தலைவி படத்துக்கும், குயின் வெப் சீரிஸுக்கும் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 12) தீர்ப்பு வழங்கியுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் வெப் சீரிஸ் ‘குயின்’.
‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் பிரியதர்ஷினியும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். தலைவி படத்தில் கங்கணா ரணாவத்தும், தி அயர்ன் லேடி படத்தில் நித்யா மேனனும் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்கவோ, வெளியிடவோ தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் ஜெ.தீபா. இந்த மனுவுக்குப் பதில் அளிக்க கௌதம் மேனனுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், வெப் சீரிஸை பார்த்து ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என தீபா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கௌதம் மேனன் தரப்பில், இந்த தொடர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படவில்லை, குயின் என்ற புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியிடப்பட்டு, 25 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தற்போது தொடர் வெளியாகவுள்ள நிலையில் விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரர் வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதாவுடன் இருக்கவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு தன்னை வாரிசு எனக் கூறி வருகிறார். மனுதாரருக்கு இந்த வழக்கைத் தொடர எந்தவித உரிமையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இயக்குநர் ஏ.எல்.விஜய் தரப்பில், தலைவி என்ற புத்தகத்தின் அடிப்படையில்தான் படம் எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வரும் தலைவி புத்தகத்துக்கு இதுவரை யாரும் தடை கோரவில்லை. ஜெ.தீபா, ஜெயலலிதாவுக்கு சட்டபூர்வ வாரிசு என்பதற்கும் ஆதாரம் இல்லை. இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படங்களுக்குத் தடையில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தப் படம் கற்பனையானது என்று தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை குயின் சீரிஸின் முதல் தொடர் வெளியாகவுள்ளது.