் தர்பார் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.எனவே இப்படம் ஒரு சிறந்த வசூலை அள்ளித்தரும் எனவும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தளபதி (1991) திரைப்படத்தைத் தொடர்ந்து, அதாவது 28 ஆண்டுகளுக்குப் பின், இப்படத்தை நேர்த்தியாகக் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தப்படத்தில் இணைந்திருப்பதும், இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் இசைக்கு கிடைத்திருக்கும் மதிப்பாய்வுகளும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.