தனது டுபாக்கூர்த்தனமான பேச்சுக்களால் நாளுக்கு நாள் அம்பலமாகி வரும் டகால்டி சாமியார் நித்யானந்தாவின் ‘கைலாஷா’ தீவு அறிவிப்பை நம்பி யாரும் மோசம் போகவேண்டாம் என்று ஈக்வெடார் நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மோசடி ஆசாமியார் நித்யானந்தா, பெங்களூரில் உள்ள பிடதியை தலைமையிடமாகக் கொண்டு ஆசிரமங்களை நடத்தி வந்தார். உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் இயங்கியது.
பரபரப்புகளுக்கு பெயர் போன நித்யானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் தனது மகள்கள் மாயமாகி விட்டதாக பெற்றோர் புகாரளிக்க, மீண்டும் அவர் சர்ச்சையில் அடிபட்டார்.இந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தா தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதையும் சில கூமுட்டைகள் நம்பவே செய்தன.
கைலாசா என்ற இணையதளத்தில் நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை இடம் பெற்றிருந்தன. கூடவே தினமும் வீடியோ மூலமாக ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்திக்கொண்டே இருந்தார் நித்யானந்தா.அப்பேச்சுகளில் எங்கள மாதிரி சாமியார்களுக்கு வெட்கம்,மானம் ரோஷம்லாம் இருக்காது இருக்கவும் கூடாது என்ற வடிவேல் பாணி காமெடியும் அடக்கம்.
இந்த நிலையில், சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஈக்வேடார் நாட்டின் தூதரக அதிகாரி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “நித்யானந்தா தஞ்சம் கோரி ஈக்வேடார் அரசிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், அரசு மறுக்கவே அவர் ஹைதிக்கு சென்று விட்டார்.கைலாசா என்ற ஒருநாடு ஈக்வேடார் நாட்டில் இல்லை. நித்யானந்தா ஈக்வேடாரில் இருக்கிறார் என்ற தகவலும் உண்மையில்லை” என்று அவர் கூறியுள்ளார். ஆக நித்யானந்தா நித்தம் நித்தம் ஒரு ஜாகையை மாற்றிக்கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பது தெளிவாகிறது.