தான் உண்டு தனது நடிப்பு உண்டு தனது சம்பாத்தியம் உண்டு என்று பொதுப் பிரச்சைனைகளுக்கு எப்போதும் வாயைத் திறக்காத நடிகை நயன்தாரா மருத்துவர் பிரியங்கா ரெட்டி வன்கொடுமையாளர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து துணிச்சலான ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.நேற்று (டிசம்பர் 6) அதிகாலை குற்றவாளிகள் நால்வரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதுவும், பெண் மருத்துவர் இறந்த அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுன்ட்டருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும், ஹைதராபாத் காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.

இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில்,…சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையான நாயகர்களால் இன்று உண்மையாகியிருக்கிறது. தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள்.

காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராகத் தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன்.

நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியைப் பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயம் தரும்.

மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவது, இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்குப் பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும்.

எதிர்கால உலகைப் பெண்மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும்.

RIP Priyanka Reddy என்று நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Images: