சினிமா பிளாட்பாரம் என்கிற நிறுவனம் சார்பாக வி.டி .ரித்திஷ் குமார் தயாரித்திருக்கிற படம் “நான் அவளை சந்தித்தபோது”.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப்பில் நடந்தது.சந்தோஷ் பிரதாப் நாயகன்,சாந்தினி நாயகியாக நடித்திருக்கிற படம். இயக்குநர் எல்.ஜி.ரவீந்தரின் சொந்த காதல் கதை.
தற்போது கோடம்பாக்கத்தின் நிலைய வித்துவான்களாக பாக்யராஜ், பேரரசு, கே ,ராஜன் ஆகியோர்தான் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். எதையாவது பேசி தலைப்பு செய்தி ஆகி விடுகிறார்கள்.இந்த விழாவிலும் தலைப்பு செய்தியாக மாறியவர்கள் பாக்யராஜ் அன்ட் பேரரசு.
பாக்யராஜ் பேசியதாவது :“ஊசி நூல் பிரச்னையை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் பெண்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்திருப்பவன். அவர்களை இழிவாக பேசியதுமில்லை ,எனது படங்களில் சித்தரித்ததும் இல்லை.
ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார். ஆண்களும் பெண்களும் பெருந்திரளாக கூடி இருந்தார்கள்.கூட்டம் முடிகிற நிலையில் “தயவு செய்து பெண்கள் எல்லோரும் போய் விடுங்கள். ஆண்களுக்கு தனியாக நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் “என்று கேட்டுக் கொண்டதும் எல்லாப் பெண்களும் எழுந்து போய் விட்டார்கள். நமக்காக தலைவர் என்ன சொல்லப்போகிறார் என்கிற ஆர்வத்தில் ஆண்கள் அப்படியே உட்கார்ந்திருந்தார்கள்.
“நான் முதலில் பெண்களை போகச்சொன்னது ஒரு காரணமாகத்தான். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் ஒரே நேரத்தில் எழுந்து போனால் பெண்களுக்கு கஷ்டமாகி விடும் .அவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமல்லவா! அதற்காகத்தான் சொன்னேன்” என்று காரணத்தைச் சொன்னார். அப்படி சொன்னதால் ஆண்களின் மீது நம்பிக்கை இல்லை என்றாகி விடுமா? அத்தகைய தலைவர் என்னை எப்படி தனது கலை உலக வாரிசு என்பதாக அறிவித்திருப்பார்?” என்று பேசியவர் அவர் எழுதியிருந்த ஒரு கதையை சொன்னார்.
“கல்யாணம் ஆன புதுசு. கணவனை சேலத்துக்கு வழி அனுப்பி வைக்கிறாள். திரும்பி வீட்டுக்கு போகிற வழியில் அவளை மூணு பேர் சேர்ந்து கெடுத்து விடுகிறார்கள். அவளை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கிறார்கள். கணவன் சேலத்தில் இறங்கியதும் அவனுக்கு செய்தி கிடைக்கிறது. பதறிப் போய் ஊருக்கு திரும்புகிறான். ஆஸ்பத்திரிக்கு சென்று மனைவியைப் பார்த்து விட்டு திரும்பியவனிடம் ஆளுக்காள் விசாரிக்கிறார்கள்.
அவனோ அமைதியாக “மூணு வெறி நாய் கடிச்சிடுச்சி.ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கா” என பதில் சொன்னான்.இப்படி எழுதினவன் பெண்களை இழிவாகப் பேசுவேனா?எனக்கு பெண்களிடம் நல்ல பெயர் இருக்கிறது.ஆகையால் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்பதாக பாக்யராஜ் பேசினார்.