‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் தயாரிப்பாளரான சிவா, நடிகை ஷாலினி பாண்டே மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘அக்னிச் சிறகுகள்’. அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கச் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், சில மாதங்கள் கழித்து வெளிநாட்டுப் படப்பிடிப்புக்குச் செல்லும் போது, ஷாலினி பாண்டே நீக்கப்பட்டு அக்ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஏன் இந்த மாற்றம் என்ற குழப்பம் நீடித்தது. ஏனென்றால், ஷாலினி பாண்டே நடிக்க பல நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது இதற்கான காரணத்தைத் தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:’அக்னிச்சிறகுகள்’ என்ற படத்தை அருண் விஜய், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் தொடங்கினேன். மூன்று பேருக்குமே சரி சமமான கதாபாத்திரம். ‘அர்ஜுன் ரெட்டி’ படம் பார்த்துவிட்டு ஷாலினி பாண்டேவின் நடிப்பு நன்றாக இருந்ததால், ‘மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவி மாதிரி நடிக்க வேண்டும் என்பதால் இந்தக் கதைக்கு அவரை ஒப்பந்தம் செய்தோம்.
அப்போது 10 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு ‘100% காதல்’ என்ற படத்தில் மட்டும் நடித்து வந்தார். 100 நாட்கள் இந்தப் படத்துக்குத் தேதிகள் வேண்டும், நிறையப் பயணிக்க வேண்டும், இதில் நடிக்க நடிப்புப் பயிற்சிக்காக இயக்குநருடன் 15 நாள் வரை இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசி 35 லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தோம். படப்பிடிப்பு நாட்கள் அதிகம் என்பதால் மட்டுமே, இந்தச் சம்பளம் பேசி 15 லட்ச ரூபாய் அட்வான்ஸும் கொடுத்தோம்.
பிறகு சென்னை, கொல்கத்தா ஆகிய ஊர்களில் ஷாலினி பாண்டேவை வைத்து 27 நாட்கள் ஷுட் பண்ணினோம். இதற்குப் பிறகு அக்டோபர், நவம்பரில் அருண் விஜய் – விஜய் ஆண்டனி இருவருடைய தேதிகள் ஒன்றுபோல் வேண்டும் என்பதாலேயே 6 மாதம் காத்திருந்தோம். இருவருமே பிஸியாக இருந்தார்கள். ஆகையால், இருவருடைய தேதிகள் ஒன்றுபோல் 45 நாட்கள் வாங்கிவிட்டு, ஷாலினி பாண்டேவிடம் சொல்லி தேதிகளையும் வாங்கி வைத்திருந்தோம்.
அந்தச் சமயத்தில் எனக்கொரு இந்திப் படம் வருகிறது. ஆகையால் தேதிகளில் கொஞ்சம் மாற்றம் வேண்டும் என்றார். ’பண்ணமுடியாதும்மா.. ஏனென்றால் கஜகஸ்தானில் படப்பிடிப்பு. இடையே ஒரு நாள் படப்பிடிப்பு இல்லாவிட்டாலும், நீங்கள் போய்விட்டு வரமுடியாதும்மா’ என்றோம். 10 நாள் தான் தரமுடியும். 7 நாள் தான் தரமுடியும் எனத் தகராறு பண்ணத் தொடங்கினார். ஒப்பந்தம் போட்டுள்ளோம். அதில் எத்தனை நாட்கள் படப்பிடிப்பு, பிப்ரவரி 2020 வரைக்கு நம் படத்தின் படப்பிடிப்பு போகிறது எனப் போட்டுள்ளோம், தேதிகள் கேட்கும் போது கொடுக்க வேண்டும் எனச் சொல்லியுள்ளோம். இது தொடர்பான வாட்ஸ்-அப் உரையாடல் என அனைத்துமே இருக்கிறதே, உன் மேலாளர் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளார், எப்படி மாட்டேன் எனச் சொல்லலாம் என்று கேட்டோம்.
