சமீபகாலமாக முகநூல் பக்கங்களில் புத்தம் புதிய படங்களின் ஹெச்.ட்.பிரிண்ட் லிங்குகளைப் போட்டு,ஏற்கனவே நொந்துபோயுள்ள தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலை சிலர் கொட்டிக்கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். அப்படி வெளியிடப்படும்போது ஒரு தயாரிப்பாளர் மனம் எவ்வளவு வேதனைப்படுகிறது என்பதை தனது முகநூல் பதிவில் கொட்டித் தீர்த்திருக்கிறார் ‘மிக மிக அவசரம்’என்கிற உலகத்தரமான படம் கொடுத்த இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி.

அவரது பதிவு இது…அமைதிப்படை 2 ,கங்காரு வெளியான பின்பு தயாரிப்பு, இயக்கம் என இரு படகினில் கால்வைக்க கொஞ்சம் அதீத தைரியம்தான் வேண்டும்.மிகுந்த பொருளாதார சிக்கலுக்கு நடுவே “மிக மிக அவசரம்” படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றேன்.குருட்டு தைரியமும்… கதையின் நம்பிக்கையும் படம் செய்து முடித்து திரும்ப வைத்தது.

பார்த்த எல்லோருமே படம் நல்லாயிருக்கு… ஆனா யாராவது ஸ்டார் இருந்தா நல்லாயிருக்குமேன்னு பேசிப் பேசியே படம் இரண்டு வருடம் இழுத்துட்டு போச்சு.
அவ்வளவு மன உளைச்சல்கள். முடங்கிக் கிடந்த பணம். அதன் வட்டி. ஆனாலும் படம் வெற்றி பெற வேண்டுமானால் சரியான வெளியீடு வேண்டும் என்பதற்காக அவ்வளவு காத்திருந்தேன்.

முதல் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனது. மீண்டும் போராட்டம். ஒரு வழியாக படம் வெளியானால்… திரையரங்குகள் கிடைத்தும் பயனில்லை என்ற நிலை! மக்கள் திரையரங்குக்கு வராத நேரமாக கொடுத்தார்கள்.

விளைவு ..இதோ இந்த லிங்கில் இரண்டரை இலட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். மூவாயிரத்திற்கும் மேல் ஷேர் ஆகியிருக்கிறது.படம் பார்த்த லிங்கின் கீழே கமெண்ட்ஸும் படம் அருமை.. அப்படி இப்படி எனப் பாராட்டி வந்திருக்கு.

இத்தனை இலட்சம் பேர் திரையரங்கில் வந்து பார்த்திருந்தால் என் பொருளாதார நிலை எவ்வளவு உயர்ந்திருக்கும்?இன்னும் எத்தனை இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம்?அல்லது எடுக்கும் அடுத்த படத்திற்கு எவ்வளவு உதவியாக இருந்தது?

எந்தப் பொருளையாவது இந்த மாதிரி இலவசமா அனுபவிக்க முடியுமா?சினிமாவிற்கு மட்டும் ஏனிந்த கேவலமான நிலை…? என் படத்தை யாரோ ஒருவன் பகிர்கிறான்… அதை எந்தவித மனப்பதட்டமுமின்றி எல்லோரும் பார்த்து ரசிக்கிறார்கள்?இது சினிமாவின் சாபக்கேடன்றி வேறென்ன சொல்ல??

படமெடுத்த எங்களை நாங்களே நொந்துகொள்வதைத் தவிர வேறென்ன விதி? என் படத்தை என் அனுமதியின்றி யாரோ ஒருவர் தன் பக்கத்தில் பகிர முடிகிறது… என்ன கொடுமை பாருங்கள்…

மக்களே… உங்களை நம்பித்தான் படமெடுக்கிறோம்… ?நீங்கள் திரையரங்கிற்கு வந்தால்தானே இந்த கலைப்பயணம்?தயவுசெய்து மனசாட்சியோடு இந்த மாதிரி லிங்கில் பகிர்வதையும்… பகிர்வதை பார்ப்பதையும் தவிருங்கள்.

வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் தயவுசெய்து இதுபோன்ற மிகப் பெரும் வலியை ஒரு நல்ல படமெடுத்த (நீங்கள் சொன்னதுதான்) தயாரிப்பாளருக்கோ இயக்குநருக்கோ தராதீர்கள்…

முகநூலில் உள்ளவர்களை எனது குடும்பமாகத்தான் பார்க்கிறேன். அதனால்தான் இந்த வேண்டுகோளையும் வைக்கிறேன்.

நன்றி

சுரேஷ் காமாட்சி,
தயாரிப்பாளர் & இயக்குநர்.

Related Images: