பிரபல தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க இயக்குநர் மணிரத்னம் ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், அவர் முதல் பாகம் எடுக்கட்டும் இதே படத்தின் இரண்டாம் பாகத்தை நான் இயக்குகிறேன்’என்று விழா மேடையிலேயே அறிவித்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த அறிவிப்பில் ஒரு இயக்குநராக நான் மணிரத்னத்துக்கு எந்த வகியிலும் சளைத்தவனல்ல என்ற தொனி இருந்தது.
கத்தி படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் தயாரிப்பு நிறுவனமாக கால் பதித்தது லைகா. இதன் நிறுவனராக இருக்கும் சுபாஸ்கரன் அடுத்தடுத்து ரஜினியின் 2.0, தர்பார், கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய படங்களையும் பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் சுபாஸ்கரனுக்கு மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவி, இலங்கை வடகிழக்கு பகுதியில் உள்ள தமிழர்களுக்கு நூற்றுக்கணக்கான வீடுகளை கட்டித் தருவது உள்ளிட்ட சமூக சேவைகளைப் பாராட்டியே இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.அதற்காக சுபாஸ்கரனுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மணிரத்னம், சுபாஸ்கரனின் வாழ்க்கையை திரைப்படமாக இயக்கும் எண்ணம் இருப்பதாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், சுபாஸ்கரனின் வாழ்க்கையில் நிறைய சுவாரஸ்யங்கள் நிறைந்துள்ளன. ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்கும் அளவுக்கான கதை அவரது வாழ்க்கையில் உள்ளது. மணிரத்னம் பேசும்போது சுபாஸ்கரன் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் எண்ணம் இருப்பதாக சொன்னார். அவர் முதல்பாகத்தை இயக்கினால், இரண்டாவது பாகத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.