ஹைதராபாத்தில் அந்தப் பெண்ணை நேரிலும் சந்தித்துப் பேசினோம். ’நான் இந்தியில் நடிக்கத் தான் வந்துள்ளேன். எனக்குத் தென்னிந்தியப் படங்களைப் பற்றி பிரச்சினையில்லை. ரன்பீர் கபூர் படம் கிடைத்த பிறகு, எதுவானாலும் செய்துவிடுவேன். யாஷ்ராஜ் நிறுவனத்தில் படம் பண்ணுகிறேன். இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். நீங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் வரமாட்டேன்’ என்று ஷாலினி பாண்டே சொன்னார். காத்திருந்தால் 6 மாதம் கழித்து வருகிறேன். இந்திப் படத்துக்கு 6 மாதம் ஒப்பந்தம் போட்டுவிட்டேன் என்று தெரிவித்தார்.அதற்குப் பிறகு ஷாலினி பாண்டே லைனிலேயே வரவில்லை. அவரது வக்கீல் ஒருவர் பேசினார். தெலுங்கு மேலாளர் ஒருவர் பயங்கரமாகச் சதி பண்ணுகிறார். ஆனால், இரண்டு நாயகர்கள் தேதிகளை வாங்கிவிட்டோம். 6 மாதம் காத்திருக்க வேண்டும் என்றால், இவர்களது தேதிகள் வீணாகிவிடும். ஆகையால், இயக்குநரிடம் பேசி மீண்டும் ரீ-ஷுட் பண்ண வேண்டும் என்றால் குறைத்துப் பண்ணுவோம் என மனதைத் தேற்றிக் கொண்டேன்.
அக்ஷரா ஹாசனை நாயகியாக வைத்து 45 நாட்கள் படப்பிடிப்பை முடித்துத் திரும்பிவிட்டோம். இதில் என்ன வேடிக்கை என்றால், அக்ஷரா ஹாசனை மனதில் வைத்துத்தான் இந்தக் கதையை இயக்குநர் நவீன் எழுதியிருக்கிறார். ‘ஷமிதாப்’ படத்தில் அக்ஷரா ஹாசனிடம் இந்தக் கதையைச் சொல்லும் பொழுது, இவ்வளவு வலுவான கதாபாத்திரத்தை இப்போதே பண்ண வேண்டுமா.. நான் கொஞ்சம் க்ளாமரா பண்ணுகிறேனே என்று கொஞ்சம் யோசித்திருக்கிறார். இப்போது மீண்டும் பேசும் போது, உடனே பண்ணுகிறேன் என நடித்துள்ளார்.
ஷாலினி பாண்டேவால் கூட படப்பிடிப்பில் எந்தவொரு பிரச்சினையுமில்லை. ரன்பீர் கபூர் படம் கிடைத்தவுடன் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எனச் சென்றுவிட்டார். இப்போது தமிழ்நாடு, ஆந்திரா, மும்பை என அனைத்து நடிகர் சங்கங்களிலும் புகார் அளித்துள்ளேன். நீதிமன்றத்தில் மோசடி வழக்கு ஒன்று தொடர்ந்து, ஷாலினி பாண்டேவுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. எங்களுடைய நோக்கம் அவரை அசிங்கப்படுத்துவது கிடையாது.
அவரை வைத்து ஷுட் பண்ணிய பணம் எனக்குத் திரும்ப வரவேண்டும். அவர் அளிக்க வேண்டும். வேண்டாம் என்று சென்றுவிட்ட போது, அதற்கான விலையை அவர் அளிக்கட்டுமே என்ற எண்ணம் தான். அளவுக்கு மீறிய பணம் கேட்கும் எண்ணமெல்லாம் இல்லை. 27 நாள் ஷுட்டிங்கிற்கான பணம் எவ்வளவோ, அதைக் கொடுத்தால் முடித்துக் கொள்ளலாம் என்று தான் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். கொஞ்சம் வலுவாக இருக்க வேண்டும் என்பதாலேயே நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளேன்.
இவ்வாறு தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்துள்ளார்.