சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவரும் ரஜினியின் ‘பேட்ட’பட வில்லனுமான நவாசுதின் சித்திக்கின் 25 வயதே ஆன தங்கை மார்பக புற்று நோயால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் புதானா என்ற கிராமத்தில் சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் நவாசுதீன் சித்திக். அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட்டில் தவிர்க்க முடியாத கலைஞனாக மாறியுள்ளார். தமிழில் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது இவரது சகோதரி ஷியாமா சித்திக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். ஷியாமா 18 வயதில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 8 ஆண்டுகளாக அந்தக் கொடிய நோயுடன் போராடி வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருந்த நவாசுதீன் சித்திக் சகோதரியின் மரணச் செய்தியை அறிந்து இந்தியா திரும்பியுள்ளார். இன்று அவரது சொந்த ஊரான உத்தரபிரதேசம் புதானாவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தனது சகோதரி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நவாசுதீன் தெரிவித்திருந்ததார். ஷியாமா குணமடைந்து விடுவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது மரணம் குடும்ப உறுப்பினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.