நடிகை நயன்தாராவின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாகவும் அதனால் அவர் பயங்கர அப்செட்டில் இருப்பதாவும் தகவல் வெளியாகியுள்ளது.
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘ஹீரோ’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தற்போது ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார்.நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ப்ரியா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயனே தயாரித்து வருகிறார்.
முன்னதாக, ‘ஹீரோ’ படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருந்த படத்துக்குத் தேதிகள் ஒதுக்கவிருந்தார் சிவகார்த்திகேயன். இன்னும் 20 ஆண்டுகள் கழித்து காதல் எப்படியிருக்கும் என்பதை வைத்து காமெடி கலந்த கதையொன்றைத் தயார் செய்து வைத்திருந்தார் விக்னேஷ் சிவன். அக்கதையைத் தயாரிக்க லைகா நிறுவனமும் முன்வந்தது.
ஆனால், படத்தின் பொருட்செலவைக் கணக்கில் கொண்டும் தர்பார் பட சமயத்தில் நயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்காகவும் அதன் தயாரிப்பிலிருந்து லைகா பின்வாங்கியது. இந்நிலையில், அதே கதையை வைத்து பல்வேறு தயாரிப்பாளர்களிடம் பேசினார் விக்னேஷ் சிவன். அனைவருமே தயாரிப்புச் செலவைக் காரணம் காட்டி தயங்கிய நிலையில், அந்தக் கதையை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டார் விக்னேஷ் சிவன்.
தற்போது சிவகார்த்திகேயனுக்காக வேறொரு கதையைக் குறைந்த பொருட்செலவில் பண்ணுவது போல் விக்னேஷ் சிவன் எழுதி வருகிறார். இந்தக் கதையை எழுதி முடிக்க நேரமெடுக்கும் என்பதால் தான், ‘டாக்டர்’ படத்தைத் தொடங்கிவிட்டார் சிவகார்த்திகேயன். இந்தப் படம் முடிவதற்குள், விக்னேஷ் சிவன் கதையை எழுதி முடித்து, அது சிவகார்த்திகேயனுக்குப் பிடித்து தயாரிப்பாளர் அமைந்தால் மட்டுமே இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.இன்னொரு பக்கம் நயனுடன் உல்லாசப் பயணம் மேற்கொள்வதில் காட்டும் ஆர்வத்தை கதை எழுதுவதில் காட்டாததால், அடுத்து அவர் படம் இயக்க அவ்வளவு ஆர்வமாக இல்லை என்ரும் சொல்கிறார்கள்.